Monday, November 20, 2023

 ராஜபக்ஷக்களின் சிவில் உரிமை பறிக்கப்படுமா?





1977இல் பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்த JR. ஜெயவர்தன  முன்னைய ஆட்சியின்போது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி சிரிமாவோ பண்டாரநாயக்க, பீலிக்ஸ் டயஸ், AHM. பவுஸி உள்ளிட்ட பலரது சிவில் உரிமைகளைப் பறித்து அவர்களை செல்லாக் காசாக்கியதை யாரும் இலகுவில் மறந்திருக்க முடியாது. 


ஆனால் ஜேஆரினது அளவிட முடியாத அதிகார துஷ்பிரயோகம், அரச பயங்கரவாதம் என்பன பற்றி யாரும்  பேசவே அஞ்சும் அளவுக்கு அவரது அதிகார பலம் பன்மடங்கு மேலோங்கி இருந்தது என்பது வேறு கதை.


இன்று அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் நாட்டின் இன்றைய பொருளாதாரம் அதல பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளமைக்கான மூல காரணம் ராஜபக்ஷ சகோதர்களினதும் அவர்களது சகாக்களினதும் நிர்வாக சீர்கேடுகளே என இலங்கையின் அதிஉயர் நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது. அதேநேரம் அவர்கள் தொடர்பான சட்டவிரோத சொத்துக் குவிப்பு, ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் என்பன பற்றிய குற்றச்சாட்டுகளும்  வழக்குகளும் வாதப்பிரதிவாதங்களும் இன்றுவரை அனைவரதும் பேசுபொருளாக உள்ளமை நாடறிந்த உண்மையாகும்.


கேள்வி என்வென்றால்,  அவர்களது தயவில் பதவியில் அமர்ந்த ரணில் விக்கிரமசிங்க மாமனாரின் வழியைப் பின்பற்றி சிரிமாவோ அம்மையாருக்கும் அவரது சகாக்களுக்கும் வழங்கிய அதே தண்டனையை வழங்குவாரா அல்லது தொடர்ந்தும் அவர்களது ஆபத்பாந்தவனாக அவர்களது குற்றச் செயல்களை மறைத்து அவர்களைப் பாதுகாக்க முற்படுவாரா என்பதே! அதேநேரம் ரணில் தமது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு ஆயுதமாகவே இந்த நீதிமன்றத் தீர்ப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.


ஒரு நாடு குறிப்பாக பல்லின சனத்தொகையுள்ள ஒரு நாடு சட்டத்தின் ஆட்சியிலேயே ஆளப்படவேண்டுமே  தவிர தனிமனிதனால் அல்ல என்பதைக் கடந்தகால ஆட்சியாளர்கள் மூலம் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே மக்கள் எதிர்பார்ப்பது, குறைந்தபட்சம்  ராஜபகஷக்கள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான சொத்துக்களையாவது  மீட்டு அதன் மூலம் நலிவடைந்துள்ள தமது வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்! ஆனால் ரணிலிடமிருந்து இவற்றை எதிர்பார்க்க முடியாது என்பதையே அவரது தற்போதைய நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.


எவ்வாறாயினும் அடுத்த தேர்தலை மனதிற்கொண்டாவது இந்த நீதிமன்றத் தீர்ப்பினைப் பயன்படுத்தி ராஜபக்ஷக்களின் அடாவடித்தனங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவாரா அல்லது வழமைபோல இந்த முறையும் தோல்வியைத் தேடிக்கொள்வாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

Tuesday, July 18, 2023


அநுர குமார அரசகட்டில் ஏறுவாரா?



இப்போதெல்லாம் அனேகமானோர் பொருளாதாரத்தில் அதலபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ள நம் நாட்டை மீட்டெடுத்து கட்டியெழுப்பக்கூடிய வலிமை ஜே.வீ.பி. தலைமையிலான தேசிய மக்கள்  சக்திக்குத்தான் உண்டு எனக் கருதுவதாகத் தெரிகிறது. இதேபோன்றுதான் கடந்த தேர்தலில் பலவிதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டைப் பாதுகாத்து ஒரு ஸ்திரமான இலங்கையை உருவாக்குவதற்கு கோத்தாபயதான் சிறந்த தெரிவு என நம்பி வரலாறு காணாத வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்தனர். ஆனால் நடந்தது என்ன? ஒரு வருடம்கூட அவரால் தாக்கு பிடிக்க முடியாமல் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என தலை தெரிக்க ஓடிய கதையையும்  அதற்கு முன் நல்லாட்சி என்ற பெயரில் கள்வர்களைப் பிடிக்க வந்தவர்கள் கல்லாப் பெட்டியிலேயே கை வைத்த கதையையும் தற்போது நல்லாட்சியின் நாயகன் தண்டப்பணம் செலுத்துவதற்காகக்  கையில் பிச்சா பாத்திரத்தை ஏந்தியுள்ள பரிதாபக் காட்சிகளையும்தான் நாம் கண்டோம். 

இன்னொரு பக்கம் 'அறிந்தறிந்தும் யானை தன் பாகனையே கொல்லும்' என்பது போல மீண்டும் ஒரு கூட்டம் வீழ்ந்த நாட்டைத் தூக்கி நிறுத்தி பெரும் இக்கட்டிலிருந்து நாட்டைமீட்டெடுக்கும் ஆபத்பாந்தவனாக ரணிலைக் கொண்டாடத் தெடங்கியுள்ளனர். இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புடன் ஒருவரை ஆட்சியில் அமர்த்துவதும் பின்னர் ஏமாந்து பின்வாங்குவதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது.

இவ்வாறான ஒரு பின்னணியில்தான் ஜே.வீ.பி. அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் முற்போக்குவாதிகள் எனக் கூறப்படும் சக்திகளை ஒன்றுதிரட்டி தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அடுத்த தேர்தலுக்கு முகம்கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் பல விடயங்களில், குறிப்பாக சிறுபான்மையினர் தொடர்பான விடயங்களில் அவர்களது போக்கும் கொள்கைகளும்  இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இலங்கையில் இதுவரை நடைபெற்ற, நடைபெறுகின்ற அல்லது நடைபெறப்போகும் அனைத்து அரசியல் செயல்பாடுகளுக்கும் பின்னணியில் ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல் உண்டு என்பதை இங்குள்ளவர்கள் அடிக்கடி மறந்துவிடுகின்றனர் அல்லது அறியாதிருக்கின்றனர். நாம் அண்மைக்காலமாக அனுபவித்த அவலங்களே அதற்கான சான்றுகள். எனவே ஆளைமயக்கும் பேச்சுகளுக்கும் அதனை செவிமடுக்க அணி திரளும் மக்கள் கூட்டத்தினரையும் கண்டு கண்மூடித்தனமாக செயல்படாது மக்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் ஆட்சியைக் கைப்பற்றும் சக்தி அற்றவர்கள். அதனால் தமக்குரிய உரிமைகளைத் தெரிந்துகொள்வதற்கும் அவற்றை வென்றெடுப்பதற்கும் அயராது போராடவேண்டியுள்ளது. இன்று அவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி விரக்தியின் விளிம்பில் விழி பிதுங்கி நிற்கின்றனர். சிறுபான்மையினர் மனதில் வேறுன்றியுள்ள ஜே.வீ.பி தொடர்பான சந்தேகங்களைக் கலைந்தெறிவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு மக்கள் முன் வைக்கப்படவேண்டும். அதில் அவர்களது காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம், கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். அதேநேரம் ஜே.வீ.பியின் கரை படிந்த கடந்தகால வரலாறுகளை மக்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள். அவர்களது எச்சசொச்சங்கள் விக்டர் ஐவன், வீரவன்ஸ போன்ற வடிவங்களில் இன்னும் உலாவித் திரிவதையும் மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.  எனவே இன்றைய ஜே.வீ.பியினர் அவ்வாறானவர்கள் அல்லர் என வாதிடுவோர் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி பாமர ஜனங்களின் நம்பிக்கையை வெல்ல முன்வரவேண்டும். 

எவ்வாறாயினும் இவர்கள் மூலம் மூன்றாவது அணியொன்று உருவாகி நாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுமானால் நாட்டின்மீது அபிமானம்கொண்ட அனைவரும் வரவேற்கவே செய்வர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதையும் மக்கள் நன்கு அறிவர். பதவியில் ருசி கண்ட பெருச்சாளிகளும் குள்ளநரிக் கூட்டங்களும் ஏன் வெளிநாட்டு மறை கரங்களும்கூட அதனை ஒருமுகமாகக் கிள்ளியெறியவே முற்படும். எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர் மனம்மாறி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களித்து அவர்களை அரசகட்டில் ஏற்றுவார்களா? அல்லது தெரியாத தேவதையைவிட தெரிந்த பேய்களே பரவாயில்லை எனக் கைகளை விரித்து இன்னொரு பொல்பொட் ஆட்சிக்கு வழி விடுவார்களா?  என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகாண அடுத்த தேர்தல்வரை பொறுத்திருந்துதான் ஆகவேண்டும். 



Wednesday, August 26, 2020

 

கோத்தாவின் அலி சப்ரி, சிரிமாவோவின் பதியுத்தீன் மஹ்மூதுக்கு நிகராவாரா?

 -அமீர் அலி

 

முஸ்லிம்கள் இல்லாத அமைச்சரவையை விரும்பிய சிங்கள-பௌத்த டும்போக்கு தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில், 26 உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையில் ஒரே முஸ்லிம் அமைச்சராக அலி சப்ரி  ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால்  நியமிக்கப்பட்டமை,  அரசாங்கத்தில் அவரது எதிர்கால வகிபாகம், சமூகத்திற்கான அவரது சேவை மற்றும் நாட்டிற்கான பங்களிப்பு பற்றிய  பல சர்ச்சைகளைத் தூண்டிவிட்டுள்ளன.

 ஏற்கெனவே, சிலர் அலி ஸப்ரி நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டதையும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கா  லக்ஷ்மன் கதிர்காமரை  வெளியுறவு அமைச்சராக நியமனம் செய்ததையும்  ஒப்பீடு செய்து,  இவை இரண்டு நியமனங்களும் குறிப்பிட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் அமைச்சர்களின் சமூக நலன்களைப் பாதிக்கும் வகையிலான அரசாங்கத்தின் கடும்போக்கானதும்  சர்ச்சைக்குரியதுமான சில தீர்மானங்களை அமுல்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்டவை அன்றி வேறில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர். இரண்டு அமைச்சர்களின் அறிவு மற்றும் தொழில்சார் திறனைப் பொறுத்தவரை எந்தவொரு குறைபாட்டையும் காண முடியாது. எவ்வாறாயினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான  லக்ஷ்மன் கதிர்காமரின் சிலுவைப் போர், அவரை தமிழ் தேசியவாதிகளின் பார்வையில் தமிழ் சமூகத்தின் எதிரியாகக் காட்டியது. இதேபோல், கோத்தாபய மற்றும் அவரது அமைச்சரவை பௌத்த மேலாதிக்கவாதிகளின் அழுத்தத்தின் கீழ் ஒரு நாடு-ஒரு-சட்டம் என்ற கொள்கையை அமல்படுத்துவதாயின்; சர்ச்சைக்குரிய முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் (MMDA) போன்ற முஸ்லிம் தனிப்பட்ட சட்டங்களை ஒழிப்பது மட்டுமன்றி  முஸ்லிம் மத்ரஸாக்கள் மற்றும் முஸ்லிம் பொதுப் பள்ளிக்கூடங்களின் இருப்புக்கான பகுத்தறிவுரீதியான மறுஆய்வும் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த தீவிர நடவடிக்கைகளில் சிலவற்றைச் செய்யக்கூடிய ஒருவராக அலி ஸப்ரி இருப்பாரா? இது போன்ற மாற்றங்களைச் செய்ய அவர் தனது சொந்த சமூகத்திடமிருந்து ஆதரவைப் பெறுவாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 அலி ஸப்ரி, கதிர்காமர் என்போருக்கு அப்பால் 1960-1963 மற்றும் 1970-77 காலப்பகுதியில் கல்வி அமைச்சராகவும் 1963-1965 வரை சுகாதார அமைச்சராகவும் சிரிமாவோ அம்மையாரால் நியமிக்கப்பட்ட பதியுத்தீன் மஹ்மூத் என்ற மற்றொரு அமைச்சரும் இருந்தார். ஒரு சில ஊடக நேர்காணல்கள் மற்றும் பொது உரைகள் மூலம் பதியுத்தீன் மஹ்மூத் மீது அலி ஸப்ரி மிகுந்த மரியாதை வைத்திருந்ததையும் அவரது தந்தையின் நல்ல நண்பராக இருந்தார் என்பதையும் அறிய முடிகிறது. எனவே, பதியுத்தீன் மஹ்மூத் என்ன செய்தார், எவ்வாறு தனது குறிக்கோளை அடைந்துகொண்டார் என்பதையும் அவர் செயல்பட்ட சூழ்நிலைகளையும் அவருக்கு நினைவூட்டுவது பொறுத்தமாக இருக்கும். எவ்வாறு கடும் போக்கு சிங்கள-பௌத்த தேசியவாதிகளின் கடுமையான எதிர்ப்பின் மத்தியில் ஸப்ரி நியமிக்கப்பட்டாரோ அதைப் போலவே, பதியுத்தீன் மஹ்மூத் தனது அரசியல் வாழ்க்கையின் பிற்கால கட்டங்களில் அமைச்சவையிலும் வெளியிலும் இதேபோன்ற சூழலை எதிர்கொண்டார். மேலும், அலி ஸப்ரிக்கு பின்னால் கோத்தாபய உறுதியாக இருப்பது போல் சிரிமாவோ அம்மையார் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்.

இருப்பினும், 1970களை விட, 2020 மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதி அடிப்படையில் வேறுபட்டவையாக இருந்தன. சிங்கள மற்றும் தமிழ் ஆகிய இரு சமூகத்திலுமிருந்த தேசியவாத சக்திகள் சிரிமாவோ அம்மையாரின் ஆதரவைப் பெற்ற பதியுத்தீன் மஹ்மூதைத் தாக்க முஸ்லிம் பழமைவாத சக்திகளுடன் கைகோர்த்த போதிலும்  அன்றைய தேசியவாத சக்திகள் குறிப்பாக பௌத்த தீவிரவாத சக்திகள், அவர்களின் தற்போதைய அவதாரங்களைப்போல அத்துனை கொடூரமானதாகவும் வன்முறை சார்ந்ததாகவும் இருக்கவில்லை.  பௌத்த தேசியவாதத்தின் தன்மையின் இந்த ஆக்கிரமிப்புரீதியான உருமாற்றம்தான் அலி ஸப்ரியின் அமைச்சர் பதவிக்கு சவாலாக அமைவதோடு தனது சமூகத்திற்கான சேவை செய்யும் அவரது ஆற்றலையும் வெகுவாகப் பாதிக்கிறது.

 பதியுத்தீன் மஹ்மூதைப் பொறுத்தவரை, அவர் அடிப்படையில் ஒரு தேசாபிமானியாகவும்  தொலைநோக்குள்ளவராகவும் இருந்தார். விட்டுக்கொடுப்பில்லாத தேசாபிமானியாகவும், முற்போக்கான மற்றும் நவீனத்துவத்தின் தீவிர ஆதரவாளராகவும் தனது சொந்த அந்தஸ்தை விட்டுக் கொடுக்காது பல மட்டங்களில் தனது சொந்த சமூகத்திற்கு அவரால் செய்ய முடிந்தது. அவர் ஒரு அமைச்சராகவும் சமூகத் தலைவராகவும் ஆற்றிய பணிகளை ஒரு சில வார்த்தைகளால் அல்லது பத்திகளால் விவரித்துவிட முடியாது. ஆயினும்கூட, அவரது பன்னிரண்டு ஆண்டு அமைச்சராகப் பணியாற்றிய வரலாற்றிலிருந்து ஓரிரு மைல்கற்கள் அவர் விரும்பியதை எவ்வளவு தந்திரோபாயமாக அடைந்தார் என்பதை வெளிப்படுத்துகிறது. கல்வி அமைச்சராக, தனியார் பாடசாலைகளை தேசியமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை  அவர் தனியாக பொறுப்பேற்றதோடு சுகாதார அமைச்சராக அரச மருத்துவர்களால் மேற்கொள்ளப்பபட்ட தனியார் மருத்துவ சேவைகளை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை அச்சமின்றி செயல்படுத்தினார். இவை பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் மாற்றப்பட்டனவாயினும், இவற்றையும்  சர்ச்சைக்குரிய ஏனைய நடவடிக்கைகளையும் குறிப்பாக கல்வி தொடர்பான விடயங்களை செயல்படுத்துவதில், பதியுத்தீன் மஹ்மூத் தனது சொந்த சமூகத்தின் முழு ஆதரவைக் கொண்டிருக்கவில்லை. கொழும்பு ஸாஹிரா கல்லூரியைக் கையேற்பதற்கான நீதிமன்றப் போராட்டங்கள் அவரது சமூகத்தின் எதிர்ப்பை விளக்குகிறது. முஸ்லிம் பாடசாலை பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக இசை மற்றும் நடனம் அறிமுகப்படுத்தப்பட்டமை அவர் எதிர்கொண்ட மற்றொரு பிரச்சினையாகும். இது அவருக்கு அனைத்து பழமைவாத முஸ்லிம் சக்திகளின் கோபத்தை சம்பாதித்துக் கொடுத்தது. அந்த நேரத்தில் பிற்காலத்தில் ஒரு முஸ்லிம் அரசியல் கட்சியைத் தோற்றுவித்த, வளர்ந்து வரும் முஸ்லிம் தலைவர்களில் ஒருவர் கூட, முல்லாக்களுடன் கைகோர்த்து அமைச்சரைக் கண்டித்தார். இதேபோல், தமிழ் சமூகமும் ஒருபோதும் பதியுத்தீன் மஹ்மூதை ஆதரிக்கவில்லை, பல்கலைக்கழக நுழைவுக்கான தரப்படுத்தல் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, குறிப்பாக வட பகுதி தமிழ் சமூகத்தின் பரம எதிரியாக மாறினார்.

 எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு முஸ்லிம் தொலைநோக்கு பார்வையாளரான பதியுத்தீன் மஹ்மூத் தனது மக்களை ஒரு 'வணிக சமூகம்' என்ற நிலையை மாற்ற விரும்பினார். அவர் தனது மக்களை தேசிய மட்டத்தில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப வேறு திசையில் வழிநடத்த விரும்பினார். இதனை மனதிற்கொண்டு 1972 ஆம் ஆண்டு அவரது கொழும்பு  இல்லத்தில் முக்கிய முஸ்லிம் தலைவர்களை பிற்பகல் தேநீர் விருந்தொன்றுக்கு அழைத்து, பிற்போக்குவாதிகளுடன் இணைந்து தனது அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்களை எதிர்ப்பதில் உள்ள ஆபத்துகளை உணர்த்தி எச்சரித்தார். பொருளாதார மீட்சிக்கான பிற வழிகளை ஆராயுமாறு தலைவர்களைத் தூண்டினார்.  அவரும் கல்வியை ஒரு வழியாகத் தேர்ந்தெடுத்து, அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை அறிஞர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் அடங்கிய ஒரு வகுப்பினராக உருவாக்க விரும்பினார். இன்றைய முஸ்லிம் மகா வித்யாலயங்கள் மற்றும் ஒரு முஸ்லிம் புத்திஜீவிகளின் தோற்றம் ஆகியவை பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின் தொலைநோக்கின் அமைதியான சான்றுகள் எனலாம். இதையெல்லாம் செய்வதில், அவர் தனது கட்சித் தலைவரான சிரிமாவோ அம்மையாரின் பூரண நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.

பதியுத்தீன் மஹ்மூத் அவர்களின்; பிரதான கவலையாக இருந்தது பெரும்பான்மை சமூகத்தின் எதிர்ப்பைப் பற்றியது அல்ல. அவருடைய பிரதமரின் ஆதரவுடன் அவற்றை அவரால் சமாளிக்க முடிந்தது, ஆனால் தனது சொந்த சமூகத்திலிருந்து வந்த எதிர்ப்பைப் பற்றியே அவர் கவலை கொண்டார். அதனை சமாளிப்பதற்காகவே அவர் இஸ்லாமிய சோஸலிச முன்னணியை (Islamic Socialist Front) உருவாக்கினார், அதன் பின்னால் முஸ்லிம் ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் பொதுவாக முஸ்லிம் இளைஞர்களை அணிதிரட்டினார்.  இஸ்லாமிய சோஸலிச முன்னணியின் எழுச்சி, .தே..வின் முக்கியஸ்தர்களில் ஒருவரான எம். எச். முகமதுவின் கீழ், மார்க்சிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்க தூண்டியது. அதன் பின்னால் அனைத்து மத பழமைவாதிகளும் திரண்டனர். அலி ஸப்ரியின் தேசிய முஸ்லிம் கூட்டமைப்பு (National Muslim Collective Forum )இஸ்லாமிய சோஸலிச முன்னணியின்  புதிய பதிப்பா? என்பதை வரலாறு தீர்மானிக்கட்டும்.

சுருக்கமாக, கோத்தாபயவின் அலி ஸப்ரி ஆற்றல் மிக்கவர், புத்திசாலி, தொழில்சார் வல்லுர் மற்றும் சிரிமாவோ அம்மையாரின் பதியுத்தீன் மஹ்மூதைப் போன்று, அவர் 'கட்டுப்பாடான நல்லொழுக்கமுள்ள' சமுதாயத்தைப் பற்றிய கோத்தாபயவின் சொந்த தொலைநோக்கிற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முஸ்லிம் சமூகத்தை ஒரு புதிய திசையில் இழுக்க விரும்புகிறார். ஆனாலும், அவர் எதிர்கொள்ளும் சவால்கள் வலிமைமிக்கவை. தீவிர எதிர்ப்பைக்  காட்டும் சிங்கள-பௌத்த இன-தேசியவாதம் மற்றும் இஸ்லாமிய பழமைவாதம் அவற்றில் இரண்டாகும், இதற்கு மேலதிகமாக தமிழ் சமூகத்துடனான நல்லிணக்க பிரச்சினையும் உள்ளது. வடக்கு மற்றும் கிழக்கில் பொருளாதார வளர்ச்சியே நல்லிணக்கத்திற்கான ஒரே வழி என்று கோத்தாபய நம்புகிறார். இது குதிரைக்கு முன்னால் வண்டியைக் கட்டுவது போல சிக்கலானதாகவே இருக்கும். கோத்தாபயவுக்கும் தமிழ் சமூகத்திற்கும் இடையிலான ஒரு பாலமாக அலி ஸப்ரியால் இருக்க முடியுமா? அமைச்சரவையில் உள்ள ஒரே முஸ்லிம் அமைச்சர் என்பதால், அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக அவரது செயல்திறனைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும், மேலும் அவர் சிரிமாவோ அம்மையாரின் பதியுத்தீன் மஹ்மூதுடன்; பொருந்தி வருவாரா என்றும் பார்க்கலாம். பதியுத்தீன் மஹ்மூத் தனது சமூகத்தின் நிலையை முன்னேற்றுவதற்காக எவ்வளவோ செய்தும்  முடிவில் 1977 ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தபோது சமூகம் அவரை நிராகரித்தது. முஸ்லிம்களின் நன்றியுணர்வு பற்றிய இந்த உண்மையை அலி ஸப்ரி நன்கு அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

 *Dr. Ameer Ali, School of Business and Governance, Murdoch University, Western Australia

Tamil translation: Mohamed Razeen



  

 

 

 

 

 

 

 

Saturday, July 11, 2020


மலாய் சமூகத்தில் உதித்த மாபெரும் தலைவர்

மலாய் சமூகத்தைச் சேர்ந்த துவான் புர்கானுத்தீன் ஜாயா, இலங்கையின் கண்டி மாவட்டத்தில் கலகெதரை என்ற ஊரில் 1880 ஜனவரி முதலாம் திகதி பிறந்தார். குருநாகல எங்லோ வெர்னாகியுலர் பாடசாலை, கண்டி சென் போல்ஸ் கல்லூரி, கல்கிஸ்ஸ சென் தோமஸ் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். 10 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்ட ஜாயா கல்வியில் காட்டிய திறமை காரணமாக முதலாம் தரத்திலிருந்து 4ஆம் தரத்திற்கும் பின்னர் 4ஆம் தரத்திலிருந்து 6ஆம் தரத்திற்கும் வகுப்பேற்றப்பட்டார்.

1913 ஆம் ஆண்டில் லண்டன் பல்கலைக் கழகப் பட்டதாரியாக கண்டி தர்மராஜா கல்லூரி, மொரட்டுவ பிரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி, கொழும்பு ஆனந்தா கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகப் பணியாற்றியதன்பின் சட்டக் கல்லூரியில் இணைந்தார். அவர் அங்கு இறுதி ஆண்டில் கல்வி பயிலும்போது மருதானைப் பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவரும் பிரபல கொடை வள்ளலுமான என்.டீ.எச். அப்துல் கபூரின் வேண்டுகோளைத் தட்ட முடியாது வழக்கறிஞராகவேண்டும் என்ற ஆசையைப் புறந்தள்ளி 1921 ஆம் ஆண்டில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி அதிபர் பதவியில் அமர்ந்தார்.

இவரது காலத்தில் இக்கல்லூரி கல்வியில் மட்டுமன்றி விளையாட்டு, இலக்கியம், போன்ற பல்வேறு துறைகளிலும் பெரும் வளர்ச்சி கண்டது. 59 மாணவர்களுடனும் 6 ஆசிரியர்களுடனும்  அக்கல்லூரியைப் பொறுப்பேற்ற ஜாயா அவர்கள் 27 வருடங்கள் சேவையாற்றிய பின் 3500 மாணவர்களுடனும் 150 ஆசிரியர்களுடனும் .எம்.. அஸீஸ் அவர்களிடம் ஒப்படைத்தார். ஜாயாவின் காலம் ஸாஹிராவின் பொற்காலம் எனலாம்.

இவரது காலத்தில் கல்லூரியின் கிளைகள் மாத்தளை, அளுத்கமை, புத்தளம், கம்பளை ஆகிய நகரங்களில் நிறுவப்பட்டது. பின்னர் இவை தனித்தனிப் பாடசாலைகளாக மாறி அந்நதந்த நகரங்களின் பிரபல பாடசாலைகளாக உருவெடுத்தன. ஜாயா அவர்களின் மாணவரான கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்கள் நாட்டின் கல்வி அமைச்சரானதும் முஸ்லிம் கல்வியில் மறுமலர்ச்சி ஏற்பட்டதோடு புதிய பல பாடசாலைகளும் தோன்றின.

ஜாயா அவர்கள் 1924 ஆம் ஆண்டில் முஸ்லிம் உறுப்பினராக இலங்கையின் சட்டவாக்கப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதோடு தீவிர அரசியலில் கால் பதித்தார். 1931 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் கொழும்பு மத்தியில் போட்டியிட்டுத் தோல்வியுற்றார். பின்னர் 1936 இலங்கை அரசாங்க சபைத் தேர்தலில் நியமன அங்கத்தவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1947 ஆம் ஆண்டு வரை சேவையாற்றினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினரான ஜாயா அவர்கள்  1947 இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மத்திய தொகுதியில்; .தே,. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதும் தொழில் மற்றும் சமூக சேவைகள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இவரே சுதந்திர இலங்கையின் முதல் முஸ்லிம் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றார்.

1947இல் கம்பளையில் பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாரிய சேதங்கள் ஏற்பட்டு பல்லாயிரக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்தபோது ஜாயா அவர்கள் தனது சமூகசேவை அமைச்சின் மூலமாக கம்பளை, மரியாவத்தை என்ற இடத்தில் ஒரு வீடமைப்புத் திட்டத்தை உருவாக்கி பாதிக்கப்பட்ட மக்கள் அங்கு குடியேற்றப்படுவதற்கு வழி வகுத்தார். அன்றைய கால கட்டத்தில் அது ஒரு மாபெரும் வீடமைப்புத் திட்டமாகக் கருதப்பட்டது. இன்று அது நகரை அண்மியதாக, வளர்சியடைந்த பெருங் கிராமாகக் காணப்படுகிறது. இதனைப் பெரும்பாலான கம்பளைவாசிகளே அறிந்திருக்கமாட்டார்கள். இது அக்கால அரசியவாதிகள் இக்கால அரசியல்வாதிகளைப்போல விளம்பரத்துக்காக சேவையாற்றவில்லை என்பதையே காட்டுகிறது.  

அன்று இரண்டாம் உலகயுத்தத்தினை வெற்றி கொள்ளும் நோக்கில் பிரித்தானியர்கள் ஒரு வியூகத்தை வகுத்தார்கள். அவர்களது காலனித்துவத்தின் கீழிருந்த நாடுகள் யுத்தத்தில் பிரித்தானியர்களுக்கு ஆதரவு வழங்கும் பட்சத்தில் அந்நாடுகளுக்கு சுதந்திரம் வழங்குவதாக அறிவித்திருந்தார்கள். அதே போல் இலங்கைக்கு டொமினியன் அந்தஸ்தை வழங்குவதற்கான ஒரு தகுதியாக, சிறுபான்மையினர் பாதிக்கப்படாதிருக்க 3/4 இற்கு அதிகமான பெரும்பான்மை இருக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கையை விடுத்தனர். ஆனால் இலங்கையின் பெரும்பான்மையான பௌத்த சிங்களவர்களால் தனித்து இந்த பெரும்பான்மையைக் காண்பிக்க முடியாதிருந்தது. அந்த காலகட்டத்தில் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் சட்டசபையில் 50:50 என்ற நிபந்தனையோடு பெரும்பான்மைக்கு ஆதரவளிக்க நிபந்தனை விதித்தார்.

இது பற்றி டீ.பி.ஜாயா அவர்கள் ஆற்றிய உரையில் 'நான் இங்கு சிறுபான்மை சமூகத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி பற்றியோ அல்லது பெரும்பான்மை இனத்தின் வெற்றி பற்றியோ கூற முன்வரவில்லை. இச்சபையிலுள்ள முஸ்லிம் அங்கத்தவர்கள் மசோதாவை ஆதரிப்பதற்கான ஒரே காரணத்தைக்கூற விரும்புகின்றேன். இந்த நாடு சுதந்திரமடைவதற்காக எமது சமூகத்திற்குக் கிடைக்கவிருக்கும் அனுகூலங்களையும் பிரதிகூலங்களையும் நாம் தியாகம் செய்யத் தயாராயுள்ளோம். நான் இதனை முழு முஸ்லிம் சமூகத்தின் ஆதரவுடன் அவர்கள் சார்பாகக் கூறுகின்றேன்.' என்றார்.
பின்பு இதனையே சேர் ராசிக் பரீதும் ஆதரித்து உரையாற்றினார். இவ்வுரை பலரின் பாராட்டைப் பெற்றதோடு டெமீனியன் மசோதா நிறைவேற்றப்பட்டு நாடு சுதந்திரம் பெறுவதற்கும் காரணமாக அமைந்தது. இதன் காரணமாக அவர் தேசிய வீரராக அங்கீகரிக்கப்பட்டு அவர் பெயரில் முத்திரையொன்றும் வெளியிடப்பட்டதோடு பாடப் புத்தகங்களிலும் அவர் பற்றிய விபரங்கள் இணைக்கப்பட்டன.

அவரிடம் கல்வி கற்ற மாணவர்கள் பல உயர் பதவிகளை வகித்ததோடு பாராளுமன்றத்தில் அவருடன் சமமாக அமரும் பாக்கியத்தையும் பெற்றனர். அவர்களுள் ஆனந்தா கல்லூரியில் கற்ற இன்றைய வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் தந்தையான 'மார்க்சிஸத் தந்தை' என அழைக்கப்பட்ட பிலிப் குணவர்தன, ரொபர்ட் குணவர்தன, என்.எம். பெரேரா என்போரும் அடங்குவர்.

ஒருமுறை பிலிப் குணவர்தனவின் குறும்புகளை சகிக்க முடியாத அன்றைய அதிபர் பீ.டீ.எஸ். குலரட்ன அவரைப் பாடசாலையைவிட்டு விலக்குவதற்குத் தீர்மானித்தார். அவரது ஆசிரியரான டீ,பி. ஜாயாவை அழைத்து 'இந்தப் பையனை இனியும் இப்பாடசாலையில் வைத்திருக்க முடியாது' என்று கோபத்துடன் கூறினார். அதற்கு ஜாயா  அமைதியாக 'சேர் இவருக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கிப் பார்ப்போம் மீண்டும் இவர் ஏதாவது பிரச்சினை ஏற்படுத்தினால் இவரைப் பாடசாலையைவிட்டு நீக்குவது மட்டுமல்ல நானும் இந்தத் தொழிலை விட்டு வேறொரு தொழிலைத் தேடிக்கொள்கிறேன்' என்றார். ஜாயாவின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் மீண்டும் சேர்த்துகொள்ளப்பட்டார். பின்னர் அவர் படித்துப் பட்டம் பெற்று நாட்டுக்கும் கல்லூரிக்கும் பேரும் புகழும் தேடிக் கொடுத்தமை அனைவரும் அறிந்த விடயம்.

1950இல் டீ.பி. ஜாயா அவர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி பாகிஸ்தானுக்கான உயர் ஸ்தானிகராக சென்றார். பாகிஸ்தானின் புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்திற்கு ஜாயா அளித்த பங்களிப்புக்காக அவருக்கு 'கௌரவப் பிரஜை' என்ற அந்தஸ்து வழங்கப்பட்டதோடு பஞ்சாப் பல்கலைக் கழகம் அவருக்கு கலாநிதிப் பட்டமளித்துக் கௌரவித்தது. இலங்கையிலிருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் யாத்ரீகர்களின் நன்மையைக் கருத்தில்கொண்டு சவுதி அரேபியாவில் சிலோன் ஹவுஸ் என்ற ஒரு விடுதியை அமைப்பதிலும் அவர் வெற்றி கண்டார்.

1960 மே மாதம் 31ஆம் திகதி  மக்காவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த போது மதீனாவில் காலமாகி ஜென்னத்துல் பக்கியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.

- முஹம்மத் றஸீன்