Thursday, May 4, 2017

பாலஸ்தீன விவகாரத்தில் சவூதி அரேபியாவின் வகிபாகம்


பாலஸ்தீன பிரச்சினை தொடர்பாக முஸ்லிம் நாடுகள் அனைத்தும்  ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கின்றனவா என்பது தொடர்ந்தும் கேள்விகுறியாகவே உள்ளது. ஏனெனில், கடந்தகால வரலாற்றை நோக்கும்போது, இஸ்ரேலுடன் ஒத்துழைத்து உறவாடும் பல முஸ்லிம் நாடுகளை நாம் காணக்கூடியதாகவே உள்ளது. துருக்கி, எகிப்து, ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியா போன்ற நாடுகள் தொடக்கத்தில் இருந்தே மறைமுகமாகவும் சில வேளைகளில் பகிரங்கமாகவும்இஸ்ரேலுடன் நட்புறவைப் பேணி வளர்த்து வந்துள்ளமை இரகசியமான விடயமல்ல. அவை பாலஸ்தீனத்தில், இஸ்ரேலுடன் சமரச உடன்படிக்கை செய்து கொண்ட பீ.எல்..வை ஆதரிப்பதுடன். ஹமாஸை பயங்கரவாத இயக்கம் எனக்கூறி அதனை நிராகரிக்கும் போக்கையும் கடைபிடித்து வருகின்றன.

இஸ்ரேல் உட்பட மேற்கு நாடுகளும் சவூதி அரேபியாவும் கூட்டுச் சேர்ந்து, பாலஸ்தீனப் பிரச்சினையைத் தமது பாணியிலேயே தீர்க்க விரும்புகின்றன. ஆயுதப் போராட்டம் மூலம், பாலஸ்தீன விடுதலையை அடையாமல் ஓயப் போவதில்லை என்று ஹாமாஸ் அரைகூவல் விடுத்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் இடைஇடையே பல்வேறு போலிக் காரணங்களை முன்வைத்து காஸா மீது வான் வழித் தாக்குதல்களை நடத்தியும் தரை வழியாக படைகளை நகர்த்தியும் வருகிறது. இந்த யுத்தம் இப்போதைக்கு முடியப் போவதில்லை என்பதையும் இஸ்ரேலிய அரசியல் தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளைப் பொறுத்தவரையில், இஸ்ரேலுக்கும், சவூதி அரேபியாவுக்கும் இடையே பல பொதுத்தன்மைகள் உள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதாவது, இரண்டு நாடுகளுக்கும் அமெரிக்காவே சிறந்த நண்பன். அதேபோல, இரு நாடுகளுக்கும், ஈரான், சிரியா ஆகிய நாடுகள் பரம விரோதிகள். சவூதி அரேபியா வஹாபிஸத்தை வளர்க்கின்றது, இஸ்ரேல் ஸியோனிஸத்தை வளர்க்கிறது. அண்மைக் காலம் வரையில், எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியும், சிரியாவும், ஈரானும் ஹமாஸுக்கு உதவி வந்தன. அதற்காகவே சவூதி அரேபியா தலைமையிலான ஏனைய அரபு நாடுகள் அதனை நிராகரித்ததோடு அவ்வியக்கத்தை இல்லாதொழிக்க இஸ்ரவேலுடன் கைகோர்க்கவும் முன்வந்தன.

அண்மையில், யூதேயா மற்றும் சுமரியா (மேற்குக் கரை) போன்ற யூத வரலாற்று நிலங்களில் குடியேறுவதை பாலஸ்தீனியர்கள் நிறுத்த வேண்டும். பாலஸ்தீனியர்கள் தங்கள் அரேபிய சகோதரர்கள் மத்தியில் நிரந்தரமாகக் குடியிருப்பதற்குத் தேவையான  உதவிகளை வழங்குவதற்கான நிதி வளத்தினை சவுதி அரேபியா பெற்றுள்ளது என சவுதி இளவரசர் அல் வலீத் பின் தாலால் கூறியதாக ஒரு பத்திரிகை, செய்தி வெளியிட்டிருந்தது. இவ்வாறு யூத தேசத்திற்கான தமது ஆதரவை அறிவித்ததன் மூலம் மீண்டும், சவூதி இளவரசர் அல் வலீத் பின் தாலால் சவுதி அரசியல் வட்டாரங்களின் புருவங்களை உயர்த்தவைத்துள்ளதோடு 'வரலாற்று உண்மைகளை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என பாலஸ்தீனியர்களையும் சாடியுள்ளார்' என சவூதி அரேபிய பத்திரிகையான அல்- வத்தன் செய்தி வெளியிட்டிருந்தது

 'தயவு செய்து விஷயங்களை குழப்பிக்கொள்ள வேண்டாம், நான், ஒரு தீவிர அரேபிய முஸ்லிம், எனவே என் சக மதவாதிகளை என்னால் காட்டிக் கொடுக்க முடியாது, ஆனால் சத்தியத்தை சொல்லுவதிலிருந்து என்னைத் தடுத்துவிட முடியாது, எனது அரேபிய சகோதரர்கள் உண்மையை அவர்களாகவே தெரிந்துகொள்ளாவிட்டால்;, யாராவது ஒருவர் அவர்களுக்கு உண்மையான வரலாற்றை அறிவுறுத்தி அவர்களது ஆன்மாவின் மீது பதிக்கப்பட்டுள்ள அந்த முற்றிலும் மோசமான கோட்பாடுகளை அகற்ற முன்வர வேண்டும்' எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

காஸாவில் தற்போது நடந்து கொண்டிருக்கும் போருக்கு சவூதி அரேபியாவும், ஐக்கிய அரபு எமிரேட்சும் நிதியுதவி செய்யுமளவிற்கு சென்றுள்ளனளூ அதற்குக் காரணம் இல்லாமலில்லை. சவூதி புலனாய்வுத் துறைக்கு பொறுப்பாக உள்ள மன்னர் அப்துல்லாவின் மைத்துனர் துர்க்கி, அண்மையில், பெல்ஜியத்தில் இஸ்ரேலிய ஜெனரல் ஆமோஸ் யால்டின் என்பவரை சந்தித்து மத்திய கிழக்கில் ஒரு புதிய சமாதானத் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். அதன் முக்கிய நிபந்தனை ஹமாஸ் இயக்கம் ஒழித்துக் கட்டப்பட வேண்டும் என்பதே. அதன் பின்னர் அந்த வெற்றிடத்தை தமது ஆதரவாளர்களைக்கொண்டு நிரப்புவதே அவர்களது திட்டமாகும். இஸ்ரேலுக்கு அயலில் உள்ள பெரிய நாடான சவூதி அரேபியா, இன்றைய காஸா இன அழிப்புப் போருக்குத் துணை போவது வெட்கக்கேடான விடயம் என அரசியல் அவதானிகள் கருத்து தெரிவிக்கின்றனர். காஸாவில் கொல்லப்பட்ட பெரும்பான்மை அரபு மக்கள் முஸ்லிம்களாக இருந்த போதிலும், ஒரு முஸ்லிம் நாடான சவூதி அரேபியா அந்தப் படுகொலைகளை உதாசீனப்படுத்தி அவர்களுடன் நட்புறவு பாராட்ட முன்வருவதற்கான முக்கிய காரணம் அவரவர் பொருளாதார நலன்களை மேம்படுத்திக்கொள்வதும் தமது பொது எதிரியை இல்லாதொழிப்பதுமே ஆகும்.

இதற்கிடையே, சூடான் தலைநகர் கார்ட்டூமுக்கு அருகில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் மீது, அண்மையில் இஸ்ரேலிய போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியுள்ளனஈரானில் இருந்து ஹமாஸுக்கு அனுப்பப்பட்ட ஏவுகணைகள் அங்கே பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலை அடுத்தே இந்தத் தாக்குதல் இடம் பெற்றதாகத் தெரிகிறது

இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்குமிடையிலான உறவுகள் வலுவடைந்து வருவதை உறுதிப்படுத்தும் இன்னொரு தகவலும் பனாமா ஆவணங்கள் மூலம் அம்பலமாகி உள்ளது. அதாவது, அண்மையில் இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாஹுவின் தேர்தல் பிரசாரங்களுக்காக சவூதி மன்னர் 80 மில்லியன் டொலர் வழங்கியுள்ளதாக அந்தத் தகவல் கூறுகின்றது.

ஆட்சியை பிடிப்பதற்கும் கிலாபாவை உடைப்பதற்கும் பிரிட்டனை அன்று பயன்படுத்திய இப்னு சவூத் பரம்பரை, இன்று அமெரிக்காவுக்கு இராணுவ தளம்  அமைப்பதற்கும், மன்னர் ஆட்சியை பாதுகாப்பதற்கும், தனக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும், பெட்ரோலை மலிவு விலையில் அமெரிக்காவுக்கு வழங்கி வருகின்றது. தமது பரம்பரை மன்னர் ஆட்சியை பாதுகாக்க அவர்கள் கிலாபாவையே பலி கொடுத்தவர்கள். அவர்களிடமிருந்தது பலஸ்தீனத்துக்கோ அல்லது சிரியாவுக்கோ தீர்வு வரும் என எண்ணுவது முட்டாள்தனமான எண்ணமாகும்.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல மன்னர் ஆட்சி நீடிக்க வேண்டுமானால் மத்திய கிழக்கில் பிரச்சினை இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் மன்னர் ஆட்சி நீடித்து அந்தப் பரம்பரையினர் செல்வச்செழிப்போடு சீராக வாழ முடியும். எனவே இஸ்லாத்தில் என்றுமே கூறப்படாத இந்த மன்னர் ஆட்சிக்கு மத்திய கிழக்கில் முடிவு கட்டப்படாத வரையில் மத்திய கிழக்கில் எந்தப் பிரச்சினையும் தீரப்போவதில்லை.

இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் சர்வதேச சமூகம் கண்களை மூடிக் கொள்வதும் .நா. ஒப்புக்கு விசாரணை செய்து, காஸாவில் பல்லாயிரக் கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டதாக அறிக்கை சமர்ப்பிப்பதும்;. போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகக் கூறி ஜெனீவாவில் இஸ்ரேலுக்கு எதிரான கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதும் இன்றுவரை நாம் ஏற்கனவே கண்டு அனுபவித்த சம்பவங்கள்தான். அதற்கும் அப்பால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதையும் அனைவரும் அறிவர்.

சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகள் உண்மையிலேயே பலஸ்தீன விவகாரத்தில் கரிசனை கொண்டவர்களாயிருந்தால், அவர்கள் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போர்க் குற்றங்களைப் பகிரங்கமாகக் கண்டிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதற்கும் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் காஸா, ஜெருசலேம், மேற்குக்கரைப் பகுதிகளில் வாழும் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விலக்கப்படுவதற்கும் குரல் கொடுக்கவேண்டும். அத்துடன் 1967 ம் ஆண்டுக்கு முன்பிருந்த எல்லைக்கு அப்பாலான குடியேற்றங்கள் அகற்றப்பட்டு, .நா. தீர்மானத்திற்கு அமைய பாலஸ்தீன அகதிகள் தாயகம் திரும்புவதை உறுதிசெய்து, கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட, 1967 ஆம் ஆண்டின் எல்லைக் கோட்டின் அடிப்படையில் பாலஸ்தீன தேசம் அங்கீகரிக்கப்படுவதற்கு சவூதி அரேபியாவும் அதன் நட்பு நாடுகளும் தமது செல்வாக்கைப் பிரயோகிக்க வேண்டும்.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதியில் 5 ஆயிரம் குடியிருப்புக்களை நிர்மாணிப்பதற்கான இஸ்ரேலின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், சர்வதேச எல்லைக்கோட்டு சட்டத்தை மீறிய வகையில் அந்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நிர்மாணப் பணிகளை எல்லாம் உடனடியாக தடுத்து நிறுத்தவும் நியூசிலாந்து, மலேசியா, வெனிசுலா, செனெகல் ஆகிய நாடுகளின் சார்பில் அண்மையில் .நா. பாதுகாப்பு சபையில் ஒரு தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இம்முறை, இஸ்ரேலுக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை ஆதரித்தோ, எதிர்த்தோ வாக்களிக்காமல் அமெரிக்கா நடுநிலை வகித்தது. இந்த நிலையில், .நா. பாதுகாப்பு சபையில் 15 நாடுகளில் 14 நாடுகளின் அமோக ஆதரவுடன் இஸ்ரேலுக்கு எதிரான இந்த தீர்மானம் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை பாலஸ்தீன அரசு கொண்டாடிவரும் அதேவேளையில், வழமைபோல, எங்கள் நாட்டுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ள இந்த தீர்மானத்துக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவின் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த சிறு வெற்றியில்கூட அரபு நாடுகளின் பங்களிப்பு என்ன என்றே கேட்கத் தோன்றுகிறது.

சவூதி இளவரசர் அல் வலீத் பின் தாலால் கூறியுள்ளதைப் போல, இவற்றையெல்லாம் விட பாரிய வெற்றிகளையெல்லாம் நிறைவேற்றக்கூடிய பண பலம் அல்லது நிதி வளம் சவூதி அரேபியாவிடம் நிறையவே உள்ளது என்பதை அனைவரும் அறிவர். ஆனால் அதை விடுத்து அமெரிக்காவால் அவ்வப்போது உருவாக்கப்படும் இஸ்லாமியப் பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதியுதவி வழங்குவதும் மேற்கத்திய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்படுவதும் எழுச்சியடைந்து வரும் ஏனைய நாடுகள் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதும் ஏற்கத்தக்கதல்ல.

இன்று இஸ்ரேலுக்கு சிம்மசெப்பனமாக இருக்கும் நாடுகளுள் மிக முக்கியமானது வட கொரியாவாகும். அமெரிக்கவின் தயவை நாடி சில அரபுநாடுகள்கூட இஸ்ரேலிடம் நட்புறவு பாராட்டினாலும் வட கொரியா மட்டும் இஸ்ரேலைத் தன்னுடைய மிக மோசமான வைரியாகவே  கருதுகின்றது. இந்த இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினைகளோ அல்லது அகதிகள் ஊடுறுவல் பிரச்சினைகளோ எதுவுமே கிடையாது. ஆனாலும் அது இன்றுவரை இஸ்ரேலை அங்கீகரிக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரபு நாடுகளுக்கு இது ஒரு நல்ல முன்னுதாரணமாகும்.

மத்திய கிழக்கில் மட்டுமன்றி உலகி எந்த மூலை முடுக்குகளிலெல்லாம் நடைபெற்றுவரும் சம்பவங்கள் எல்லாமே ஏகாதிபத்திய நாடுகளால் திட்டமிட்டு  நிறைவேற்றப்படும் நாடகத்தின் ஒரு அங்கமே என்பதையும், கிலாபாவை ஒழிப்பதிலிருந்து இன்றுவரை தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக ஏகாதிபத்தியம் என்ன அடாவடித்தனங்களைப் புரிந்தார்கள் யார்யாரையெல்லாம் பயன்படுத்திக்கொண்டார்கள் என்பதையெல்லாம் அறிந்து கொள்ளாமல், வரலாற்றில் இருந்து நாம் எதையுமே கற்றுக் கொள்ளப் போவதில்லை.

நாவலப்பிட்டி முஹம்மத் றஸீன்


No comments:

Post a Comment