Monday, November 20, 2023

 ராஜபக்ஷக்களின் சிவில் உரிமை பறிக்கப்படுமா?





1977இல் பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்த JR. ஜெயவர்தன  முன்னைய ஆட்சியின்போது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி சிரிமாவோ பண்டாரநாயக்க, பீலிக்ஸ் டயஸ், AHM. பவுஸி உள்ளிட்ட பலரது சிவில் உரிமைகளைப் பறித்து அவர்களை செல்லாக் காசாக்கியதை யாரும் இலகுவில் மறந்திருக்க முடியாது. 


ஆனால் ஜேஆரினது அளவிட முடியாத அதிகார துஷ்பிரயோகம், அரச பயங்கரவாதம் என்பன பற்றி யாரும்  பேசவே அஞ்சும் அளவுக்கு அவரது அதிகார பலம் பன்மடங்கு மேலோங்கி இருந்தது என்பது வேறு கதை.


இன்று அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் நாட்டின் இன்றைய பொருளாதாரம் அதல பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளமைக்கான மூல காரணம் ராஜபக்ஷ சகோதர்களினதும் அவர்களது சகாக்களினதும் நிர்வாக சீர்கேடுகளே என இலங்கையின் அதிஉயர் நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது. அதேநேரம் அவர்கள் தொடர்பான சட்டவிரோத சொத்துக் குவிப்பு, ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் என்பன பற்றிய குற்றச்சாட்டுகளும்  வழக்குகளும் வாதப்பிரதிவாதங்களும் இன்றுவரை அனைவரதும் பேசுபொருளாக உள்ளமை நாடறிந்த உண்மையாகும்.


கேள்வி என்வென்றால்,  அவர்களது தயவில் பதவியில் அமர்ந்த ரணில் விக்கிரமசிங்க மாமனாரின் வழியைப் பின்பற்றி சிரிமாவோ அம்மையாருக்கும் அவரது சகாக்களுக்கும் வழங்கிய அதே தண்டனையை வழங்குவாரா அல்லது தொடர்ந்தும் அவர்களது ஆபத்பாந்தவனாக அவர்களது குற்றச் செயல்களை மறைத்து அவர்களைப் பாதுகாக்க முற்படுவாரா என்பதே! அதேநேரம் ரணில் தமது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு ஆயுதமாகவே இந்த நீதிமன்றத் தீர்ப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.


ஒரு நாடு குறிப்பாக பல்லின சனத்தொகையுள்ள ஒரு நாடு சட்டத்தின் ஆட்சியிலேயே ஆளப்படவேண்டுமே  தவிர தனிமனிதனால் அல்ல என்பதைக் கடந்தகால ஆட்சியாளர்கள் மூலம் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே மக்கள் எதிர்பார்ப்பது, குறைந்தபட்சம்  ராஜபகஷக்கள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான சொத்துக்களையாவது  மீட்டு அதன் மூலம் நலிவடைந்துள்ள தமது வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்! ஆனால் ரணிலிடமிருந்து இவற்றை எதிர்பார்க்க முடியாது என்பதையே அவரது தற்போதைய நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.


எவ்வாறாயினும் அடுத்த தேர்தலை மனதிற்கொண்டாவது இந்த நீதிமன்றத் தீர்ப்பினைப் பயன்படுத்தி ராஜபக்ஷக்களின் அடாவடித்தனங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவாரா அல்லது வழமைபோல இந்த முறையும் தோல்வியைத் தேடிக்கொள்வாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

Tuesday, July 18, 2023


அநுர குமார அரசகட்டில் ஏறுவாரா?



இப்போதெல்லாம் அனேகமானோர் பொருளாதாரத்தில் அதலபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ள நம் நாட்டை மீட்டெடுத்து கட்டியெழுப்பக்கூடிய வலிமை ஜே.வீ.பி. தலைமையிலான தேசிய மக்கள்  சக்திக்குத்தான் உண்டு எனக் கருதுவதாகத் தெரிகிறது. இதேபோன்றுதான் கடந்த தேர்தலில் பலவிதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டைப் பாதுகாத்து ஒரு ஸ்திரமான இலங்கையை உருவாக்குவதற்கு கோத்தாபயதான் சிறந்த தெரிவு என நம்பி வரலாறு காணாத வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்தனர். ஆனால் நடந்தது என்ன? ஒரு வருடம்கூட அவரால் தாக்கு பிடிக்க முடியாமல் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என தலை தெரிக்க ஓடிய கதையையும்  அதற்கு முன் நல்லாட்சி என்ற பெயரில் கள்வர்களைப் பிடிக்க வந்தவர்கள் கல்லாப் பெட்டியிலேயே கை வைத்த கதையையும் தற்போது நல்லாட்சியின் நாயகன் தண்டப்பணம் செலுத்துவதற்காகக்  கையில் பிச்சா பாத்திரத்தை ஏந்தியுள்ள பரிதாபக் காட்சிகளையும்தான் நாம் கண்டோம். 

இன்னொரு பக்கம் 'அறிந்தறிந்தும் யானை தன் பாகனையே கொல்லும்' என்பது போல மீண்டும் ஒரு கூட்டம் வீழ்ந்த நாட்டைத் தூக்கி நிறுத்தி பெரும் இக்கட்டிலிருந்து நாட்டைமீட்டெடுக்கும் ஆபத்பாந்தவனாக ரணிலைக் கொண்டாடத் தெடங்கியுள்ளனர். இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புடன் ஒருவரை ஆட்சியில் அமர்த்துவதும் பின்னர் ஏமாந்து பின்வாங்குவதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது.

இவ்வாறான ஒரு பின்னணியில்தான் ஜே.வீ.பி. அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் முற்போக்குவாதிகள் எனக் கூறப்படும் சக்திகளை ஒன்றுதிரட்டி தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அடுத்த தேர்தலுக்கு முகம்கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் பல விடயங்களில், குறிப்பாக சிறுபான்மையினர் தொடர்பான விடயங்களில் அவர்களது போக்கும் கொள்கைகளும்  இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இலங்கையில் இதுவரை நடைபெற்ற, நடைபெறுகின்ற அல்லது நடைபெறப்போகும் அனைத்து அரசியல் செயல்பாடுகளுக்கும் பின்னணியில் ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல் உண்டு என்பதை இங்குள்ளவர்கள் அடிக்கடி மறந்துவிடுகின்றனர் அல்லது அறியாதிருக்கின்றனர். நாம் அண்மைக்காலமாக அனுபவித்த அவலங்களே அதற்கான சான்றுகள். எனவே ஆளைமயக்கும் பேச்சுகளுக்கும் அதனை செவிமடுக்க அணி திரளும் மக்கள் கூட்டத்தினரையும் கண்டு கண்மூடித்தனமாக செயல்படாது மக்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் ஆட்சியைக் கைப்பற்றும் சக்தி அற்றவர்கள். அதனால் தமக்குரிய உரிமைகளைத் தெரிந்துகொள்வதற்கும் அவற்றை வென்றெடுப்பதற்கும் அயராது போராடவேண்டியுள்ளது. இன்று அவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி விரக்தியின் விளிம்பில் விழி பிதுங்கி நிற்கின்றனர். சிறுபான்மையினர் மனதில் வேறுன்றியுள்ள ஜே.வீ.பி தொடர்பான சந்தேகங்களைக் கலைந்தெறிவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு மக்கள் முன் வைக்கப்படவேண்டும். அதில் அவர்களது காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம், கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். அதேநேரம் ஜே.வீ.பியின் கரை படிந்த கடந்தகால வரலாறுகளை மக்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள். அவர்களது எச்சசொச்சங்கள் விக்டர் ஐவன், வீரவன்ஸ போன்ற வடிவங்களில் இன்னும் உலாவித் திரிவதையும் மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.  எனவே இன்றைய ஜே.வீ.பியினர் அவ்வாறானவர்கள் அல்லர் என வாதிடுவோர் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி பாமர ஜனங்களின் நம்பிக்கையை வெல்ல முன்வரவேண்டும். 

எவ்வாறாயினும் இவர்கள் மூலம் மூன்றாவது அணியொன்று உருவாகி நாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுமானால் நாட்டின்மீது அபிமானம்கொண்ட அனைவரும் வரவேற்கவே செய்வர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதையும் மக்கள் நன்கு அறிவர். பதவியில் ருசி கண்ட பெருச்சாளிகளும் குள்ளநரிக் கூட்டங்களும் ஏன் வெளிநாட்டு மறை கரங்களும்கூட அதனை ஒருமுகமாகக் கிள்ளியெறியவே முற்படும். எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர் மனம்மாறி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களித்து அவர்களை அரசகட்டில் ஏற்றுவார்களா? அல்லது தெரியாத தேவதையைவிட தெரிந்த பேய்களே பரவாயில்லை எனக் கைகளை விரித்து இன்னொரு பொல்பொட் ஆட்சிக்கு வழி விடுவார்களா?  என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகாண அடுத்த தேர்தல்வரை பொறுத்திருந்துதான் ஆகவேண்டும்.