Monday, January 16, 2012

சேகுவேரா என்ற மனிதாபிமானி

'இலட்சக்கணக்கான பக்கங்களில், ஆயிரம் வருடங்கள் வேண்டுமானாலும் சேகுவாராவை எழுதிக் கொண்டிருக்கலாம்' என்கிறார் எழுத்தாளர் காப்ரியில் கார்சியா மார்கோஸ். மேலும் மேலும் அறிய வேண்டிய எதோ ஒன்றை அவரது மரணம் சொல்லிக்கொண்டிருக்கிறது. காட்டுப்பூச்சிகள் கடித்து உடலெல்லாம் வீங்கிப் போகிறது. பசிக்கு வேறு வழியின்றி குதிரை மாமிசம் சாப்பிட்டு வயிற்று வலியில் அவதிப்படுகிறார். மழையும் வெயிலுமாய் உயர்ந்து கிடக்கிற மலைவெளிகளில் ஆஸ்த்துமாவோடு மூச்சிறைக்க நடக்கிறார். அதற்கு முன்பு கியூபாவின் அமைச்சராக, விமானங்களில் பறந்து உலகத் தலைவர்களோடு கைகுலுக்கி பேசிக் கொண்டிருந்தவர் அவர். தன் குழந்தைகளை கொஞ்சி ஆரத்தழுவிக் கொண்டவர் அவர். எல்லாவற்றையும் ஒருநாள் விலக்கிவிட்டு மீண்டும் காடுகளை நோக்கி துப்பாக்கியோடு செல்கிறார். எல்லோருக்குமான ஒரு கனவு உலகத்தை படைக்க வேண்டும் என்னும் தணியாத பேராசையின் பயணம். ஏகாதிபத்தியத்தை எதிர்த்த வேட்டை. தவம் போலச் செய்கிறார். தன்னை முன்னிறுத்தி, தன்னையே பலியாக்கி வெளிச்சத்தைக் காட்டுகிற வேள்விதான் அது. கடைசி வரைக்கும் அவரது கண்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன. மார்கோஸ் அதைப் பார்த்திருக்க வேண்டும்.
புரட்சிகர வாழ்க்கை என்பது பல சிரமங்கள் நிறைந்தது. அவ்வாழ்க்கையில் ஈடுபடுவோரின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. ஆனால் அத்தகைய புரட்சியாளர்களிலும் ஒருபடி மேலே சென்று நன்கு அறிந்தே தனது உயிரை அர்ப்பணித்தவர்தான் சேகுவேரா. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அவற்றைத் தூக்கி எறிந்து விட்டு தனது இன்னுயிரைப் பொருட்படுத்தாது தனது முடிவை நோக்கிய பயணத்தை ஒரு லட்சியத்திற்காக மிக வேகமாக தொடங்கியவர அவர்;;.
சேகுவேரா, பொலிவியா செல்லும் திட்டத்தை தெரிவித்த போது பிடல் காஸ்ட்ரோ தனது தயக்கத்தை வெளிப்படுத்தினார். 'உங்களைப் பொறுத்த வரையில் கியூபா விடுதலையை சாதிப்பது என்ற உங்களது எண்ணம் நிறைவேறிவிட்டது. இனி அந்த நாட்டை புனரமைக்கும் மாபெரும் பணி உங்கள் முன் உள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரை என் கடமை முடிந்துவிட்டதாக நான் எண்ணவில்லை. எனவே நான் பொலிவியா செல்கிறேன்' என்று ஒரு கடிதம் மூலம் பிடல் காஸ்ட்ரோவிடம் சே தெரிவித்த போது 'பொலிவியாவின் சமூக மாற்றம் ஏற்படுவதற்கான புறச்சூழ்நிலைகள் கனிந்துள்ளனவா?' என்று பிடல் காஸ்ட்ரோ கேட்டார். 'அவ்வாறு காலம் கனியும் என்று காத்திருந்தால் 50 ஆண்டுகளானால்கூட அது கனியாது' என பிடலிடம் கூறிவிட்டுச் சென்றார் சே. சேகுவேராவைப் பொறுத்தவரை அத்தனை அவசரமாக பொலிவியாவிற்கு சென்று அத்தனை பெரிய இடரை எதிர்கொண்டிருக்க வேண்டியதேயில்லை. என்றாலும் தெரிந்தே தனது உயிரைப் பணயமாகக் கேட்கும் ஒரு லட்சியத்தை நோக்கி திடசங்கற்பத்துடன் அவர் புறப்பட்டார்;.
மரணத்தையே துச்சமெனக் கருதும் இத்தகைய மனப்பான்மையால் சே உலகெங்கிலும் உள்ள இளம் புரட்சியாளர்களின் லட்சிய முன்னோடியாக விளங்குகிறார்;. சாதாரண மனிதர்களைப் பொறுத்த வரையில் இந்த குணம் நினைத்துப் பார்க்கவும் முடியாதது. புரட்சியாளர்களைப் பொறுத்தவரையிலும் கூட இது ஒரு அருங்குணமே. லட்சியத்துடன் ஒருவர் தன்னை முழுமையாக இணைத்துக் கொள்ளும்போதே இத்தகைய அருங்குணங்கள் உருவாகின்றன. அதைப் புரிந்து கொள்ள முடியாத பல சாதாரண மனிதர்கள் அதனை பைத்தியக்காரத்தனம் என்று கூறுகின்றனர். அதற்கு சே அளித்த பதில் மிகவும் சுவையானது. 'இத்தகைய பைத்தியக்காரத்தனங்களை ஓரளவு கொண்டிருப்பது நல்லதே' என்று அவர் கூறினார்.
சே குவேராவை தங்களது ஆதர்ச சக்தியாக ஏற்றுக் கொண்டவர்களாக பல அதிதீவிர கம்யூனிஸ்ட் குழுக்களைச் சேர்ந்தவர்கள் காட்டிக் கொள்கின்றனர். அவர்களிடம் நாம் காணும் பல குணங்களைப் பார்த்து இவர்கள் இப்படி என்றால் இவர்களின் முன்னோடியான சேகுவேராவும் இவ்வாறுதான் இருந்திருப்பார் என்பது போன்ற பல எண்ணப் போக்குகளை உருவாக்கிக் கொள்கிறோம். எடுத்துக்காட்டாக எதையுமே வெளிப்படையாகக் கூறாத தன்மைகள் அதாவது ஒருவரை, ஒரு வேலையில் அதைப் பற்றி எதையும் கூறாது இறக்கி விட்டுவிட்டு, அவர் அதில் சிக்கிக் கொண்டபின் அதை வைத்தே அதிலிருந்து மீளமுடியாதவராக அவரை ஆக்கி அவரை தங்களின் அணியில் நிரந்தரமாகச் சேர்த்துக் கொள்ளும் ஒரு வழிமுறையை அதீத கம்யூனிஸ்ட் குழுக்கள் என்று அறியப்படும் பல குழுக்களிடம் பல சமயங்களில் பார்க்க முடிகிறது.
ஆனால் உண்மையில் சே-யும், அவரது குழுவினரும் அப்படிப்பட்டவர்களா? என்று வரலாற்று ஆதாரங்களை வைத்து பார்த்தால் நாம் ஏமாந்து போவோம். அதாவது கியூபா புரட்சி ஆரம்பித்த அந்த வேளைகளில் புரட்சிப் படையினரை ஒன்றாக நிறுத்தி அவர்களிடம் சே-யும் பிடலும் முழங்குகிறார்கள்; அதாவது நாம் பயணிக்கப் போகும் பாதை பல இடர்பாடுகளைக் கொண்டது. இதில் நாங்களும் உங்களில் பலரும் கூட உயிரிழக்க நேரலாம். எனவே உயிர்ப்பயம் உள்ளவர்கள் யாரேனும் இங்கு இருந்தால் முதலில் வெளியே வந்துவிடுங்கள். அவர்களுக்கு அரைமணிநேரம் அவகாசம் தருகிறோம்- இவ்விடத்தைவிட்டு ஓடிவிடுவதற்கு என்று தெளிவாகக் கூறிய பிறகே தங்களது புரட்சிப் பயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். அது மட்டுமின்றி தங்களைத் தங்களது படையில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்ட இரண்டு 18 வயது நிரம்பாத சிறுவர்களை சே படையில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டதால் தங்களைச் சேர்த்துக் கொள்ளாவிடில் தாங்கள் அவ்விடத்தைவிட்டு நகரப்போவதில்லை என அவர்கள் சத்தியாக்கிரகம் செய்தபின்னரே அவர்களை சே சேர்த்துக் கொண்டார். இன்று விடுதலைப் படை என்று அழைக்கப்படும் பல படைகளில் சிறுவர்களைக் கட்டாயப்படுத்திச் சேர்ப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சே கடைபிடித்த மரபு எத்தனை உயர்வாக நிமிர்ந்து நிற்கிறது?
இந்தியா போன்ற பல தேசிய இனங்களைக் கொண்ட பெரிய நாடுகளைப் போல் இல்லாது பல லத்தீன் அமெரிக்க நாடுகள் பரப்பளவில் சிறியவையாகவும் ஆரம்பம் முதற்கொண்டு ஏதாவதொரு ஏகாதிபத்தியத்தின் பிடியிலும் அல்லது அவற்றின் பொம்மை அரசுகளின் பிடியிலும் இருந்தவையே. அவற்றில் ஆட்சி மாற்றங்கள் பல சமயங்களில் ராணுவச் சதிகள் மூலமாகவே நடந்தன. எனவே அந்த ஆட்சியாளர்கள் மக்களின் நன்மதிப்பை சிறிது கூடப் பெற்றவர்களாக இருக்கவில்லை.
அவர்கள் தங்களின் ஆயுத வலிமையினால் மக்களை அச்சுறுத்தி ஆட்சி செய்தார்களே தவிர அவர்களை ஜனநாயகம் போன்ற பெயர்களில் ஏமாற்றி ஆட்சிபுரியவில்லை. எனவே மக்களின் மனநிலை எப்போதுமே பெரும்பாலும் அவர்களின் ஆட்சியாளர்களுக்கு எதிராகவே இருந்தது. அந்த ஆட்சியாளர்களை எதிர்ப்பதற்கும் தேர்தல் முறை போன்ற வழிமுறைகள் அங்கு பல காலம் அமுலில் இல்லை. அந்தச் சூழ்நிலையில் மக்களின் வெறுப்பின் காரணமாக அவ்வரசுகளை ஆயுதம் தாங்கிய கிளர்ச்சிகள் மூலம் எதிர்கொள்ளத் தயாராக இருந்தவர்கள் அனைவருக்கும் மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு கிடைத்தது.
அதனால்தான் 82 பேர் கொண்ட பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான ஒரு குழு மெக்சிக்கோவிலிருந்து ஒரு படகில் புறப்பட்டு கியூபாவை சென்றடையும் போது அதில் உயிருடன் இருந்த 12 பேரைக் கொண்டு ஒரு மிகப் பெரிய ஆயுதம் தாங்கியப் புரட்சியை நடத்த முடிந்தது. அதன் விளைவாக பிடல் காஸ்ட்ரோவால் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடிந்தது. அவர்கள் கியூபாவிற்குப் புறப்படுகையில் அவர்களுக்கு நம்பிக்கையூட்டக் கூடியதாக இருந்தது. கியூபாவின் பின் தங்கிய பொருளாதார சமூக சூழ்நிலைகள்தான். அதாவது அங்கு 1.5மூமானோர்  40மூ நிலங்களைத் தங்கள் கைவசம் வைத்திருந்தனர். 20மூ மானோருக்கு வேலையில்லை, 37மூமானோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்தனர். வர்த்தக ரீதியாக அமெரிக்காவிற்குச் செலுத்த வேண்டிய கடன் அந்நாட்டிற்கு மிகமிக அதிகம் இருந்தது.
சேகுவேராவின் பொலிவிய சோதனையும் இந்தப் பின்னணியிலேயே செய்யப்பட்டது. மக்களின் பின்தங்கிய, கல்வியறிவு அற்ற, மருத்துவ வசதிகள் போன்றவை அறவே இல்லாத நிலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து மக்கள் எழுச்சியை உருவாக்க முடியும் என்று சே நம்பினார். லத்தீன் அமெரிக்க நாடுகளின் அக்காலகட்ட நிலை எவ்வாறு இருந்தது என்பதற்கு ஒரு பொருத்தமான உதாரணம், சே மருத்துவப் பட்டம் பெற்ற ஒரு டாக்டர் என்பதால் அவர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது படை தங்கியிருந்த இடங்களில் சாதாரண மக்களுக்கு வைத்தியம் செய்தார். அவ்வாறு அவரிடம் வைத்தியம் செய்ய வந்த ஒரு பெண் அவரிடம் எனக்கு வியாதி ஒன்றும் இல்லை ஆனால் நான் இதுவரை டாக்டர் எவரையும் பார்த்ததில்லை, டாக்டர் எப்படி இருப்பார் என பார்ப்பதற்கே வந்தேன் என்று கூறினாராம்.
இவ்வாறு மக்கள் இருந்த பின்தங்கிய நிலையை மட்டுமல்ல பொலிவிய நாட்டின் வடக்குப் பகுதியில் செப்புச் சுரங்கங்களில் நடந்து கொண்டிருந்த வேலை நிறுத்தத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் சே தனது புரட்சிப் பயணத்தைத் தொடங்கினார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் ஒவ்வொருவரின் ஊதியத்திலிருந்தும் 50 பொலிவியானோ என்று கூறப்படும் அந்நாட்டு ரூபாய்களை புரட்சியாளர்களுக்கு நிதியாக வழங்க முன்வந்தனர். இவ்வாறு சேகுவேராவின் பொலிவிய நாடு, அதன் சமூகம் அதில் இருக்கக் கூடிய முரண்பாடுகள் ஆகியவை குறித்த அவரது கணிப்பு மேலோட்டமாகவும் பொதுவிலும் சரியாகவே இருந்தது.
லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கே உரிய அவற்றின் ஏகாதிபத்திய பொம்மையாட்சியாளர்களை ஆயுதந்தாங்கி எதிர்கொண்டால் மக்கள் ஆதரவு தானே வரும் என்று அவர் நம்பினார். அந்த நம்பிக்கைக்கு உகந்த விதத்தில் பொலிவிய மக்களின் மனநிலை இல்லை. கியூபாவின் மக்களைப் போல் அல்லாது அவர்களிடம் அரசு குறித்த அச்ச உணர்வு மேலோங்கி இருந்தது. புரட்சியாளர்கள் மீதான நம்பிக்கை குறைவாக இருந்தது. அந்த ஒரு அம்சத்தைத் தவிர வேறு அனைத்து சூழ்நிலைகளையும் கணிப்பதில் சே சரியாகவே இருந்தார். ஆனால் பல நாடுகளில் அவரது வழியில் செல்வதாகக் காட்டிக் கொள்ளக் கூடியவர்கள் அனைத்துக் கணிப்புகளிலுமே தவறு செய்தவர்களாகவே உள்ளனர்.
கம்யூனிஸ்டுகளிடம் மனிதாபிமானமே இராது - இது முதலாளித்துவ பிரச்சாரகர்கள் மீண்டும் மீண்டும் கூறி நிலைநாட்டியுள்ள கண்ணோட்டம். ஆனால் மார்க்ஸ் 'தற்போது நிலவும் மனிதாபிமான கண்ணோட்டத்தில் இருந்து தனிச் சொத்துடைமை என்ற களங்கத்தை நீக்கிவிட்டால் அதன் பின் வரும் உன்னதமான மனிதாபிமானமே கம்யூனிசம்' என்றுகூறினார். சே எத்தனை உயர்ந்த மனிதாபிமானியாக இருந்தார் என்றால் அவர் தங்களின் ராணுவத்திற்கான உணவுப் பொருட்களை மக்களிடமிருந்து பெறும்போது கூட அவற்றிற்கான விலை என்ன என்பதை அவர்களிடம் கேட்டு எந்த வற்புறுத்தலுமின்றி விலையைக் கொடுத்து அவர்களிடமிருந்து வாங்கினார். புரட்சியாளர்கள் குறித்து எழுதுவதற்காக அங்கு வந்து சிக்கிக் கொண்ட டி ப்ரே போன்ற எழுத்தாளர்களை அந்நிலையில் அவர்கள் இருந்த சிக்கலான பொலிவியப் பகுதியிலிருந்து பத்திரமாக அனுப்புவது மிக மிக சிரமமானது என்றிருந்த நிலையிலும் அவர்களை அனுப்ப பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டார்.  சே பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று ஜான்பால் சாத்தர் போன்ற எழுத்தாளர்களிடமும் பிரிட்டன் சென்று பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் போன்ற பகுத்தறிவுவாதிகளிடமும் புரட்சியாளர்களுக்கு ஆதரவான அறிக்கைகள் விடவும் பணம் திரட்டி தரவும் கேட்டுக் கொள்ளுமாறு அவர்களிடம் வேண்டிக்கொண்டார்.
தங்கள் ராணுவத்தில் உள்ளோர் சாதாரண அப்பாவி மக்களைத் துன்புறுத்தும், பெண்களை மானபங்கம் செய்யும் செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு கர்ணகடூரமான தண்டனைகளையே வழங்கினார். அதாவது அவர்களை ஈவிரக்கமின்றி சுட்டுத் தள்ளினார். அத்தகைய உயர்ந்த கலாசாரத்தையும் ஒழுக்க நெறிமுறையையும் அவர் கொண்டிருந்ததற்குக் காரணம் அவர் ஒரு உயர்ந்த சித்தாந்தத்தை தன்வசம் கொண்டிருந்ததும் அதன் அடிப்படையில் அவர் வாழ்ந்த சமூகத்தை கணிக்க முடிந்ததுமே ஆகும்.
இன்று விடுதலைப் போராளி குழுக்கள் என்று அழைக்கப்படும் குழுக்களிலும் கம்யூனிஸ்ட் அதிதீவிரக் குழுக்கள் என்று அறியப்படும் குழுக்களிலும் அக்குழுக்கள் அவர்கள் எந்த நாட்டை எப்படிப்பட்ட ஆட்சியை நிலைநிறுத்த விரும்புகிறார்களோ அவை சார்ந்த நடவடிக்கைகள் ஒரு உயரிய சித்தாந்தத்தின் வழி காட்டுதலை அடிப்படையாகக் கொண்டு சூழ்நிலைகளை சரியாக கணித்து நடத்தப்படாமல் இருக்கின்றன. அதனால் அந்நடவடிக்கைகளின் போது வழக்கமாக ஆங்காங்கே நிகழும் ஒரு சில மிக மிகக் குறைந்த அளவிலான அத்துமீறல்களோடு நிற்காமல் பல அசாதாரண அத்து மீறல்களும் நடந்துவிடுகின்றன.
அவற்றை அவர்கள் நியாயப்படுத்துவதற்குக் கூறும் ஒரே கருத்து 'வழிமுறைகளின் கோளாறுகளை போராட்டத்தின் நோக்கமும் இலக்கும் நியாயப்படுத்தும்' என்பதாகும். சே-யின் புரட்சிகர வரலாற்றில் இது போன்ற சால்சாப்புகளைக் கூற வேண்டிய அவசியமே நேரவில்லை. ஏனெனில் நாம் ஏற்கனவே பார்த்தது போல் அவரிடம் சித்தாந்தப் புரிதல், அதனை அமுலாக்குவதில் உறுதித் தன்மை, புறச் சூழ்நிலைகளைப் பொதுவாகச் சரியாகக் கணிக்கும் போக்கு, இவை எல்லாவற்றிற்கும் மேலாக சித்தாந்தம் கற்பித்த உயர்ந்த ஒழுக்க நெறி அனைத்தும் இருந்தது.
அந்த உயர்ந்த ஒழுக்க நெறிமுறை மக்களுக்காக உயிரைக் கொடுக்கும் மகத்தான தியாக உணர்வினை அவரிடம் உருவாக்கியிருந்தது. அவர் ஒரு குட்டி முதலாளித்துவ குணங்களை அதிகம் கொண்ட மத்தியதர வர்க்கத்திலிருந்து வந்தவராக இருந்த போதிலும் அவரால் தன்னை உழைக்கும் வர்க்கக் கலாசாரத்தை மனமுவந்து கைக்கொள்பவராக ஆக்கிக்கொள்ள முடிந்தது. குட்டி முதலாளித்துவ அவசரத் தன்மையும், பல இடங்களில் தங்களது தனிப்பட்ட சிந்தனைக்குகந்த விதத்தில் புறச்சூழலைத் திரித்துப் பார்க்கும் போக்கும் அவரிடம் இல்லை. எனவே அவர் உண்மையான புரட்சியாளனாக இருந்தார். அதாவது மனித குலத்தின் மீதான நேசமே அவரைப் புரட்சிப் பாதைக்கு இட்டுச் சென்றது. யார் மீதான எந்தவகை வெறுப்பும் அவரை அப்பாதைக்கு இட்டுச் செல்லவில்லை.
மார்க்ஸ் இறந்த வேளையில் எங்கெல்ஸ் கூறினார்; சிந்தாந்த ரீதியில் மார்க்சுக்கு பல பகைவர்கள் இருந்தனர். ஆனால் தனி மனித ரீதியில் பகைவர் என்று எவருமே அவருக்கு இல்லை. எனவே அவர் வழியில் வந்த சே யும் பெரும்பாலான சமயங்களில் மலரினும் மென்மையான மனிதாபிமான மனநிலை கொண்டவராக இருந்தார். அவரைக் காட்டிக் கொடுத்தவர்களைக்கூட அவர் வெறுக்கவில்லை. அவரது சிறைக்காவலர்கள் மனதிலும் ஒரு செல்வாக்கைச் செலுத்தினார். அவர் தனது கைவிலங்குகளைக் கழட்டிவிட முடியுமா என்று கேட்ட போது முடியாது என்று அவர் முகத்தைப் பார்த்து அந்த சிறைக் காவலரால் சொல்ல முடியவில்லை. அதே சமயத்தில் மக்கள் விரோதிகளை அவர்கள் தங்கள் அணியில் இருந்தவர்களாகவே இருந்த போதும் அவர்களை மன்னிக்காத மன உறுதி கொண்டவராக இருந்தார். அந்த மலரை ஒத்த இதயத்தின் மறுபக்கத்தில் உருக்கின் உறுதியும் இருந்தது. அதனால்தான் உலக அளவில் உழைக்கும் வர்க்கப் புரட்சியாளர்களின் இதயத்தில் உணர்வாக, உத்வேகமாக, உந்து சக்தியாக, ஒரு அழகுணர்வாக அவர் வாழ்கிறார்.
அவரைப் பொறுத்தவரை பொலிவிய ஆட்சியாளர்களும் அத்தனை கொடூரமானவர்களாக இருந்தனர். விசாரணை போன்ற நாடகங்களை நடத்துவதற்கு முன்னரே சே-யை கொல்வது என்ற முடிவிற்கு அவர்கள் வந்துவிட்டனர். அப்போது அவருக்கு வயது 39. அவர்களில் மிக முக்கிய இராணுவ தளபதி ஒருவன் கூறினான்: கியூபாவில் பாடிஸ்டா செய்த மாபெரும் தவறே அவர் பிடியில் சிக்கிய பிடலை கொல்லாமல் விட்டதுதான் என்று.
கடந்த ஆண்டு வெளிவந்து கேன்ஸ் திரைப்பட விருதுகளில் ஒன்றினைப் பெற்ற சே குறித்த திரைப்படம் சே-யின் வாழ்க்கையினையும் அவர் குறித்த பல சரியான புரிதல்களையும் மேலே பார்த்த விதத்தில் முன் வைக்கிறது. அத்துடன் லத்தீன் அமெரிக்க நாடுகளின் ஆளும் வர்க்கம், அங்கு செயல்பட்ட புரட்சியாளர்களின் நடைமுறை, மக்களுக்கும் அரசிற்கும் இருந்த உறவு - மக்களுக்கும் புரட்சியாளர்களுக்கும் இருந்த உறவு, அவற்றின் தன்மைகள் போன்றவற்றையும் தெளிவாக சித்தரிக்கிறது. அந்த வகையில் அது ஒரு திரைப்படம் மட்டுமல்ல அது ஒரு உண்மைப் புரட்சியாளன் குறித்த ஆவணமும் ஆகும்.