Tuesday, July 7, 2020

உலகின் முதல் பெண் பிரதமர்

1916 ஏப்ரல் 16ம் திகதி பார்ன்ஸ் ரத்வத்த திசாவ மற்றும் மஹவெலத்தன்ன குமாரிஹாமி தம்பதிகளுக்கு மூத்த புதல்வியாகப் பிறந்தவர்தான் சிறிமாவோ ரத்வத்த. அவர் பிறந்த நேரத்தில்  யானைக்கூட்டம் ஒன்று வீட்டின் வளவுக்குள் பலவந்தமாக நுழைந்தாகவும் அது ஒரு நல்ல சகுனமாகக் கருதப்பட்டதாகவும் கூறப்படுகின்றது

சிறிமாவின் ஜாதகத்தை கணித்த ஒரு ஜோசியர் அவர் இந்நாட்டின் அரசியாகும் யோகம் கொண்டவர் எனக் கூறினார். அக்காலத்தில் இலங்கை பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தமையால் 'அதெப்படி ஒரு பெண்ணால் நாட்டை ஆளமுடியும்?' என்ற எண்ணத்தில் அனைவரும் அதனை  வெறும் வேடிக்கைப் பேச்சாகவே கருதினர்.

கொழும்பு சென். பிரிஜட்ஸ் கல்லூரியில் சீனியர் கேம்பிரிட்ஜ் வரை கல்வி கற்ற சிறிமாவோ தன்னை விட 17 வயது மூத்த ஹொரகொல்ல வளவேயின் மஹாமுதலியாரின் புதல்வரான எஸ்.டபிள்யூ.ஆர்.டீ பண்டாரநாயக்கவை மணந்து கொண்டார். சிறிமாவோ ரத்வத்த, இலங்கையின் பிரபல்யம் மிக்க ஒரு குடும்பத்தில் பிறந்து இன்னொரு பிரபல்யம் மிக்க குடும்பத்திற்கு வாழ்க்கைப்பட்ட ஒரு சீமாட்டியாக வாழ்ந்தார். இந்தத் திருமணம் மலைநாட்டு சிங்களவர்களுக்கும் கரைநாட்டு சிங்களவர்களுக்கும் இடையேயான ஒன்றிணைப்பாக அன்று பேசப்பட்டது.

அரசியலுக்கு பின்னரான சிறிமாவோ பண்டாரநாயக்கவின் வாழ்க்கை குறித்து பல்வேறு கருத்துக்களும், விமர்சனங்களும் நிலவுகின்றது. இருப்பினும் ஒரு மகளாக, மனைவியாக, அன்னையாக அவர் கடந்துவந்த வாழ்க்கையின் அத்தியாயங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

பண்டாரநாயக்கவின் திடீர் மறைவும், தஹநாயக்கவின் நிர்வாகமும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்தது. சுதந்திர கட்சியின் நிலைகுறித்து கவலை கொண்ட கட்சி ஆதரவாளர்கள் சிறிமாவோவின் ஆதரவை வேண்டி நின்றனர். ஆரம்பத்தில் தீர்க்கமாக மறுப்பு தெரிவித்த போதிலும், ஒரு கட்டத்தில் கணவருடைய  கட்சிக்காக தான் ஆற்ற வேண்டிய கடமையை உணர்ந்த சிறிமாவோ பண்டாரநாயக்க தேர்தல் அரங்குகளில் கட்சிக்காக பிரசாரங்களை மேற்கொள்ள ஒப்புக்கொண்டார்
.
1960 மார்ச் 19இல் முடிவடைந்த தேர்தலில் எந்த கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை. ஆட்சியமைத்த .தே.கட்சி 30 நாட்களில் நடைபெற்ற சிம்மாசனப் பிரசங்கத்தின்  மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்தமையால் புதிய தேர்தலொன்றுக்கான சூழ்நிலை உருவானது. அதே ஆண்டு ஜூலை மாதத்தில் நடைபெற்ற தேர்தலிலும் சிறிமா தீவிரமாகப் பங்கெடுத்தார். ஆனால் இதனை சிறிமாவோவின் உறவினர்கள் விரும்பவில்லை.

'சிறிமாவோவின் செயலால் குடும்ப கௌரவம் குலையப்போகிறது' என அவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டனர். ஆனால்  பண்டாரநாயக்கவின் கனவை நினைவாக்க முடிந்தவரை போராட வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குக் கைமேல் பலன் கிடைத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மொத்தமாக 75 ஆசனங்களை கைப்பற்றி ஒரு பலமான ஆட்சியை அமைத்தது.

அவர் பிறந்த போது ஜோசியர் கூறியதை மெய்ப்பிப்பது போல, உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பதவியை  ஏற்று உலக அரசியல் வரலாற்றில் நிலையானதொரு பெயரைப் பெற்றார். அதற்குப் பின்னரே மார்க்ரட் டச்சர், கோல்டா மேயர் மற்றும் இந்திரா காந்தி போன்ற பிரபலமான பிரதமர்கள் உலகில் உருவானார்கள்.

1960 தொடக்கம் 1965 வரை பிரதமராகப் பணியாற்றிய அவர், 1965 முதல் 1970 வரை எதிர்க்கட்சிக் கட்சித் தலைவராக இருந்தார். 1970 முதல் 1977 வரையான சிறிமாவோவின் ஆட்சி காலத்தில் இலங்கையின் வரலாறானது ஒரு புதிய கோணத்தில் நகர ஆரம்பித்தது. இலங்கை சுதந்திரம் அடைந்திருந்த போதிலும் பிரித்தானிய அரசரே இலங்கையின் அரசர் என்ற நிலையை மாற்றி, சிறிமாவோ பண்டாரநாயக்க இலங்கையைப் பூரண இறையாண்மை மிக்க ஒரு குடியரசாக மாற்றியமைத்தார். அதுவரை சிலோன் என்று அறியப்பட்ட நம்நாடு 1972 முதல் ஸ்ரீலங்கா ஜனநாயக சோஷலிச குடியரசு என்ற புதிய பெயரை பெற்றது.
எவ்வளவுதான் அறிவுஜீவிகளை அதிகமாகக் கொண்டிருந்த ஒரு முற்போக்கு அரசாங்கமாக அவரது ஆட்சி அமைந்திருந்தாலும் அரசாங்கத்துக்குள்ளேயே இடதுசாரிகளுக்கும் வலதுசாரிகளுக்குமிடையலான பணிப்போர் நாட்டின் அபிவிருத்தியைப் வெகுவாகப் பாதித்தது. 1975இல் இடதுசாரிகளின் வெளியேற்றம், அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை தொடர்பான தவறான பிரசாரங்கள், 1971 ஜே.வி.பி கிளர்ச்சி போன்றவற்றால் அரசாங்கம்  பெரும் சிக்கலுக்கும் சங்கடங்களுக்கும் முகம் கொடுத்தது.

எவ்வாறாயினும்,; பாடசாலைகள் மற்றும் பல முக்கிய நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டமை, புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டமை, சிறிமா-சாஸ்த்ரி உடன்படிக்கை, உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கும்பொருட்டு இறக்குமதிக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை மற்றும் தொழில் வாய்புகளை அதிகரிப்பதற்காக பல கைத்தொழில்கள் உருவாக்கப்பட்டமை போன்ற பல முற்போக்குத்திட்டங்கள் இவருடைய காலத்திலேயே இடம்பெற்றன. ஆனால் மக்கள் இவற்றையெல்லாம் வேறொரு கோணத்திலேயே நோக்கினர்

இந்த நிலையில் 1977 தேர்தலுக்கு முகம் கொடுத்த சிறிமாவோ அம்மையாருக்கு அது ஒரு பேரிடியாகவே அமைந்தது. 1958இல் எவ்வாறு பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டு அவரது முற்போக்குத் திட்டங்கள் முடக்கப்பட்தோ அவ்வாறே ஜே.ஆர். பிரதமரானதும் சிறிமாவோவின் குடியுரிமை உட்பட பல சலுகைகள் பறிக்கப்பட்டு அவர் மீண்டும் தலைதூக்காவண்ணம் ஏறக்குறைய ஒரு தசாப்தத்துக்கு முடக்கி வைக்கப்பட்டார்

1986இல் குடியுரிமையை மீளப் பெற்றதும்; 1989 தேர்தலில் போட்டியிட்டு எதிர்க்கட்சி தலைவராகிய திருமதி பண்டாரநாயக்க, 1994இல் தனது மகள் சந்திரிகா குமாரதுங்கவின் ஜனாதிபதி ஆட்சியில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார். இறுதியில் தன்னுடைய பிரதமர் பதவியை ராஜினாமா செய்த சிறிமாவோ பண்டாரநாயக்க 2000ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் திகதி பொதுத்தேர்தல் ஒன்றில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பும் வேளையில் மாரடைப்பால் உயிர் துறந்தார்.

அரசியல் எனும் பகடையாட்டத்துக்கு அன்று சிறிமாவோ அம்மையார் மறுப்பு தெரிவித்திருந்தால் பிரதமரின் இல்லத்தரசி, ஜனாதிபதியின் அன்னை என்றே அவர் நினைவு கூரப்பட்டிருப்பார். அவர் உலகின் முதல் பெண் பிரதமாக மட்டுமன்றி அணிசாரா நாடுகள் அமைப்பின் தலைவியாகவும் உயர்ந்தார்.

அரசியல் என்ற ஆணாதிக்க உலகினை வெற்றிகொண்டு இன்றளவும் உலக வரலாற்றில் நிலையான பெயரைக் கொண்டுள்ள சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்களின் வாழ்க்கை, அரசியலில் வெற்றிகொள்ள நினைக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு உந்துசக்தியாக அமையும் என்பதை யாரும் மறுக்க முடியாது.


  - முஹம்மத் றஸீன்

Friday, July 3, 2020


முஸ்லிம் தலைவர்களின் முன்னோடி 

வாப்பிச்சி மரிக்கார் அவர்களின் அருமைப் புதல்வர் அப்துல் றகுமான், ஹாஜரா தம்பதியினருக்கு ஏகபுதல்வனாக 29-12-1893 இல் ராஸிக் பரீத் அவர்கள் பிறந்தார்கள். செல்வி பேர்டினன்ட் என்பவரின் கல்விக் கூடத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற சேர் ராஸிக்  அல்-மதுரஸதுல் ஸாஹிராவில் அறபு மொழியையும், புனித குர்ஆனையும் கற்று தனது பதினோராவது வயதில் கொழும்பு றோயல் கல்லூரியில் இணைந்து கேம்பிரிஜ் ஜுனியர் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்.

ராசிக் பரீத் அவர்கள் 1915 ஆம் ஆண்டு தனது 22வது வயதில் இலங்கைப் பாதுகாப்புப் படையில் கோப்ரலாக சேர்ந்தார். 1930ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபை உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்த ராஸிக் பரீத் 1945ம் ஆண்டு வரை 15 ஆண்டுகள் கொழும்பு மாநகர சபை உறுப்பினராகப் பதவி வகித்தார். பின்னர் இலங்கை அரசாங்க சபைக்கு தெரிவுசெய்யப்பட்டார். 1947 முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் பொத்துவில் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1948 சுதந்திரத்திற்கு பின்னர்  செனட் சபை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.

1952ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலும் 1956ஆண்டு தேர்தலிலும் கொழும்பு மத்திய தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சேர் ராஸிக் பரீத் 1959ம் ஆண்டு பிரதமர் பண்டாரநாயக்கவின் இறப்பைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட பிரதமர் தஹநாயக்கவின் அமைச்சரவையில் வாணிபத்துறை அமைச்சராகப்  பணியாற்றினார். 1960ஆம் ஆண்டு மார்ச் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியுற்றாலும். 1960ஆண்டு ஜூலை மாத தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார்.

1930களில் ஆங்கிலக் கல்வியினதும் பெண் கல்வியினதும் முக்கியத்துவத்தை முஸ்லிம் சமுதாயத்திற்கு முன்வைத்த போது, அவர் சமுதாயத்தின் கடுமையான எதிர்ப்புக்கு ஆளானார். எனினும் எல்லாத் தடைகளையும்  தாண்டி தனது சொந்த செலவில் சொந்தக் காணியில் 1946ம் ஆண்டு கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரியை உருவாக்கினார். அதன் அதிபராக ஆயிஷா ரவூப் என்பவர் நியமிக்கப்பட்டார். இங்கு வழங்கப்பட்ட ஆங்கில மொழிக் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு நாட்டின் நாலா புறமிருந்தும் பெண்கள் வந்து குவிந்தமையால் விடுதி வசதியும் செய்யப்பட்டது. அதேநேரம், 1938- 1947 காலப்பகுதியில் சீ.டபிள்யூ.டபிள்யூ. கன்னங்கரா அவர்களைத் தலைவராகக் கொண்ட அரசாங்க சபைக் கல்விக்குழுவில் கடமையாற்றிய சேர் ராஸிக் பரீத் அவர்கள், கிராமப் புறங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பாடசாலைகளை நிறுவும் பணியிலும் வெற்றிகண்டார்.

1937ம் ஆண்டு முஸ்லிம்களுக்கான தனியான ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஒன்றின் தேவையை அரசாங்க சபையில் வலியுறுத்தி 1941ம் ஆண்டு அட்டாளைச்சேனை மற்றும்  தர்கா நகர் ஆகிய இடங்களில் ஆசிரிய கலாசாலைகள் ஆரம்பிப்பதற்கு வழிவகுத்தார். அத்துடன் ஆசிரிய சேவைக்கு அதிக முஸ்லிம்களை இணைத்துக்கொள்வதிலும் அவர்களது முன்னேற்றத்திலும் அதிக அக்கறை காட்டினார். அவர்களது உரிமைகளை வென்றெடுக்கும் பொருட்டு இலங்கை முஸ்லிம் ஆசிரியர் சங்கத்தை அமைப்பதிலும் அவர் வெற்றி கண்டார். அறிஞர் அஸீஸ் மற்றும் சபாநாயகர் எச்.எஸ். இஸ்மாயில் ஆகியோர் கல்வி தொடர்பான அவரது முற்போக்குத் திட்டங்களுக்குத் துணை நின்றனர்.

பெற்றோர் தமது பிள்ளைகளுக்குக் கட்டாயமாக அறபு மொழியைக் கற்பிக்க வேண்டுமென்பதை வலியுறுத்திய அவர், முஸ்லிம் சிறார்களுக்கு பாடசாலைகளில் அறபு மொழி கற்பிப்பதற்குப் பிரத்தியேக ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும், அவர்களை மேற்பார்வை செய்வதற்கு அறபு மொழிக் கல்வியதிகாரிகளையும் நியமிக்க வேண்டுமென 1936இல் அரசாங்க சபையில் பிரேரணையொன்றை முன்வைத்து வெற்றிகண்டார்.

1946ம் ஆண்டு சுதேச மருத்துவக்கல்லூரியில்  இயங்கும் யூனானி மருத்துவப் பிரிவை மூடிவிட முடிவுசெய்தபோது, அன்றைய  செனட் சபையில் சேர் ராஸிக் பரீத் அவர்கள் அதற்குக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு யூனானி மருத்துவத்தின் தேவைப்பாட்டை சபைக்கு தெளிவுபடுத்தினார். அவரது நியாயமான எதிர்ப்பை ஏற்ற சபை 1947ம் ஆண்டு யூனானி மருத்துவப் பிரிவை தொடர்ந்து இயங்க அனுமதி அளித்ததோடு அதன் வளர்ச்சிக்கான திட்டங்களும் வகுக்கப்பட்டு இன்றுவரை சேவையாற்ற வழி சமைத்தார்.

தமிழ் மொழிப் பாடசாலைகளில் ஆரம்பத்தில் முஸ்லிம்களது கலாசாரத்தோடு இணைந்த நூல்கள் அரிதாகவே இருந்தன. இதனால் சோனக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் மூலம் .எல்.எம். இஸ்மாயீல், எஸ். பி. சாமிநாதன் ஆகியோரை ஆசிரியர்களாகக் கொண்டு 'முஸ்லிம் பாலர் வாசகம்' என்ற நூலை வெளியிட்டார்.

பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவராகவும் உப சபாநாயகராகவும் சிறிது காலம் பணியாற்றிய பின் 1968இல் பாகிஸ்தானுக்கான உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட சேர் ராஸிக் பரீத் அவர்கள்  தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி 23-08-1984 இல் இவ்வுலக வாழ்வை நீத்தார். 1948இல் பிரிட்டிஷ் அரசாங்கம் அவருக்கு 'சேர்' பட்டம் அளித்து கௌரவித்தது. நாட்டுக்கும் சமூகத்திற்கும் அவர் ஆற்றிய பணிக்காக 1988ம் ஆண்டு இலங்கை அரசாங்கம் தேசிய வீரர் நினைவு முத்திரையை ஒன்றை வெளியிட்டது.
தலை நகரில் தலை நிமிர்ந்து நிற்கும் அவரது சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் முஸ்லிம் சமய, கலாசார விடயங்களை மேம்படுத்துவதிலும் அவர்களது உரிமைகளை வென்றெடுப்பதிலும் அளப்பரிய பணிகளை ஆற்றி வருகின்றது.

1880ம் ஆண்டு சட்ட நிரூபண சபையில் முஸ்லிம்களுக்கான தனியான பிரதிநிதித்துவ கருத்து முன்வைக்கப்பட்ட போது அதற்கெதிராக திரு. பொன்னம்பலம் ராமநாதன்  அவர்கள் 1885ம் முஸ்லிம்களும் தமிழ் பேசும் மக்களின் ஒரு பிரிவினரே என்றும் அதற்குத் தனியான பிரதிநிதித்துவம் அவசிமில்லை என்றும் வாதாடினார். அப்போது அதற்கெதிரான மர்ஹூம் . எல். எம் அஸீஸ் மற்றும் அறிஞர் சித்திலெப்பை போன்றோரின்  போராட்டத்தின் விளைவாக 1889ம் ஆண்டு ஒக்டோபர் 29ம் திகதி முதலாவது முஸ்லிம்களுக்கான தனிப்பிரதிநிதித்துவம் அங்கீகரிக்கப்பட்டு ஜனாப் அப்துர் ரஹ்மான் அவர்கள் நியமனமும் பெற்றார்கள். முஸ்லிம்களின் தனிப்பிரதிநிதித்துவ போராட்டத்திற்கான ஜனாப். .எல்.எம். அப்துல் அஸீஸ் அவர்களின் ஆய்வை 1907ம் ஆண்டு சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் 'இலங்கைச் சோனகர் இன வரலாறு' என்ற பெயரில் வெளியிட்டது. பிற்காலத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டபோதெல்லாம் ராஸிக் பரீத் அவர்களும் இக்கருத்தை வலியுறுத்தி சட்ட மன்றங்களில் உரையாற்றினார்.

அவர் கட்சி அரசியலுக்கு அப்பால், எல்லா அரசாங்கங்களுக்கும் தனது ஆதரவை சேர் ராஸிக் ஓக்கிட் மலர் வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டினார். எப்போதும் தமது கோட்டில் ஓக்கிட் மலரொன்றை வைத்துக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அந்த மலரைப் போலவே அவர் மென்மையான மனதைக்கொண்டவராகவும் இருந்தார். சிங்களமுஸ்லிம் நல்லுறவைக் கட்டிவளர்த்தவர் என்ற வகையில் அவர் சகல இனத்தவர்களாலும் மதிக்கப்பட்டார்.
 
நல்கி, அதன்மூலம் சமூகத்திற்குப் பல நன்மைகளைப் பெற்றுக் கொடுத்தார். அதில் பெருமிதமும் மனநிறைவும் கொண்டார். ஒருமுறை அவரை நோக்கி ஒரு பத்திரிகையாளர் அடிக்கடி கட்சி மாறுகிறீர்களே உங்களுக்கு நிலையான ஒரு கொள்கை இல்லையா? என்று கேட்க, சேர் ராஸிக் அவர்கள் 'அப்படி இல்லையே எப்போதும் நான் அரசாங்கக் கட்சியில்தானே இருக்கிறேன்' என்று பதிலளித்தார்.

சேர் ராஸிக் ஓக்கிட் மலர் வளர்ப்பதில் அதிக அக்கறை காட்டினார். எப்போதும் தமது கோட்டில் ஓக்கிட் மலரொன்றை வைத்துக்கொள்ளும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அந்த மலரைப் போலவே அவர் மென்மையான மனதைக்கொண்டவராகவும் இருந்தார். சிங்களமுஸ்லிம் நல்லுறவைக் கட்டிவளர்த்தவர் என்ற வகையில் அவர் சகல இனத்தவர்களாலும் மதிக்கப்பட்டார்


 - முஹம்மத் றஸீன்