Friday, June 19, 2020




வெளிநாடு செல்லாத ஒரு அரசியல்வாதி!

ஆக்கம்: முஹம்மத் றஸீன்

காலி மாவட்டத்தில் இரட்டையர்களில் மூத்தவராக பிறந்த விஜயானந்த தஹநாயக்க அவர்களின் வாழ்க்கை மிகவும் சுவாரிஷ்யம் நிறைந்தது. காலி ரிச்மன்ட் கல்லூரியிலும், கல்கிஸ்ஸ சென். தோமஸ்; கல்லூரியிலும் கல்வி பயின்ற அவர் காலி சென் அலோசியஸ் கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றினார். அவரது ஆங்கில இலக்கியப் புலமை பிற்காலத்தில் அவரது பாராளுமன்ற உரைகளிலும் பிரதிபலித்தது. 1947இல் முதலாவது பட்ஜட் விவாதத்தின்போது பதிமூன்றரை நேரம் பேசி ஒரு சாதனை படைத்தார். இவர் பற்றிய இன்னொரு வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் அவர் இலங்கைக்கு அப்பால் எந்த ஒரு வெளிநாட்டுக்கும் சென்றது கிடையாது என்பதே. ஒருமுறை 'நீங்களும் வெளிநாடு சென்று வரலாமே அது உள்ளத்தைப் பண்படுத்துகிறது' என ஒரு நண்பர் தஹநாயக்க அவர்களிடம் கூற, அதற்கு அவர், 'சோக்கிதீஸ் ஏதன்ஸை விட்டு வெளியேறியதே கிடையாதே' என்று பதிலளித்தார்.


1939இல் காலி மாநகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு அதன் முதல்வராகவும் பணியாற்றினார். 1944ஆம் ஆண்டில் பிபிலை தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்டு அரசாங்க சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டார். தீவிர இடதுசாரியாக விளங்கிய  தஹநாயக்க 1947இல் காலி தேர்தல் தொகுதியில் போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளராக, பெரும் செல்வந்தரான தோமஸ் அமரசூரிய என்பவரோடு மோதினார். தேர்தல் மேடைகளில் அவர் தமது வாக்காளர்களிடம்  'நான் ஒரு பணங்காய்க்கும் மரமொன்றில் ஏறியுள்ளேன். அதைக் குலுக்கும்போது விழும் பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு பிரதியுபகாரமாக உங்கள் வாக்குகளை மட்டும் எனக்குத் தாருங்கள்' என்றார். அதன்படி அவர் ஒரு சதமும் செலவில்லாமல் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். 1952 தேர்தலில் மீண்டும் சமசமாஜக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1956 தேர்தலில் பண்டாரநாயக்கா தலைமையிலான மஹஜன எக்ஸத் பெரமுன (மக்கள் ஐக்கிய முன்னணி) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1956 முதல் 1959 வரை கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். அவர் கல்விக்காக பல சேவைகள் ஆற்றியிருந்த போதிலும் அவர் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவாக பனிஸை அறிமுகப்படுத்தியதால் 'பனிஸ் மாமா' என்று அன்பாக அழைக்கப்பட்டார். அவரே வித்தியோதய, வித்தியாலங்கார பிரிவெனாக்களை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தினார்.
செப்டம்பர் 1959 இன் பிற்பகுதியில் .நா பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக பண்டாரநாயக்க நியூயார்க் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததால் சபை முதல்வர் சி.பி.டீ. சில்வா இல்லாத நிலையில், தஹநாயக்கவை பதில் பிரதமராக நியமிக்குமாறு பரிந்துரைத்து ஆளுநர் நாயகத்திற்கு பண்டாரநாயக்க ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். செப்டம்பர் 26, 1959 அன்று பண்டாரநாயக்க எதிர்பாராத விதமாக படுகொலை செய்யப்படவே, அந்தக் கடிதத்தின்படி இலங்கை ஆளுநர் நாயகம் சேர் ஒலிவர் குணதிலக்க, தஹநாயக்கவைப் பிரதமராக நியமித்தார். அவர் பிரதமராக இருந்த காலம் சர்ச்சைகளும் சதி முயற்சிகளும் நிரம்பிய காலமாக இருந்தது. பண்டாரநாயக்க படுகொலைக்கு முன்பே, மக்கள் ஐக்கிய முன்னணி கூட்டணி கட்சிகளிடையே சச்சரவு ஏற்பட்டிருந்தது. தஹாநாயக்கவின் கீழ் நிலைமை மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் தஹநாயக்க தனது அமைச்சரவையை கலைத்து, புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்து டிசம்பர் 4, 1959 அன்று நாடாளுமன்றத்தை கலைக்குமாறு கோரினார். பின்னர் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையுடன் இடைக்கால அரசாங்கத்தை நிறுவினார்.

தஹநாயக்க அவர்கள் இறுதிவரை ஒரு எளிமையான மனிதராகவே வாழ்ந்தார்.  ரயிலிலும் பஸ்ஸிலுமே அவர் காலியிலிருந்து பாராளுமன்றத்திற்கு பிரயாணம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். பிரதமராக நியமிக்கப்பட்டபோது, சிராவஸ்தியில் தனது அறையிலிருந்து தனது உடமைகள் அடங்கிய பழைய சூட்கேஸ் ஒன்றை சுமந்தவண்ணம் அலரி மாளிகை வந்தடைந்தார். அங்கிருந்த அறைகள் யாவும் அளவில் மிகப் பெரிதாக இருந்ததால் ஒரு சிறிய அறையொன்றை ஏற்பாடு செய்து அதிலேயே வாழ்ந்தார். அவர் பெரும்பாலான தமது உத்தியோக பூர்வ கடிதங்களைக்கூட தனது கைப்பட சொந்தக் கையெழுத்திலேயே எழுதும் வழக்கத்தைக்கொண்டிருந்தார். அதற்கென அவர் ஊதாநிற மையினாலான ஒரு பேனையை வைத்திருந்தார். தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அவர் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தபோது, உத்தியோக பூர்வ வாகனத்தை உபயோகிக்க உரிமை இருந்தபோதிலும் அவர் தனது தனிப்பட்ட உடமைகளான அதே சூட்கேஸை சுமந்த வண்ணம் அலரி மாளிகையைவிட்டு வெளியேறி காலிக்குப் புறப்பட்டார்.

பின்னர்; லங்கா பிரஜாதந்திரவாத பக்ஷய (இலங்கை ஜனநாயகக் கட்சி) என்ற ஒரு புதிய கட்சியை உருவாக்கி 1960 பொதுத் தேர்தலில்; போட்டியிட்டார். அவரும் அவரது கட்சியும் படுதோல்வியை சந்தித்தாலும் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் தோர்தலை நடத்தி முடித்த பெருமையை அவர் பெற்றர். அதே ஆண்டு ஜூலை பொதுத் தேர்தலில் அதே கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு அவருக்கு வித்யோதய பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 1964 ஆம் ஆண்டில், தஹநாயக்க அவர்கள் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் ஜவுளி விலையேற்றத்தை எதிர்த்து கோவணத்துடன் பாராளுமன்றத்துக்குள்  நுழைய முயன்று தடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக வெளிவந்தது. இவ்வாறு 1989 வரை அரசாங்கக் கட்சியிலும் எதிர்க் கட்சியிலும் மாறிமாறி அமைச்சராகவும் சாதாரண உறுப்பினராகவும் தனது அரசியல் வாழ்வைத் தொடர்ந்தார்.

1989 பொதுத் தேர்தலில் தேசிய பட்டியல் மூலம் தஹநாயக்கவை நியமிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அளித்த வாக்குறுதி மீறப்பட்டதால் அவரால் பாராளுமன்றத்தில் நுழைய முடியவில்லை. இதுவே அவரது அரசியல் வாழ்க்கையின் முடிவாகவும் அமைந்தது. அதன்பின் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிய தஹநாயக்க அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிக்கொண்டிருந்த வேளையில் அது முற்றுப்பெறாமலே 1997இல் தனது 95வது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.





இப்படியும் அரசியல்வாதிகள்!

ஆக்கம்: முஹம்மத் றஸீன்

இன்று நாட்டின் அரசியல் அரங்கில் செயல்படும் அரசியல்வாதிகளது அரசியல் கலாசாரமற்ற, தான்தோன்றித்தனமான, பண்பாடற்ற செயற்பாடுகளை அவதானிக்கும்போது இற்றைக்கு ஐந்து தசாப்தங்களுக்கு முன் இலங்கை அரசியல் வானில் ஜொலித்த அரசியல்வாதிகளது தன்னலமற்ற அர்ப்பணிப்புடனான சேவைகள் குறித்து நாம் வியப்படையாமல் இருக்க முடியாது.

இலங்கை அரசாங்க எழுதுவினைஞர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்க நேர்ந்ததால் கண்டி கச்சேரியில் எழுதுவினைஞர் சேவையில் பணியாற்றிய ஒருவர் பதவி நீக்கம் செய்யப்படுகிறார். அக்காலத்தில் கண்டி அரசாங்க அதிபராகக் கடமை யாற்றிய சேர் கந்தையா வைத்தியநாதன் பதவி நீக்கக் கடிதத்தை உரியவரிடம் கையளித்துத் தனது அனுதாபத்தையும் தெரிவித்துக்கொண்டார்.


காலம் வேகமாக சுழன்றது. சேர். கந்தையா வைத்தியநாதன், அவரால் பதவிநீக்கம் செய்யப்பட்டவர், இருவரும் 1952 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றனர். முன்னையவர் அரச வீடமைப்பு சமூகசேவை அமைச்சரானார். பின்னையவர் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்தார். நான்கு ஆண்டுகள் கழிந்தன, 1956இல் தேர்தல் வந்தது, அரசாங்கம் கைமாறியது. எஸ்.டப்லியூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையிலான அமைச்சரவையில், சேர். கந்தையா வைத்தியநாதன் வகித்த, அதே அரச வீடமைப்பு சமூகசேவை அமைச்சு அவரால் பதவிநீக்கம் செய்யப்பட்ட அந்த எழுதுவினைஞர் வசமானது.

பின்னாட்களில் அரசியல் வானில் கொடி கட்டிப் பறந்த டீ.பி. இலங்கரட்ன என்பவரே அந்த இளம் எழுதுவினைஞர்! இது போன்ற மற்றுமொரு புதுமையான சம்பவத்தையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாக அமையும். டீ.பி. இலங்கரட்ன கண்டி கச்சேரியில் பணியாற்றிய காலத்தில் அவரது மேலதிகாரியாக, அரசாங்க அதிபர் மொனிபெனி என்பவர் கமையாற்றினார். இதில் வியப்புக்குரிய விடயம் என்னவென்றால், பின்னொரு காலத்தில் டீ.பி. இலங்கரட்ன உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்தபோது அதே மொனிபெனி அவரது நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டமையாகும். இவ்வாறான சுவாரஸ்யமான பல சம்பவங்கள் அவரது அரசியல் வாழ்வில் நிறையவே நிகழ்ந்துள்ளன.
அத்துடன் பாடசாலை நாட்களிலிலேயே தொடங்கிய அவரது கலையார்வம் தீவிர அரசியலில் பிரவேசித்த பின்னரும் தொடர்ந்தது. பல நாவல்களையும் கவிதைகளையும் மேடை நாடகங்களையும் அவர் எழுதியுள்ளார். அவற்றுற் சில பாடநூல்களாகவும் அங்கீகரிக்கப்பட்டிருந்தன. பல ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்தும் உள்ளார். மேடை நாடகங்களிலும் சினிமாவிலும்கூட அவர் நடித்துள்ளார். இன்று அரசாங்கத்திற்கு அதிக வருமானத்தை ஈட்டித்தருவதோடு பொது மக்களுக்கும் நன்மை பயக்கும் பல திட்டங்கள் அவரது மூளையில் உருவானவையேயாகும். மக்கள் வங்கி, சத்தேச, சலுசலா, பெற்றோலியக் கூட்டுத்தபனம், காப்புறுதிக் கூட்டுத்தாபனம், ஊழியர் சேமலாப நிதி என அவரது பணிகளை அடுக்கிக்கொண்டே போகலாம். அவர் நிதியமைச்சராக பதவி வகித்த காலத்தில் முதன் முதலாக சிங்கள மொழியில் வரவு செலவுத்திட்டத்தைத் தயாரித்து வாசித்த பெருமையும் அவருக்குண்டு.
இலங்கரட்னவின் அரசியல் வாழ்க்கையின் வெற்றிக்கு அவரது மனைவி தமரா குமாரியின் பங்கு அளப்பரியது. 1934 முதல் ஒரு அரச ஊழியராக பயணத்தை ஆரம்பித்த இலங்கரட்ன ஒரு தொழிற்சங்கவாதியாக மட்டுமன்றி பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, இலக்கியவாதியாக சமுதாயத்துடன் தன்னை இறுக்கமாகப் பிணைத்துக்கொண்ட மக்கள் நண்பராகவும் எவ்வித தீய சலனங்களுக்கும் பலியாகாத பன்முக ஆளுமை கொண்ட மனிதராகவும், வாழ்ந்து, 1992ஆம் ஆண்டு, 79வது வயதில் தன்னுடைய பயணத்தை முடித்துக்கொண்டார்.

இவரைப்பற்றி எழுதத் தூண்டியமைக்கு இன்னொரு காரணம், இவர் அமைச்சராக இருந்தபோது கம்பளையில் இல்லவத்துரை என்ற எமது கிராமத்தில் ஒரு சாதாரண வீட்டில் குடியிருந்து தமது அன்றாட அரசியல் பணிகளோடு மக்களோடு மக்களாகக் கலந்து அவர்களது சுக துக்கங்களில் பங்கெடுத்து எவ்வித படாடோபமும் இல்லாத மாமனிதராக வாழ்ந்தமையாகும். நாம் எமது மாணவ பருவத்தில் மிக நெருக்கமாகப் பழகிய முதல் அரசியல்வாதியாகவும் இவர் இருந்தார்.