Friday, November 8, 2024

 பாராளுமன்றத் தேர்தல் களம் எவ்வாறு அமையப்போகிறது?


பாராளுமன்றப் பொதுத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியுள்ள நிலையில் பிரசாரங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய கட்சிகள் தேசிய மக்கள் சக்தியின் திடீர் எழுச்சி காரணமாக ஒருவித காழ்ப்புணர்ச்சிகொண்டு அதனைத் தமது பொது எதிரியாகக் கருதி தமது கொள்கை கோட்பாடுகளையெல்லாம் புறந்தள்ளி அதனைத் தோற்கடிப்பதில் மட்டும் குறியாக செயல்பட்டு வருவதைக் காணமுடிகிறது. குறிப்பாக தே.ம.சக்தியை நோக்கி நகரும் முஸ்லிம் வாக்குகளைத் திசை திருப்புவதில் அவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். 


கடந்த காலங்களில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் பலர் சமூகத்தின் இழப்பில் தங்கள் சொந்த அதிர்ஷ்டத்தைப் பாதுகாத்து மேம்படுத்திக் கொள்வதற்காக பேய் பிசாசுகளுடன் கூட பேரம் பேசித் தமது காரியங்களைச் சாதித்துக்கொள்வதில் வல்லவர்கள் என்பதைப் பல சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காண்பித்துள்ளனர் என்பதை அனைவரும் அறிந்தே வைத்துள்ளனர். பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் இவ்வாறன சந்தர்ப்பவாதிகளை அரசியல் அரங்கிலிருந்து மக்கள் முற்றாக அகற்றிவிடுவர் என்பதை உணர்ந்த பழைய ஒழுங்கின் எச்ச சொச்சங்கள் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அடைவதைத் தடுக்க தமக்குத் தெரிந்த ஒவ்வொரு தந்திரத்தையும் கையாள முயற்சிக்கின்றனர்.


ஜனாதிபதி தேர்தலின்போது முஸ்லிம்களுக்கு மத்தியில் NPP முன்வைத்துள்ள புதிய முறைமையின் கீழ் முஸ்லிம்கள் தமது இரு பெருநாட்களில் ஒன்றை மாத்திரமே கொண்டாட அனுமதிக்கப்படுவார்கள், அவர்களது தினசரி வணக்க வழிபாடுகளின் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும், ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றெல்லாம் கட்விழ்த்துவிடப்பட்ட கொடூரமான பொய்ப் பிரச்சாரங்களால் அவர்களைத் தம்பால் ஈர்க்க முடியாது என உணர்ந்த அவர்கள் புதிய கதைகளைப் புனைந்து புதிய ஜனாதிபதியை தர்மசங்கடத்திற்குள்ளாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர். இதன்மூலம் மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் எனவும் முறைமை மாற்றத்திற்கான தாகம் தணிந்துவிடும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால் தேசிய மக்கள் சக்தியைச் சுற்றி நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் ஆதரவு அதன் வெற்றிக்கான நம்பிக்கை ஒளி மேலோங்கி வருவதையே  காட்டுகிறது.


கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொஹட்டுவ மற்றும் சஜித் அணியினர் வெற்றி பெற்ற பல இடங்களைப் பறித்து அவர்களை மக்கள் தோற்கடித்து குறைந்த எண்ணிக்கைக்குள் அவர்களை வீழ்ச்சியடைய செய்திருக்கிறார்கள் என்பதும், கணிசமான மக்கள் அவர்களின் கொள்கைகளை நிராகரித்துள்ளனர் என்பதும் தெளிவாகத் தெரிந்தாலும் அந்தத் தேர்தல் முடிவுகளின் மற்றொரு பக்கத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. அதாவது  இன்னமும் கணிசமான மக்கள் தொகையினர் அவர்கள் பிடியில் உள்ளனர் என்பதும், அவர்கள் மீது அவர்களுக்கு பற்றும் பாசமும் வைத்துள்ளர் என்பதும் இந்த தேர்தலில் வெளிப்பட்டுள்ளது. 


எனவே கடந்த அரசாங்கங்களின் மோசமான நிகழ்ச்சி நிரலின் தீய விளைவுகளை நன்குணர்ந்து, அந்த கட்சியை நிராகரித்த மக்கள் இனிவரும் காலங்களிலும் அந்த அரசின் மீதான தங்களது எதிர்ப்புக் குரலை வலுப்படுத்தியே ஆகவேண்டும். இந்தக் குரலின் வலிமையும், விரிவடையும் மக்கள் எதிர்ப்பு இயக்கமும்தான், அவர்களது மாயையில் மயங்கியிருக்கும் மக்களையும் அதிலிருந்து விடுவிக்கும் சூழலை உருவாக்கும். அதாவது மக்களின் எழுச்சி அவர்களுக்கு எதிராக களத்திலும், கருத்தியல் அடிப்படையிலும் வலுப்பட வேண்டும். வன்முறை, படுகொலை, வெறுப்பு பிரச்சாரம் அரசு அமைப்புகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனில், வலுவான மக்கள் இயக்கம் மாற்றுப் பாதையில் எழுச்சியுடன் முன்னேற வேண்டும். இதில் சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட உழைக்கும் மக்கள் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும். அதாவது வெறுமனே பார்வையாளர்களாக இருப்பதற்குப் பதிலாக பங்கேற்பாளர்களாக அவர்கள் மாற வேண்டும். அதுவே அனைத்து மக்கள் மனங்களிலிருந்து அவர்களை முற்றாக அப்புறப்படுத்துவதற்கான சரியான தீர்வாக அமையும். இதற்கு மக்களுக்கான மாற்று நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் மக்கள் அணி திரள வேண்டும்.


சமூக சீர்திருத்த, சமூக நீதி சார்ந்த கொள்கைகளையும் உள்ளடக்கி, பொருளாதார சமத்துவம் நோக்கிய புதிய பாதையில் நாம் பயணிக்க வேண்டும். அந்தப் புதிய பாதை வேறு தெரிவு இல்லாத நிலையில் தேசிய மக்கள் சக்தியைத் தெரிவு செய்து அதனை   நோக்கி மக்கள் நகர்ந்ததில் வியப்பில்லை. தற்போதைக்கு அவர்களது நிகழ்ச்சி நிரல்தான் பெருவாரியான உழைக்கும் மக்களை உளப்பூர்வமாக வென்றெடுக்கும் அச்சாணியாகத் திகழும். இந்த மாற்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, மக்கள் அணிதிரட்டப்பட்டால், நமது தாய்நாட்டை பிற்போக்குவாதிகளின் பிடியிலிருந்து அகற்றி, மக்கள் சமத்துவத்தை நோக்கி பயணிக்கும் சூழலை ஏற்படுத்த முடியும்.

பொருளாதார சமத்துவத்தையும் அதன் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் வகையில் மறுசீரமைக்கும் திட்டம் மற்றும் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தித் தூய்மைப்படுத்தும் அவர்களது செயற்திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் உறுதியான ஆதரவு தேவை. பாராளுமன்றத்திற்கான இப்போரில் வசதியான வெற்றிபெறத் தவறினால் அவை அனைத்தும் விழலுக்கிறைத் நீராகவே முடியும். முடிவைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 தற்போதைய தேவை பிரதிநிதித்துவ அ0திகரிப்பா  அல்லது தகுதியும் திறமையுமா?

பெருமளவிலான முஸ்லிம் வாக்குகள் தேசிய மக்கள் சக்தியை நோக்கி நகர்வதால் பாராளுமன்றத்தில்  முஸ்லிம் பிரதிநிதித்துவம் வெகுவாகக் குறைந்துவிடும் எனச் சிலர் அங்கலாய்ப்பதைக் காணமுடிகிறது. 


முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுக்கவும் சேவைகளைப் பெற்றெடுக்கவும் பாராளுமன்றத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பயன்பட்டதாக வரலாறு இல்லை. மாறாக அலாதியான அறிவுத்திறன் மற்றும் ஆழமான பார்வையும் கொண்ட தனிமனித ஆளுமைகளின் சிந்தனையும் செயல்பாடுகளுமே அவற்றை சாத்தியமாக்கியுள்ளது. 

உதாரணமாக, ஒரு காலத்தில் முஸ்லிம்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் தனியொருவராக நின்று இலங்கை வரலாற்றில் இதுவரை யாருமே செய்திராத அளவு பல சேவைகளைப் புரிந்த கலாநிதி பதியுத்தீன் மஹ்மூதை யாரும் இலகுவில் மறந்திருக்க முடியாது. நாட்டின் நிலைமைகளுக்கு ஏற்ப தமது நோக்கங்களை நிறைவேற்றுவதில் அவரது தன்னிகரற்ற திறன் தனது கருத்துகளை கட்சியின் கருத்துகளுக்கு முரண்படாத வகையில் மக்களிடம் கொண்டு செல்வதில் அவருக்கிருந்த இயல்பான திறமை என்பன அவரை ஒரு தலைசிறந்த தலைவராக்கியிருந்தது. 


அதேபோல கலாநிதி டீ.பி. ஜாயா, சேர் ராஸிக் பரீத் போன்றோரும் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இணைந்து பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தமது பணிகளை சிறப்பாக செய்து வரலாற்றில் தடம் பதித்தனர். நமது கலாசாரம், அரசியல் மற்றும் வரலாறு ஆகியவற்றிற்கு அவர்கள் ஆற்றிய வளம் மிக்க பன்முகத் தன்மைகொண்ட பங்கு ஈடு இணையற்றது.

 சுருக்கமாக சொன்னால் அவர்கள் அனைவரும் ஒரே ஒரு முட்டையை இட்டு கொக்கரித்து ஊரைக் கூட்டும் கோழியைப்போலல்லாமல் ஆயிரம் முட்டைகளை இட்டு அமைதி காக்கும் ஆமையைப்போல எவ்வித ஆரவாரமுமின்றி சமூகத்திற்கும் நாட்டிற்கும் தம்மாலான பணிகளை செவ்வனே நிறைவேற்றி மனநிறைவு கொண்டனர். 


ஆனால் கடந்த காலங்களில் முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் அதிகரித்திருந்தாலும் அவர்களுள் பெரும்பாலானோர் அநீதிக்கும் அராஜகத்திற்கும் துணைபோனவர்களாகவே மக்கள் அறிந்திருந்தனர். இன்னும் சிலர் ஊழல்களிலும் கடத்தல்களிலும் ஈடுபட்டு சமூகத்திற்கு தீராத அவமானத்தைத் தேடித் தந்தனர். சுருக்கமாக சொல்வதென்றால் அவர்கள் தமது பதவிக்குரிய மகத்துவத்தை மறந்து பாராளுமன்றத்திற்கு உள்ளே கை தூக்குபவர்களாகவும் பாராளுமன்றத்திற்கு வெளியே கை நீட்டுபவர்களாகவும் காலத்தை ஓட்டியதையே நாம் கண்டோம். இப்போது மீண்டும்  புதிய முகமூடிகளுடன் புதிய கூட்டணியில் மக்கள் முன் எழுந்தருளியுள்ளனர். 


எனவே இவர்கள் மூலமாக ஏற்படும் பிரதிநிதித்துவ அதிகரிப்பு தேவைதானா என்பதை முஸ்லிம் வாக்காளரே தீர்மானிக்கட்டும். ஏனென்றால் மக்கள் இப்போதெல்லாம் ஒரு கட்சிக்கோ தலைவருக்கோ கட்டுப்பட்டு  கண்மூடித்தனமாக வாக்களிப்தை விட்டு சுயமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள்!

J



Sunday, September 15, 2024


ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியும் மாற்றுக் கட்சிகளும்

 


பெரும்பான்மை சிங்கள வாக்குகளால் மட்டுமன்றி சிறுபான்மையினரான தமிழர்களினதும் முஸ்லிம்களினதும்   வாக்குகளினாலும் தமது வெற்றி நிர்ணயிக்கப்படுமானல் அந்த வெற்றி  முழுமை பெறும் என்ற அநுர குமார திஸாநாயக்க அவர்களின்  அண்மைக்கால அரைகூவல்கள் இந்த நாட்டின் சிறுபான்மையினரின் மனங்களில் ஒரு உத்வேகத்தை ஏறபடுத்தியுள்ளது. அதற்குப் பதில் அளிக்கும் வகையில் கடந்த கால கசப்பான அனுபவங்களால் விரக்தியடைந்துள்ள சிறுபான்மையினர் குறிப்பாக  முஸ்லிம் வாக்காளர் முன்னெப்போதும் இல்லாத வகையில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக அணிதிரண்டு வருகின்றமையைக் காணக்கூடியதாக உள்ளது. இதனால் மிரண்டுபோயுள்ள மாற்றுக் கட்சியினர் தாம் இதுவரை அனுபவித்து வந்த சுகபோகங்களையும் அதிகார பலத்தையும் இழந்து வெற்று மனிதர்களாக வாழவேண்டிவரும் என்ற ஆதங்கத்தினாலும் தாம் இதுவரை கொள்ளையடித்த சொத்துகளுக்கெல்லாம் பதில் சொல்லியாக வேண்டுமே என்ற அச்சத்தினாலும் அவர்களுக்கு எதிராக அவதூறுகளைப் பரப்பியும் விஷமப் பிரசாரங்களை மேற்கொண்டும் மக்களிடையே  விஷக் கருத்துகளை விதைத்து ஒரு மனமாற்றத்தை ஏற்படுத்தி அதனைத் தங்களது வாக்கு வங்கி அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள முனைந்துள்ளனர்.


 ஒரு சமூகத்தை, மற்றொரு சமூகத்திற்கு எதிராக நிறுத்துவது, இன மோதல்களைத் தோற்றுவித்து வெறுப்புணர்வைத் தூண்டுவது,  ஆகியவற்றில் இந்தப் பிற்போக்கு வலதுசாரிக் கட்சிகள் கில்லாடிகள் என்பது சொல்லித்தெரியவேண்டியதில்லை. இருந்தாலும், இந்தப் பூச்சாண்டிக் கதைகளையெல்லாம் நம்பியகாலம் மலையேறிவிட்டது என்பதை மக்கள் அவர்களுக்கு உணர்த்தி வருவதையே நாம் காண்கிறோம்.


எனவே கொஞ்சம் கண் அசந்தாலும் கடந்த காலங்களில் நாட்டின் வளங்களை சூறையாடி உண்டு கொழுத்த பெருச்சாலிகள்  தமக்கு முடியுமான வழிகளில் தனது நிகழ்ச்சி நிரலைத் தொடர்ந்து முன்னெடுக்கவே முயற்சிக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக, மக்கள் தீர்ப்பைப் புறந்தள்ளி மதநல்லிணக்கத்தையும் மக்கள் ஒற்றுமையையும் பலவீனப்படுத்த முயற்சிப்பதோடு, இந்நாட்டு,  பெருமுதலாளித்துவ நிறுவனங்கள் நலன் காக்கும் பாதையிலேதான் அவை தொடர்ந்தும் பயணிக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.  பல்வேறு சமூகங்களுக்கு இடையில் உள்ள சமச்சீரற்ற உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் அறிவுசார்ந்த தீர்வுகளை முன்வைத்து ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் மூலமே பிரித்தாளும் இந்த பிற்போக்குவாதிகளின் தந்திரத்தை நம்மால் முறியடிக்க இயலும் என்பதையும் உண்மைப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் தவிர்ப்பதால் அது சாத்தியமில்லை என்பதையும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.


எனவே நமது போராட்டக்களம் இதனுடன் சுருங்கி நின்று விட முடியாது. எனவே இவர்களது ஊழல் மலிந்த  மக்கள் விரோத கொள்கைகளைத் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டிய பெரும் பணி தேசிய மக்கள் சக்தியின் முன் உள்ளது.   எனவே வர்க்க வெகுஜன போராட்டங்களை விரிவுபடுத்தி, அவற்றின் அரசியல் புரிதலை வலுப்படுத்தி,  ஜனநாயக சக்திகளை முன்னேற்றுவது தேசிய மக்கள் சக்தியின் முன் உள்ள மாபெரும் அரசியல் கடமையாகும். 

தவறினால் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்திலேறிய கதைதான்!

.

Sunday, September 1, 2024


 

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்களின் வகிபாகம்


அநுரகுமார திஸாநாயக்கவினதும் அவரது தேசிய மக்கள் சக்தியினதும் அண்மைக் காலத் திடீர் எழுச்சியால் கலவரமடைந்த மாற்றுக் கட்சியினர் பலர் அவர்களது கடந்த காலக் குப்பைகளைக் கிளரி இரை மீட்கத் தொடங்கியுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் ஜே.ஆர் ஜயவர்தன 1977இல் ஆரம்பித்து வைத்த 'பீஷன யுகய' எனப்படும் சாபத்திற்குரிய 17 வருடகால அராஜக ஆட்சி, அதனைத் தொடர்ந்து ராஜபக்ஷக்களின் ஊழல் மலிந்த இனவாத ஆட்சி மற்றும் திருடர்களைப் பிடிக்க வந்த நல்லாட்சி நாயகர்களின் மாபெரும் வங்கிக் கொள்ளை, ஈஸ்டர் படுகொலை, அதனைத் தொடர்ந்து முஸ்லிம்கள் வேட்டையாடப்பட்டமை போன்றவற்றுடன் ஒப்பிடுகையில் அது ஒன்றும் அந்த அளவு மோசமானதொன்றல்ல என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர்.

  

முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் இந்த ஜனாதிபதித் தேர்தல் பலவகையில் முக்கியத்துவம் பெறுகிறது. அவர்கள் முதன்முறையாக தமது பாரம்பரிய வலதுசாரி யு.என்.பி மனப்பாங்கிலிருந்து விடுபட்டு குறிப்பாக இளைஞர் அணியொன்று  வேறொரு தெரிவு இல்லாத நிலையில், மாற்றத்தை வேண்டி மூன்றாவது அணியான தேசிய மக்கள் சக்தியைத் தெரிவு செய்து பரந்த அளவில் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டும் கூட்டங்களை ஏற்பாடு செய்தும் ஆதரவளித்து வருகின்றமையைக் காணமுடிகிறது. இது 'எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் போடாதீர்கள்'  என்ற கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத் அவர்களது அறிவுரையை நினைவூட்டுகிறது. 

அண்மைக் காலங்களில் இனமுரண்பாட்டுக் கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே. அவர்கள் அனுபவித்த இன்னல்கள், இழந்த சொத்துக்கள், தம்மால் தெரிவு செய்யப்பட்ட  அரசியல்வாதிகளால் அவர்கள் அடைந்த அவமானங்கள், நம்பிக்கைத் துரோகங்கள் மற்றும் ஏமாற்றங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட விரக்தி நிலையே இந்த முடிவுக்கு அவர்களை உந்தித் தள்ளியுள்ளது என ஊகிக்கலாம். ஊடகவியலாளர்களும், அரசியல் ஆய்வாளர்களும் இதற்கு பல விளக்கங்களை அளிக்கலாம். மக்கள் இயக்கங்களும் தனிப்பட்டவர்களும்கூட ஆரூடங்களில் இறங்கி விவாதிக்கலாம் ஆனால் அவர்களது முடிவு சரியானதா தவறானதா என்ற விவாதம் இங்கு அவசியமற்றது, இது அவர்கள் சுயமாக சிந்தித்து நாட்டினதும் சமூகத்தினதும் நலன் கருதி எடுத்த நல்ல முடிவு என்றே தோன்றுகிறது. முஸ்லிம்களின் மத்தியில் ஏற்பட்டுள்ள இந்தப்பாரிய மனமாற்றத்தைப் பார்க்கும்போது  அவர்களது வாக்குகள் ஒரு வேளை ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் வாக்காகவும் அமையலாம் என எண்ணத் தோன்றுகிறது.

ஜே.வீ.பீ.யின் மறக்க முடியாத  கடந்த கால கசப்பான  வரலாற்றை யாரும் மறுப்பதற்கில்லை. இருந்தாலும், தமது எல்லாவகையான திருட்டுத் தனங்களையும் கொடூரமான இன வன்முறைகளையும் படுகொலைகளையும் முடிமறைத்து  மீண்டும் புதிய முகமூடிகளுடன் வாக்குப் பிச்சை கேட்டு மக்கள் முன் வந்திருக்கும் பாதாளக் கோஷ்டியினரின் அணுசரனையுடன் ஆட்சி புரிந்த பழைய கேடிகளுடன்  ஒப்பிடுகையில் நடுநிலையில் சுயமாக சிந்திக்கும் ஒருவர் வேறு வழியின்றி Best among the worst என்ற அடிப்படையில் அவர்களைத் தெரிவு செய்வதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தப்போக்கு இதுவரை நிலவிவந்த முறைமையை மக்கள் வீழ்ச்சியடைய செய்திருக்கிறார்கள் என்பதையும் கணிசமான மக்கள் அந்தக் கொள்கைகளை நிராகரித்துள்ளனர் என்பதையுமே தெளிவாக்குகிறது.


தேசிய மக்கள் சக்தியைத் தவிர இத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் ஒரே கருவறையில் பிரசவிக்கப்பட்ட குழந்தைகள் என்பதை அனைவரும் அறிவர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள்தொட்டு அவர்களது கட்சித் தாவல்கள் அதனையே எடுத்துக் காட்டுகின்றது. எனவே  அவர்களது நிகழ்ச்சி நிரல் என்பது  ராஜபக்ஷ குடும்பத்தின் நிகழ்ச்சி நிரலான அதே ஊழல்கள் நிறைந்த இனவாத இலக்குதான் என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த நிலையில் ஆட்சி அதிகாரம் மீண்டும் அவர்கள் கையில் சிக்குமானால், மதசுதந்திரம், சுதந்திரமான நீதித்துறை, ஜனநாயகம் உள்ளிட்ட நமது நாடு எதிர்காலத்தில் கட்டியெலுப்ப வேண்டிய சிறந்த கோட்பாடுகளை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கைகளில் மேலும் முனைப்புடன் செயல்படுவர் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. அதேபோன்று அடித்தட்டு வர்க்கங்களின் நலன்களைக் காவு கொடுத்து, மேலும் மேலும் முதலாளித்துவ வர்க்கங்களின் நலனுக்கான பொருளாதாரத்தை முன்னெடுக்க, முன்பைவிட முனைப்பாக முயற்சிப்பர். எனவே அதனைத் தடுக்கும் வகையில், மக்களிடையே விழிப்புணர்வை வலுப்படுத்துவதும், மக்கள் இயக்கங்களை தீவிரப்படுத்துவதும்,  மக்கள் சக்தியை ஒருங்கிணைத்து, போராட்டங்களை முன்னெடுப்பதும் இன்றைய அவசர கடமைகளாக உள்ளன. எதிர்ப்புணர்வு என்பதுடன் மக்களின் அரசியல் புரிதல் நின்றுவிடக் கூடாது. முன்னைய அரசாங்கங்களினால் பின்பற்றப்பட்டு வந்த பிற்போக்கு சித்தாந்தங்கள் அடியோடு அகற்றப்பட வேண்டும். இந்தத் தேர்தலோடு இந்தக் கொள்கைக்கு எதிரான போராட்டம் முடிவடைந்து விடப்போவதில்லை. வலதுசாரி பிற்போக்கு கருத்தியலுக்கு எதிரான போராட்டம் தொடரவே செய்யும்.

முஹம்மத் றஸீன்

Wednesday, July 31, 2024

 பழையன கழிதலும் புதியன புகுதலும்

- முஹம்மத் றஸீன்

இலங்கையில் இப்போதெல்லாம் தேர்தல் ஜூரம் கொவிட்டைவிட வேகமாகப்பரவிவருவதைக் காண முடிகிறது. தேர்தலில் யார் ஜெயிப்பார்கள் என்று கணிப்பீடு செய்வதில் வாக்காளர்களைவிட அரசியல்வாதிகளே அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். கட்சி கொள்கைகள் எல்லாவற்றையும் மூட்டைகட்டி வைத்துவிட்டு எந்தப்பக்கம் தாவினால் தாம் எதிர்பார்த்திருக்கும் பதவியைப் பெறலாம் என்பதில் அரசியல்வாதிகள் கண்ணும் கருத்துமாக உள்ளனர். இதற்கிடையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ தேர்தல் தினம் அறிவிக்கப்பட்ட பின்பும் தனது பதவியை நீட்டிக்கவும் தேர்தலைத் தள்ளிப் போடவும பகீரதப் பிரயத்தனம் எடுத்து வருவதையும் காண முடிகிறது. ஒருபுறம் பொய்களும் புரட்டுகளும் வதந்திகளும் கபடநாடகங்களும் அரங்கேறிக்கொண்டிருக்க மறுபுறம் அரசியல் ஆரூடங்களும் வீராப்புப் பேச்சுகளும் விஷமப் பிரசாரங்களும் பெரும் பிரவாகமெடுத்துப் பாய்ந்தோடிக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தேசிய மக்கள் சக்தியின் மேதினப் பேரணிகளிலும் அவர்களது பிரசாரக் கூட்டங்களிலும் ஒருபோதுமில்லாத வகையில் இன, மத, மொழி கடந்த மாபெரும் மக்கள் பங்கேற்பினைக் கண்டு கதி கலங்கிப் போயுள்ள ஏனைய கட்சிகள் தேசிய மக்கள் சக்தியைத் தமது பொது எதிரியாகக் கருதி நிலையான கூட்டணிகளை உருவாக்கி அதன் முன்னேற்றத்தைத் தடுக்கும் உத்திகளை ஆராய்கின்றன.   

அரசியலில் தனிக்காட்டு ராஜாவாக இதுவரை கோலோச்சிவந்த முக்கிய புள்ளிகள்  தமது எதிர்காலம் என்னாகுமோ என்ற அச்சத்தில் எந்தப்பக்கம் தாவினால் தப்பலாம் எனப் புலிகளைப்போலப் பதுங்கிப் பார்த்திருக்கின்றனர். இன்னும் சிலர் அசட்டுத் துணிச்சலுடன் வருவது வரட்டும் என வாய்ச்சவடால் விட்டும் வாய்கிழியக் கர்ஜித்துக்கொண்டும் திரிகின்றனர். எவ்வாறாயினும் இதுவரை அடங்காப்பிடாரியாக அதிகாரத்தைப் பற்றிப் பிடித்து நாட்டைச் சீரழித்து இழிநிலைக்குத் தள்ளிய ஒருசிலர் அரசியல் அஞ்ஞாத வாசத்தை அனுபவிக்க நேரிடும் என்பது மட்டும் உறுதி. அவர்களுள் ஒருசிலர் தேர்தலுக்கு முன்பே தலை தப்பினால் போதும் என நாட்டைவிட்டுத் தப்பியோடினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சுதந்திரத்தின் பின்னரான நமது நாட்டுப் பொருளாதாரம் தாராளமயப் பாதையில் ஆரம்பித்து இடையில் சிலகாலம் சோஸலிஸப் பாதையில் பயணித்து 1977க்குப்பின் அதிதீவிர தாராளமய காப்ரேட் ஆதரவுக் கொள்கைகள் அடங்கிய ஒரு திறந்த பொருளாதாரத்துக்குள் பிரவேசித்தது. தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய இப்பாதை இலங்கை வரலாற்றில் இதுவரை யாருமே கண்டிராத அடக்குமுறைகளும் அராஜகங்களும் அட்டூழியங்களும் இனவன்முறைகளும் தலைவிரித்தாடி  இந்நாட்டு அரசியல் வரலாற்றின் போக்கையே மாற்றியமைத்தது. இவ்வாறு  1977 முதல் ஜே.ஆர். ஜெயவர்தன பின்பற்றிய மெக்கியாவலி சித்தாந்தங்கள் பல பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியது. இதனால் நாட்டின் தொழிலாளர் வர்க்கமும் சிறு தொழில் முனைவோரும் கடும் சிரமங்களை எதிர்நோக்கியதோடு பின்னாட்களில் பாதாள உலகக் கோஷ்டியினரும் ஊழல் பேர்வழிகளும் பாராளுமன்றக் கதிரைகளை அலங்கரிக்கவும் அவர்களது ஆதிக்கம் மேலோங்கவும் வழி வகுத்தது. எனவே மாமனார் ஜே.ஆர். முதல்  மருமகன் ரணில் வரையிலான ஆட்சி காலத்தில் அராஜகமும் இன வன்முறைகளும் வளர்ந்த அளவுக்கு பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, வறுமை ஒழிப்பு, மக்கள் வாழ்க்கைத்தர மேம்பாடு ஆகிய முக்கிய அம்சங்களில் வளர்ச்சி ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே எதிர்வரும் தேர்தலில் பழைய முகங்களை நிராகரித்து நாம் அனைவரும் விரும்பும் மாற்றமொன்று நிகழ்ந்து இன்றைய அரசியல் நாடகத்தில் ஒரு புது முகம் அறிமுகமானாலும் இதுவரை புரையோடிப்போயுள்ள மேசமான மதவெறி அரசியல் விளைவுகளை முற்றாகத் துடைத்தெறியப் போராடவேண்டியிருக்கும் அதேசமயம் அரசின் அதிதீவிர தாராளமய காப்ரேட் ஆதரவுக் கொள்கையை நிராகரித்து உழைக்கும் வர்க்கத்திற்கும் நாட்டு வளர்ச்சிக்கும் அத்தியவசிய மாற்றுக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பெரும் சவாலையும் அவர் எதிர்கொள்ள நேரிடும். அதேநேரம் அவர்களைக்கொண்டு அவற்றைச் செய்விக்கும் திறன் கட்சிகளாலும் கொள்கைகளாலும் பிளவுபட்டிருக்கும் நமக்கு, குறிப்பாக நமது இளைஞர் சமுதாயத்திற்கு இருக்குமா? அதற்கு நமது அரசியல் யாப்பு இடம் தருமா? என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும் விரக்தியின் விளிம்பில் வாக்களிக்கச் செல்லும் பெரும்பாலானவர்கள் 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து, வருவதை எதிர்கொள்ளத் தயாராகிவிட்டதாகவே தோன்றுகிறது.   



 


Monday, November 20, 2023

 ராஜபக்ஷக்களின் சிவில் உரிமை பறிக்கப்படுமா?





1977இல் பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்த JR. ஜெயவர்தன  முன்னைய ஆட்சியின்போது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி சிரிமாவோ பண்டாரநாயக்க, பீலிக்ஸ் டயஸ், AHM. பவுஸி உள்ளிட்ட பலரது சிவில் உரிமைகளைப் பறித்து அவர்களை செல்லாக் காசாக்கியதை யாரும் இலகுவில் மறந்திருக்க முடியாது. 


ஆனால் ஜேஆரினது அளவிட முடியாத அதிகார துஷ்பிரயோகம், அரச பயங்கரவாதம் என்பன பற்றி யாரும்  பேசவே அஞ்சும் அளவுக்கு அவரது அதிகார பலம் பன்மடங்கு மேலோங்கி இருந்தது என்பது வேறு கதை.


இன்று அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்க ஆட்சி காலத்தில் நாட்டின் இன்றைய பொருளாதாரம் அதல பாதாளத்துக்குள் தள்ளப்பட்டுள்ளமைக்கான மூல காரணம் ராஜபக்ஷ சகோதர்களினதும் அவர்களது சகாக்களினதும் நிர்வாக சீர்கேடுகளே என இலங்கையின் அதிஉயர் நீதிமன்றம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினை வழங்கி உள்ளது. அதேநேரம் அவர்கள் தொடர்பான சட்டவிரோத சொத்துக் குவிப்பு, ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகள் என்பன பற்றிய குற்றச்சாட்டுகளும்  வழக்குகளும் வாதப்பிரதிவாதங்களும் இன்றுவரை அனைவரதும் பேசுபொருளாக உள்ளமை நாடறிந்த உண்மையாகும்.


கேள்வி என்வென்றால்,  அவர்களது தயவில் பதவியில் அமர்ந்த ரணில் விக்கிரமசிங்க மாமனாரின் வழியைப் பின்பற்றி சிரிமாவோ அம்மையாருக்கும் அவரது சகாக்களுக்கும் வழங்கிய அதே தண்டனையை வழங்குவாரா அல்லது தொடர்ந்தும் அவர்களது ஆபத்பாந்தவனாக அவர்களது குற்றச் செயல்களை மறைத்து அவர்களைப் பாதுகாக்க முற்படுவாரா என்பதே! அதேநேரம் ரணில் தமது பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு ஆயுதமாகவே இந்த நீதிமன்றத் தீர்ப்பு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரவலாகப் பேசப்படுகிறது.


ஒரு நாடு குறிப்பாக பல்லின சனத்தொகையுள்ள ஒரு நாடு சட்டத்தின் ஆட்சியிலேயே ஆளப்படவேண்டுமே  தவிர தனிமனிதனால் அல்ல என்பதைக் கடந்தகால ஆட்சியாளர்கள் மூலம் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். எனவே மக்கள் எதிர்பார்ப்பது, குறைந்தபட்சம்  ராஜபகஷக்கள் கொள்ளையடித்த கோடிக்கணக்கான சொத்துக்களையாவது  மீட்டு அதன் மூலம் நலிவடைந்துள்ள தமது வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான்! ஆனால் ரணிலிடமிருந்து இவற்றை எதிர்பார்க்க முடியாது என்பதையே அவரது தற்போதைய நடவடிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன.


எவ்வாறாயினும் அடுத்த தேர்தலை மனதிற்கொண்டாவது இந்த நீதிமன்றத் தீர்ப்பினைப் பயன்படுத்தி ராஜபக்ஷக்களின் அடாவடித்தனங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து மக்களுக்கு நிவாரணத்தை வழங்குவாரா அல்லது வழமைபோல இந்த முறையும் தோல்வியைத் தேடிக்கொள்வாரா என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

Tuesday, July 18, 2023


அநுர குமார அரசகட்டில் ஏறுவாரா?



இப்போதெல்லாம் அனேகமானோர் பொருளாதாரத்தில் அதலபாதாளத்தில் தள்ளப்பட்டுள்ள நம் நாட்டை மீட்டெடுத்து கட்டியெழுப்பக்கூடிய வலிமை ஜே.வீ.பி. தலைமையிலான தேசிய மக்கள்  சக்திக்குத்தான் உண்டு எனக் கருதுவதாகத் தெரிகிறது. இதேபோன்றுதான் கடந்த தேர்தலில் பலவிதமான அச்சுறுத்தல்களிலிருந்தும் நாட்டைப் பாதுகாத்து ஒரு ஸ்திரமான இலங்கையை உருவாக்குவதற்கு கோத்தாபயதான் சிறந்த தெரிவு என நம்பி வரலாறு காணாத வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுத்தனர். ஆனால் நடந்தது என்ன? ஒரு வருடம்கூட அவரால் தாக்கு பிடிக்க முடியாமல் பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என தலை தெரிக்க ஓடிய கதையையும்  அதற்கு முன் நல்லாட்சி என்ற பெயரில் கள்வர்களைப் பிடிக்க வந்தவர்கள் கல்லாப் பெட்டியிலேயே கை வைத்த கதையையும் தற்போது நல்லாட்சியின் நாயகன் தண்டப்பணம் செலுத்துவதற்காகக்  கையில் பிச்சா பாத்திரத்தை ஏந்தியுள்ள பரிதாபக் காட்சிகளையும்தான் நாம் கண்டோம். 

இன்னொரு பக்கம் 'அறிந்தறிந்தும் யானை தன் பாகனையே கொல்லும்' என்பது போல மீண்டும் ஒரு கூட்டம் வீழ்ந்த நாட்டைத் தூக்கி நிறுத்தி பெரும் இக்கட்டிலிருந்து நாட்டைமீட்டெடுக்கும் ஆபத்பாந்தவனாக ரணிலைக் கொண்டாடத் தெடங்கியுள்ளனர். இவ்வாறு பெரும் எதிர்பார்ப்புடன் ஒருவரை ஆட்சியில் அமர்த்துவதும் பின்னர் ஏமாந்து பின்வாங்குவதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது.

இவ்வாறான ஒரு பின்னணியில்தான் ஜே.வீ.பி. அதன் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தலைமையில் முற்போக்குவாதிகள் எனக் கூறப்படும் சக்திகளை ஒன்றுதிரட்டி தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் அடுத்த தேர்தலுக்கு முகம்கொடுக்க முன்வந்துள்ளது. ஆனால் பல விடயங்களில், குறிப்பாக சிறுபான்மையினர் தொடர்பான விடயங்களில் அவர்களது போக்கும் கொள்கைகளும்  இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இலங்கையில் இதுவரை நடைபெற்ற, நடைபெறுகின்ற அல்லது நடைபெறப்போகும் அனைத்து அரசியல் செயல்பாடுகளுக்கும் பின்னணியில் ஒரு வெளிநாட்டு நிகழ்ச்சி நிரல் உண்டு என்பதை இங்குள்ளவர்கள் அடிக்கடி மறந்துவிடுகின்றனர் அல்லது அறியாதிருக்கின்றனர். நாம் அண்மைக்காலமாக அனுபவித்த அவலங்களே அதற்கான சான்றுகள். எனவே ஆளைமயக்கும் பேச்சுகளுக்கும் அதனை செவிமடுக்க அணி திரளும் மக்கள் கூட்டத்தினரையும் கண்டு கண்மூடித்தனமாக செயல்படாது மக்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

இந்த நாட்டில் சிறுபான்மையினரைப் பொறுத்தவரையில் ஆட்சியைக் கைப்பற்றும் சக்தி அற்றவர்கள். அதனால் தமக்குரிய உரிமைகளைத் தெரிந்துகொள்வதற்கும் அவற்றை வென்றெடுப்பதற்கும் அயராது போராடவேண்டியுள்ளது. இன்று அவர்கள் பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி விரக்தியின் விளிம்பில் விழி பிதுங்கி நிற்கின்றனர். சிறுபான்மையினர் மனதில் வேறுன்றியுள்ள ஜே.வீ.பி தொடர்பான சந்தேகங்களைக் கலைந்தெறிவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு மக்கள் முன் வைக்கப்படவேண்டும். அதில் அவர்களது காணிப் பிரச்சினை, மீள்குடியேற்றம், கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு போன்றவைகளும் உள்ளடக்கப்பட வேண்டும். அதேநேரம் ஜே.வீ.பியின் கரை படிந்த கடந்தகால வரலாறுகளை மக்கள் இன்னும் மறந்திருக்கமாட்டார்கள். அவர்களது எச்சசொச்சங்கள் விக்டர் ஐவன், வீரவன்ஸ போன்ற வடிவங்களில் இன்னும் உலாவித் திரிவதையும் மக்கள் அறிந்தே வைத்துள்ளனர்.  எனவே இன்றைய ஜே.வீ.பியினர் அவ்வாறானவர்கள் அல்லர் என வாதிடுவோர் அதன் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தி பாமர ஜனங்களின் நம்பிக்கையை வெல்ல முன்வரவேண்டும். 

எவ்வாறாயினும் இவர்கள் மூலம் மூன்றாவது அணியொன்று உருவாகி நாட்டில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுமானால் நாட்டின்மீது அபிமானம்கொண்ட அனைவரும் வரவேற்கவே செய்வர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அது அவ்வளவு இலகுவான காரியமல்ல என்பதையும் மக்கள் நன்கு அறிவர். பதவியில் ருசி கண்ட பெருச்சாளிகளும் குள்ளநரிக் கூட்டங்களும் ஏன் வெளிநாட்டு மறை கரங்களும்கூட அதனை ஒருமுகமாகக் கிள்ளியெறியவே முற்படும். எல்லாவற்றிற்கும் மேலாக வாக்காளர் மனம்மாறி அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் கட்சிக்கு வாக்களித்து அவர்களை அரசகட்டில் ஏற்றுவார்களா? அல்லது தெரியாத தேவதையைவிட தெரிந்த பேய்களே பரவாயில்லை எனக் கைகளை விரித்து இன்னொரு பொல்பொட் ஆட்சிக்கு வழி விடுவார்களா?  என்பன போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகாண அடுத்த தேர்தல்வரை பொறுத்திருந்துதான் ஆகவேண்டும்.