Wednesday, July 31, 2024

 பழையன கழிதலும் புதியன புகுதலும்

- முஹம்மத் றஸீன்

இலங்கையில் இப்போதெல்லாம் தேர்தல் ஜூரம் கொவிட்டைவிட வேகமாகப்பரவிவருவதைக் காண முடிகிறது. தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்று கணிப்பீடு செய்வதில் வாக்காளர்களைவிட அரசியல்வாதிகளே அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்சி கொள்கைகள் எல்லாவற்றையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு எந்தப்பக்கம் தாவினால் தாம் எதிர்பார்த்திருக்கும் பதவியைப் பெறலாம் என்பதில் அரசியல்வாதிகள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இதற்கிடையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட பின்பும் தனது பதவியை நீட்டிக்கவும் தேர்தலைத் தள்ளிப் போடவும பகீரதப் பிரயத்தனம் எடுத்து வருவதையும் காண முடிகிறது. ஒருபுறம் பொய்களும் புரட்டுகளும் வதந்திகளும் கபடநாடகங்களும் அரங்கேறிக்கொண்டிருக்க மறுபுறம் அரசியல் ஆரூடங்களும் வீராப்புப் பேச்சுகளும் விஷமப் பிரசாரங்களும் பெரும் பிரவாகமெடுத்துப் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தேசிய மக்கள் சக்தியின் மேதினப் பேரணிகளிலும் அவர்களது பிரசாரக் கூட்டங்களிலும் ஒருபோதுமில்லாத வகையில் இன, மத, மொழி கடந்த மாபெரும் மக்கள் பங்கேற்பினைக் கண்டு கதி கலங்கிப் போயுள்ள ஏனைய கட்சிகள் தேசிய மக்கள் சக்தியைத் தமது பொது எதிரியாகக் கருதி நிலையான கூட்டணிகளை உருவாக்கி அதன் முன்னேற்றத்தைத் தடுக்கும் உத்திகளை ஆராய்கின்றன.   

அரசியலில் தனிக்காட்டு ராஜாவாக இதுவரை கோலோச்சிவந்த முக்கிய புள்ளிகள்  தமது எதிர்காலம் என்னாகுமோ என்ற அச்சத்தில் எந்தப்பக்கம் தாவினால் தப்பலாம் எனப் புலிகளைப்போலப் பதுங்கிப் பார்த்திருக்கின்றனர். இன்னும் சிலர் அசட்டுத் துணிச்சலுடன் வருவது வரட்டும் என வாய்ச்சவடால் விட்டும் வாய்கிழியக் கர்ஜித்துக்கொண்டும் திரிகின்றனர். எவ்வாறாயினும் இதுவரை அடங்காப்பிடாரியாக அதிகாரத்தைப் பற்றிப் பிடித்து நாட்டைச் சீரழித்து இழிநிலைக்குத் தள்ளிய ஒருசிலர் அரசியல் அஞ்ஞாத வாசத்தை அனுபவிக்க நேரிடும் என்பது மட்டும் உறுதி. அவர்களுள் ஒருசிலர் தேர்தலுக்கு முன்பே தலை தப்பினால் போதும் என நாட்டைவிட்டுத் தப்பியோடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சுதந்திரத்தின் பின்னரான நமது நாட்டுப் பொருளாதாரம் தாராளமயப் பாதையில் ஆரம்பித்து இடையில் சிலகாலம் சோஸலிஸப் பாதையில் பயணித்து 1977க்குப்பின் அதிதீவிர தாராளமய காப்ரேட் ஆதரவுக் கொள்கைகள் அடங்கிய ஒரு திறந்த பொருளாதாரத்துக்குள் பிரவேசித்தது. தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய இப்பாதை இலங்கை வரலாற்றில் இதுவரை யாருமே கண்டிராத அடக்குமுறைகளும் அராஜகங்களும் அட்டூழியங்களும் இனவன்முறைகளும் தலைவிரித்தாடி  இந்நாட்டு அரசியல் வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது. இவ்வாறு  1977 முதல் ஜே.ஆர். ஜெயவர்தன பின்பற்றிய மெக்கியாவலி சித்தாந்தங்கள் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால் நாட்டின் தொழிலாளர் வர்க்கமும் சிறு தொழில் முனைவோரும் கடும் சிரமங்களை எதிர்நோக்கியதோடு பின்னாட்களில் பாதாள உலகக் கோஷ்டியினரும் ஊழல் பேர்வழிகளும் பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரிக்கவும் அவர்களது ஆதிக்கம் மேலோங்கவும் வழி வகுத்தது. எனவே மாமனார் ஜே.ஆர். முதல்  மருமகன் ரணில் வரையிலான ஆட்சி காலத்தில் அராஜகமும் இன வன்முறைகளும் வளர்ந்த அளவுக்கு பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, வறுமை ஒழிப்பு, மக்கள் வாழ்க்கைத்தர மேம்பாடு ஆகிய முக்கிய அம்சங்களில் வளர்ச்சி ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே எதிர்வரும் தேர்தலில் பழைய முகங்களை நிராகரித்து நாம் அனைவரும் விரும்பும் மாற்றமொன்று நிகழ்ந்து இன்றைய அரசியல் நாடகத்தில் ஒரு புது முகம் அறிமுகமானாலும் இதுவரை புரையோடிப்போயுள்ள மேசமான மதவெறி அரசியல் விளைவுகளை முற்றாகத் துடைத்தெறியப் போராடவேண்டியிருக்கும் அதேசமயம் அரசின் அதிதீவிர தாராளமய காப்ரேட் ஆதரவுக் கொள்கையை நிராகரித்து உழைக்கும் வர்க்கத்திற்கும் நாட்டு வளர்ச்சிக்கும் அத்தியவசிய மாற்றுக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பெரும் சவாலையும் அவர் எதிர்கொள்ள நேரிடும். அதேநேரம் அவர்களைக்கொண்டு அவற்றைச் செய்விக்கும் திறன் கட்சிகளாலும் கொள்கைகளாலும் பிளவுபட்டிருக்கும் நமக்கு, குறிப்பாக நமது இளைஞர் சமுதாயத்திற்கு இருக்குமா? அதற்கு நமது அரசியல் யாப்பு இடம் தருமா? என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும் விரக்தியின் விளிம்பில் வாக்களிக்கச் செல்லும் பெரும்பாலானவர்கள் 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து, வருவதை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டதாகவே தோன்றுகிறது.