Friday, April 28, 2017

அமெரிக்க அத்துமீறல்கள்: ஆப்கானிஸ்தான் முதல் சிரியா வரை

அமெரிக்காவின் இலக்குகளான ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியா என்ற நாடுகளின் வரிசையில் ஈரானும் ஒரு முக்கிய நாடாகவும் அதன் பரம வைரியாகவும் இருந்தாலும் அது இன்னும் அதன் நேரடித் தாக்குதல்களுக்கு உள்ளாகவில்லை. ஆனால் நீண்ட காலமாகவே ஈரானின் அணுசக்தி திட்டங்களுக்கு இடையூறு விளைவித்தும் பொருளாதாரத் தடைகளை விதித்தும் அதனைப் பனியவைக்கும் உளரீதியான தாக்குதல்களில் ஈடுபட்டு வந்துள்ளமையை நாம் காணலாம். ஆனால் இதுவரை அம்முயற்சி பலிக்கவில்லை. அதேநேரம் ஈரானோடு நேரடியாக மோதினால் அது தமக்கு இன்னொரு வியட்நாமாக மாறிவிடுமோ என்ற அச்சமும் அதற்கு இல்லாமலில்லை. எனவே தற்போது சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினால் ஈரானைப் பனியவைப்பது சுலபம் என அமெரிக்கா  நினைக்கிறது.

 ஈரான் தவிர்ந்த மேற்கூறப்பட்ட ஏனைய நாடுகள் அனைத்தும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணியினால்  தாக்கப்படுவதற்கு நீண்டகாலத்திற்கு முன்பாகவே முக்கியமானதொரு பொது அம்சத்தினைக் கொண்டிருந்தன: அதாவது இந்த அனைத்து நாடுகளும் முன்னாள் சோவியத் ஒன்றியத்துடன் நீண்ட உறவுகளைப் பேணிவந்த, மதச்சார்பற்ற, முற்போக்கான தேசிய அரசுகளாகவே இருந்தன. அமெரிக்கா நீண்ட காலமாகத் திட்டமிட்டு அவற்றை அழித்து தமது எடுபிடி அரசுகளாக  மாற்ற முயற்சித்தமைக்கு  இதுவும் ஒரு பிரதான காரணமாகும்.
இன, மத, சிறுபான்மையினர் மற்றும் பெண்ணுரிமைகளை மதித்துப் பாதுகாக்கக்கூடிய, அனைத்து அம்சங்களும்  அடங்கிய ஒரு  சமூக அமைப்பு அவர்களிடம் இருந்தது. திறந்தவெளிச் சந்தை மற்றும் சுதந்திர வர்த்தகக்; கொள்கைகள் என்ற பெயரில் உலகம் முழுவதும் தேசிய பொருளாதாரங்களை அழித்து மக்ளைச் சூறையாடும் மேற்கத்திய பெருநிறுவனங்களிடம் இருந்து மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவற்றின் பொருளாதாரம் அரச கட்டுப்பாட்டிலேயே இருந்தது

ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரையில், போர், மரணம் மற்றும் பேரழிவு என கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களுக்கு பிறகு, அதன் அண்மைக்கால துயர வரலாற்றில் முன்னைய ஆப்கானிஸ்தானை இப்போது கற்பனை செய்வதே கடினம். 1979 சோவியத் படையெடுப்பு வரை நாட்டு மக்கள் மத்தியில் அமைதியான இயல்பு வாழ்க்கையே நிலவியது. தற்போதைய கருத்தோட்டங்களுக்கு மாறாக, பெண்கள், இருபதாம் நூற்றாண்டின் எந்த ஒரு நவீன நாட்டிலும் வாழும் தமது சகாக்களைப் போலவே பல்வேறு தொழில்முறை வேலை வாய்ப்புகளிலும் பல்கலைக்கழக கல்வியிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டனர்.

சோவியத் படையெடுப்புக்கு முன்பு, காபூலில் மாஸ்கோ சார்பு அரசாங்கத்தைக் கவிழ்க்கும் பொருட்டு ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வினியோகித்ததோடு சவுதி அரேபியா நிதியுதவியையும் வழங்கியது. மேலும், ';வியட்நாம் போரில் நாம் பெற்ற அனுபவத்தை இப்போது சோவியத் ஒன்றியத்துக்கும் வழங்க  வாய்ப்பு கிடைத்துள்ளது' என அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பிரிஸேஸின்ஸ்கி; கூறிய கருத்தை நோக்கும்போது, ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியத்தை  ஒரு புதைசேற்றில் சிக்க வைக்கும் ஒரு மாபெரும் திட்டத்தை அமெரிக்கா வகுத்திருந்தமை தெரிய வருகிறது. அவரது நோக்கம், எப்பாடுபட்டாவது சோவியத் ஒன்றியத்தைச் சிதைத்துவிடுவதாகவே இருந்தது. அதற்கு முஜாஹிதீன்கள் வெறுமனே கருவிகளாக பயன்படுத்தப்பட்டனர். அவர்களது ஆதரவுடனும் அவைணைப்புடனும் பல ஆண்டுகாலமாகப் படிப்படியாக இன்றைய பயங்கரவாதிகளாக மாறிய அவர்களை 'எழுச்சியுற்ற முஸ்லிம்கள்' என அவர்கள்; அழைத்தனர்.

1989-1991 இல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், அமெரிக்கா தன்னைத் துரிதமாக மாறிவரும் இந்த உலகின் ஒரே வல்லரசாக உணர்ந்தது. ஆனால், அது வறுமை, சுகாதாரம், கல்வி மற்றும் தட்பவெப்ப மாறுதல் என்பவற்றைக் கையாள்வதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதைவிட்டு, அதனைச் சூழ்ந்துள்ள பாதகமான நவ தாராளவாத கருத்துகளால் இயக்கப்பட்டு, உலகின் மிகப்பெரிய அளவிலான எரிவாயு மற்றும் எண்ணெய்க் கையிருப்பைத் தம் வசம் வைத்திருந்த மத்திய கிழக்கில் ஆரம்பித்து முன்னெப்போதும் இல்லாத ஆக்கிரமிப்புப் போரை மேற்கொள்வதற்கான திட்டத்தை வகுத்தது. எனவே, அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்கக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் பின்லேடனை ஒப்படைக்க தலிபான் முன்வந்தபோது, அமெரிக்கா அப்பட்டமாக அதனை ஏற்க மறுத்தமை ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

9112001 சம்பவத்திற்குப் பின் மேற்கத்திய பிரச்சார இயந்திரம் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டமையால்  மிக முக்கியமான இந்த உண்மையை, முக்கிய ஊடகங்கள்கூட குறிப்பிட வில்லை. அவர்களாலேயே முந்தைய ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஜிஹாத் குழுவான அல் கைதாவை அழிக்கப்போகிறோம், பின்லேடனைக் கைப்பற்றப்போகிறோம் என்ற போலிக் காரணங்களை முன்வைத்து வாஷிங்டனின் கழுகுக் கூட்டம் ஆப்கானிஸ்தான் மீது படையெடுக்க ஆயத்தமானது.

அமெரிக்கா தனது இராணுவ வலிமையை வெளிக்காட்டிய மற்றொரு எடுத்துக்காட்டு ஈராக் ஆகும். 1979 இல் ஈரானியப் புரட்சிக்குப் பிறகு, அமெரிக்க நிர்வாகம், ஈரானுடனான ஒரு பேரழிவு மோதலில் ஈடுபடுவதற்கு சதாம் ஹுசைனை ஊக்குவித்;து ஆதரவளிக்கும் எந்த முயற்சியையும் விட்டுவைக்கவில்லை. அதன் விளைவாக, இரத்த ஆறு பெருக்கெடுத்தோடிய ஒரு போர் எட்டு ஆண்டுகள் வரை நீடித்து இரு நாடுகளிலும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் பேர் கொல்லப்பட்டதோடு இரு நாடுகளினதும் பொருளாதாரங்களும் முடமாக்கப்பட்டன.
இந்த இக்கட்டிலிருந்து மீள்வதற்கு ஈராக்கிய அரசாங்கம் சவூதி, குவைத் மற்றும் இதர வளைகுடா நாடுகளில் எண்ணெய் விலை அதிகரித்து தமக்கு உதவுமாறு கேட்பதைத் தவிர  வேறு வழி எதுவும் இருக்கவில்லை. ஆனால் அவர்கள் அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக மறுத்துவிட்டனர்அமெரிக்கா கபடத்தனமாக, சதாம் ஹுசைனின் கவனத்தை குவைத் மீது திருப்பி, குவைத்மீது படையெடுக்கும் நிலையை உருவாக்கியது. குவைத்தை கைப்பற்றுவதன் மூலம் சவுதியையும் ஏனையோரையும் மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கலாம் என சதாம் ஹுசைன் போட்ட கணக்கு தப்பாகவே முடிந்தது. இவ்வாறு நன்கு திட்டமிடப்பட்ட அமெரிக்க பொறியில் சதாம் ஹுசைன் சிக்கியதால்  ஈராக் இன்னொரு பெரும் துயரச் சம்பவத்துக்கு முகம் கொடுக்கவேண்டியதாயிற்று.

குவைத்தில் ஈராக்கிய இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான அட்டூழியங்கள், அங்கே வீரம் செரிந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய மிகைப்படுத்தப்பட்ட செய்திகள், வழக்கமான பிரச்சார ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டன. இவை அனைத்தும் இந்த நாகரீகமடைந்த உலகில்; பொது ஜன அபிப்பிராயத்தை அவர்களுக்கு சார்பாகத் திரட்டியது. இதன் விளைவாக, ஈராக் இராணுவம் 'பாலைவனப் புயல்' என்ற பெயரில் சிதறடிக்கப்பட்டு பெரும்பாலான அதன்; உள்கட்டமைப்புகள் திட்டமிட்ட வகையில் ஆகாயத்திலிருந்தே தாக்கி அழிக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் அமையம் நாட்டின் வடக்கு பகுதியை விமானங்கள் பறக்கக் கூடாத பகுதி; எனப் பெயரளவில் பிரகடனம் செய்தாலும்; நடைமுறையில் ஈராக் முழுவதற்குமான பிரகடனமாகவே அது இருந்தது. இது தினசரி அடிப்படையில் ஈராக்கில் எந்த இலக்குகள் மீதும் குண்டுமாரிப் பொழிவதற்கான உரிமத்தை அமெரிக்காவுக்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் வழங்கியது. இது 12 ஆண்டுகள் வரை நீடித்தது.

ஈராக் குவைத் மீது படையெடுத்ததும் உடனடியாக அதன் மீது கடுமையான வர்த்தகத் தடைகள் விதிக்கப்பட்டன. இதுவும்  12 ஆண்டுகள், 2003 வரை நீடித்தது. அரசாங்கத்தினால்; உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து போன்ற  அத்தியாவசிய பொருட்களைக்கூட இறக்குமதி செய்ய முடியவில்லை.  1995 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் அறிக்கையொன்றின்படி 'பாதுகாப்பு கவுன்சில் மூலம் விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகள் காரணமாக 5,76,000 ஈராக்கிய குழந்தைகள் வளைகுடா போரின் இறுதிக்கட்டத்தில்; கொல்லப்பட்டிருக்கலாம்' என நம்பப்படுகின்றது. இந்த பாரிய அளவிலான மனித அவலத்தினால் அவர்கள் திருப்தியடைந்துவிடவில்லை. புஷ் ஜூனியர் அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் நிகழ்வுகளைப் பயன்படுத்தி உலகம் முழுவதுமான எதிர்ப்புக் குரல்களை நசுக்க முற்பட்டார். ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரம் என்பவற்றின் பூமி எனக் கூறிக்கொள்ளும் ஒரு நாட்டின் மூலம் நடைபெற்ற இவ்வாறான அவலங்களைத் தட்டிக்கேட்கவோ விமரிசிக்கவோ திராணியற்றவைகளாக முக்கிய ஊடகங்கள் இருந்தன. புஷ் நிர்வாகம் கூடஹான்ஸ் பிளிக்ஸ் தலைமையில் .நா. ஆயுத ஆய்வாளர்கள் பேரழிவு ஆயுதங்கள் அங்கு இருக்கவில்லை, ஏற்கனவே அங்கிருந்தவை பல ஆண்டுகளுக்கு முன்பே அகற்றப்பட்டுவிட்டன என்று தகவலை வெளியிட்டிருந்தும் பல்வேறு சந்தேகத்துக்குரிய ஆதாரங்களில் இருந்து இட்டுக்கட்டப்பட்ட கதைகளைக் கையாண்டு ஈராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்று பொய்யான தகவலைக் காண்பித்தது. ஈராக்கிலிருந்து  வெளியேற்றப்பட்ட ஒருவரின் கலாநிதி பட்டப் படிப்புக்கான  ஒரு போலியான ஆய்வே,  2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சதாம் ஹுசைனிடம்; 45 நிமிடங்களில் செயல்படுத்தக்கூடிய இரசாயன, உயிரியல் ஆயுதங்கள் உள்ளன என பிளேயரை பாராளுமன்றத்தில் சொல்லத் தூண்டியது. இவை பற்றி ' டுரான்'; இதழின் பத்தியாளர் ஸியாத் அல்ஸோக்பி நம்பகமான பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவ்வாறான தகவல்களே பெரும்பாலும் இக்கட்டுரையில்  எடுத்தாளப்பட்டுள்ளது.

'ஒரு உளவுத்துறை ஆவணத்தில்; அடையாளம் காணப்பட்ட ஈராக் பேரழிவு ஆயுதங்கள் என்று சொல்லப்படுபவை, ஒரு கற்பனையான ஹாலிவுட் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆயுதங்களின்; ஒரு தவறான சித்தரிப்பை ஒத்திருந்தது' என்பதை பதினான்கு ஆண்டுகள் கழித்து, சில்கோட் அறிக்கை, கண்டறிந்தது.

எண்ணெய் வளத்துக்கு அப்பால், அமெரிக்கர்கள் ஈராக் மீது படையெடுப்பதில் பிடிவாதமாக இருந்தமைக்கு வேறு பல காரணங்களும் இருந்தன. ஈராக் ஏற்கனவே குறிப்பிடத்தக்க நட்பு நாடுகள் இல்லாத ஒரு பலவீனமான அரசாகவே இருந்ததால் அமெரிக்க இராணுவ வலிமைக்கு எதிராக அதனைப் பாதுகாக்கும் நம்பிக்கையும் இல்லாத நிலையில் குறைந்த அளவிலான உயிர்ப் பலியுடன் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளலாம் என அமெரிக்கா நினைத்தது. அதேநேரம் உலகின் ஒரே வல்லரசாக அதன் வலிமையை உலகுக்கு உணர்துவதற்கு அதன் இராணுவ தொழில்துறைத் தொகுதியில் நிறைந்திருந்த ஆயுதக்  குவியல்களைப் பரிசோதனைக்கும் பாவனைக்கும் உட்படுத்துவதற்கு ஒரு வானவேடிக்கை நிகழ்ச்சி அவர்களுக்கு தேவையாக இருந்தது. அத்துடன் ஆயுத உற்பத்தியாளர்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கான  பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதோடு மற்ற நாடுகளை அச்சுறுத்தி மிரட்டி  அவர்கள் அமெரிக்க ஏகாதிபத்திய கொள்கைகளுக்கு முரண்படும் பட்சத்தில் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை உணர்த்தக்கூடியதாக இருந்தமை போன்ற பல காரணங்களைக் கூறலாம்.

நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பு காரணமாக, ஒரு இறையாண்மை கொண்ட அரசு, அதன் இராணுவம், சிவில் சேவை, மற்றும் பிரதான உட்கட்டமைப்புகள் அனைத்தும் முழுமையாக நிர்மூலமாக்கப்பட்டதையே நாம் கண்டோம். இந்தப் படையெடுப்பு உண்மையில் ஒரு மிகப்பெரும் வெற்றி என்றும், இது  வெறும் தோல்வியையே குறித்து நிற்கிறது என்றும் பலர் பல்வேறு கண்ணோட்டங்களில்;, வாதிடுகின்றனர். எவ்வாறாயினும்;, ஈராக் மற்றும் முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும்  பல ஆண்டுகாலத்துக்கு அல்லது தசாப்தங்களுக்கு முடிவற்ற பிரிவினைவாத போர்களில் மூழ்கடித்துவிடுவதே அதன் உண்மையான நோக்கமாக இருந்தது.

லிபியாவில் கூட, இலவச சுகாதார மற்றும் கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. அதன் பொருளாதாரம், கண்டம் முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான ஆப்பிரிக்கர்களுக்கும் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் அளவிற்கு ஆப்பிரிக்காவிலேயே மிகச் சிறப்பானதாகக் கருதப்பட்டது. லிபியாவின் மேற்கத்தியர் புகுந்ததை அடுத்து, நேட்டோ-ஆதரவிலான கொலைப் படைகளின் கொலை வெறியாட்டத்திலிருந்து உயிர் தப்பிய அந்த தொழிலாளர்கள் வேறு வழியின்றி ஐரோப்பாவிற்கு புலம்பெயர்வாசிகளாக வேண்டியதாயிற்று. உண்மையில், கடாஃபி பல வழிகளில் ஆப்பிரிக்க நாடுகளின் அபிவிருத்தி மற்றும் அவற்றின் பொருளாதாரங்கள் மேம்பட உதவியவர் என்றாலும், 'லிபியாவின் மனநோயாளி;' என்றே மேற்கத்தியரால் அவர் சித்தரிக்கப்பட்டிருந்தார்;;. மேலும், கடாபி மேற்த்திய நாணயங்களுக்கு சவால் விடக்கூடிய வகையில் ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரத்திற்கு வழிவகுக்கும் திட்டத்துடன் லிபிய தங்க தினார் அடிப்படையில் முழு ஆபிரிக்காவுக்குமான ஒரு பொது நாணய முறைமையை ஏற்படுத்துவதற்காக பெருந்தொகையான தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைத்திருந்ததாக அண்மையில் வெளியிடப்பட்ட மின்னஞ்சல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

மேற்கத்திய ஊடகங்களால் ஒரு செய்தியாகவே பொருட்படுத்தப்படாத இந்த விடயமே, லிபியாவில் நேட்டோவின் இராணுவ கெடுபிடிகளுக்கான உண்மையான காரணமாகும். ஆனால் மாறாக, பொது மக்கள் மத்தியில், கடாபியின் படைகளால் பெருந்தொகையான சிவிலியன்கள் படுகொலை செய்யப்படப் போகின்றார்கள் என வழக்கமான ஜோடிக்கப்பட்ட வதந்திகளைப் பரப்பியதோடு, இவ்வாறான ஒரு மனிதப்பேரழிவை தடுக்கும் முகமாக, ஒரு மனிதாபிமான அடிப்படையில், .நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தைப் பயன்படுத்தி, நேட்டோ தலையிட  நிர்பந்திக்கப்பட்டது என்றும் பொதுமக்களை நம்ப வைத்தனர். இதன் விளைவாக லிபியாவின் ஆயுதங்கள் தீவிரவாதிகள் மூலம் சூறையாடப்பட்டு, அவை விரைவில், பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளுக்கும் அனுப்பப்பட்டது. அதுவே ஸ்திரமற்ற நிலையை உருவாக்கும் காரணியாகவும் தற்போது நடந்து வரும் ஐரோப்பாவில் புலம்பெயர் நெருக்கடிக்கான முக்கிய காரணியாகவும் ஆனது. லிபிய அரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மேற்பார்வையில் லிபியாவின் கணிசமான தொகை ஆயுதங்களை சிரியாவில் ஜிஹாதிகளுக்கு பரிமாற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன . '2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், லிபியாவில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள்  தெற்கு துருக்கி வழியாக சிரிய எல்லைக்கூடாக எதிராளிகளுக்கு விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டது' என சீமோர் ஹெர்ஷ் என்ற பிரபல பத்திரிகையாளர் தெரிவித்திருந்தார்;.

பல ஆண்டுகளாக சிரியா அமெரிக்கப் பேரரசின் ஒரு எடுபிடி அரசாக மாற மறுத்தே வந்திருக்கிறது. 1946 ஏப்ரல் மாதம்; பிரான்ஸிடமிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, சிரிய மக்கள் அனைத்து குடிமக்களுக்கும் இலவசக் கல்வி மற்றும் சுகாதாரம் என்பன  உள்ளடக்கிய ஒரு நவீன மதச்சார்பற்ற சமூகத்தைக் கட்டியெழுப்பியிருந்தனர். சிரிய பொருளாதாரத்தை மேற்குலகின் பல்தேசிய பிடிகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது அவசியமாயிற்று. அத்தகையதொரு சுயாதீன நிலைப்பாடு அமெரிக்காவை ஆத்திரப்பட வைத்ததில் வியப்பேதுமில்லை. எனவே, கடந்த ஏழு தசாப்தங்களாக சிரிய உள் விவகாரங்களில் தலையிடுவதற்கான சூழ்ச்சியையும் சதி முயற்சிகளையும் அது நிறுத்திக் கொண்டதாகவே தெரியவில்லை.
  ' எக்கனொமிஸ்ட்' அதன் ஜூலை 5-11, 2014 இதழில், அரபு வசந்தம் பற்றிய கட்டுரையில், நிதி மற்றும் ஆயுதங்களை வழங்கி; குண்டர்களையும்; நாசகாரர்களையும் அப்பாவி எதிர்ப்பாளர்கள் மத்தியில் திணித்து அதனைத் திசைதிருப்ப எத்தனித்த மேற்கத்திய தலையீட்டை முற்றாக மறைத்து 'அரபு வசந்தம்' என்று அழைக்கப்படும் போராட்டத்தின் தோல்வியை அதிருப்தியுடன் வெளியிட்டது. பெரும்பாலான சிரிய மக்கள் இத்தகைய போராட்டங்களில் பங்கேற்கவில்லை என்பதோடு இந்த முரண்பாட்டின் தொடக்கத்திலிருந்தே வஹாபிய பொறிமுறையினூடாக அனுப்பப்படும் கூலிப்படைகள் மூலம் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஆயுத வன்முறைகளையும் அட்டூழியங்களையும் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தனர்;. தமது மக்களுக்கான ஜனநாயகம் மற்றும் சுபீட்சம் என்பவற்றை உருவாக்குவதில் அரபு நாடுகளின் தோல்வி குறித்து கேள்வி எழுப்பியிருக்கும் 'எக்கொனமிஸ்ட்;' கடந்த நூறு ஆண்டுகளுக்கு மேலாக மேற்கத்தைய சக்திகளின் இடைவிடாத கொடூரமான ஆக்கிரமிப்பு குறித்து வாய் திறக்கவில்லை. காலனித்துவ  சக்திகளிடமிருந்து விடுதலை பெற்ற பின்னரும்கூட இரகசியமாக அல்லது வேறுவழிகளில் அவற்றின் தலையீடு அங்கு முடிந்தபாடில்லை. அது போதாதென்று, அரேபிய நாடுகளின் மையப்பகுதியான பாலஸ்தீனத்தில் சட்டவிரோத இஸ்ரேலின் உருவாக்கமும் இடம்பெற்றது. ஆட்சி மாற்ற அச்சுறுத்தல், அவசியமற்ற வெளியார் தலையீடு ஏதுமின்றி சுதந்திரமாகத் தமது அபிவிருத்தி மற்றும் பொருளாதார மேம்பாடுகளை மேற்கொள்ள  இந்நதடுகள் அனுமதிக்கப்பட்டால், இந்த உலகம், இப்போது இருப்பதை விட ஒரு நல்ல நிலையில் இருப்பதைப் பார்க்கலாம்.

மத்திய கிழக்கில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக அமெரிக்காவின் தொடர்ச்சியான பேரழிவு மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் பின், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படை தற்போது, சிரியாவில் ஒரு கடினமான பாறையில் மோதியுள்ளது. அது சிரிய வரலாற்றில் மிக ஆழமாக வேரூன்றிய எதிர்ப்பு பாறையாகும். மரங்கொத்தி வாழை மரத்தைக் கொத்தியதுபோல, அமெரிக்கா சிரிய விவகாரத்தில் விழி பிதுங்கி நிற்கிறது. சிரியா, இறுதியில் ஒன்றுபட்டு இந்த நவ-காலனித்துவத்தினால் உருவாக்கப்பட்ட இந்த நெருக்கடியை வெற்றி கொண்டு அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக இருக்குமா அல்லது சிரியா இன்னொரு ஈராக்காக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


நாவலப்பிட்டி முஹம்மத் றஸீன்.