Friday, May 19, 2017

உலகை அச்சுறுத்திவரும் .எஸ்..எஸ் பூதம்!

'இதோ நமக்கான விடிவு காலம் நெருங்குகிறது. இஸ்லாமிய கிலாபத் மீண்டும்  உதயமாகப்போகிறது. புனிதப்போரில் பங்கெடுக்கும் தருணம் வந்துவிட்டது' என்றெல்லாம் உலக நாடுகள் பலவற்றிலுமுள்ள இஸ்லாமிய இளைஞர்கள் பலர் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர். அனேகமானோர் அதில் பங்கேற்கவும் தயாராகிப் புறப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்தத் திடீர் உணர்ச்சிப் பிரவாகத்துக்குக் காரணம் இன்று உலக ஊடகங்களிலே அதிக இடம் பிடித்துள்ள .எஸ்..எஸ். எனும் இஸ்லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் என்ட் சிரியா அல்லது இஸ்லாமிக் ஸ்டேட் ஒஃப் ஈராக் என்ட் லெவன்ட் (.எஸ்..எல்) (Islamic state of Iraq and Syria or Islamic state of Iraq and Levant ISIS or ISIL) எனும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்பேயாகும். இவ்வியக்கத்தினர் சில ஆண்டுகளுக்கு முன் ஈராக் படையினரை வெற்றிகொண்டு ஈராக் மற்றும் சிரியாவின் எல்லைப் பகுதிகள் சிலவற்றை முழுமையாகக் கைப்பற்றி அதனை இஸ்லாமிய கிலாபத்துக்குட்பட்ட ஒரு தனி நாடாக ஏனைய நாடுகளின் ஒப்புதலின்றி தாமாகவே அறிவித்திருந்தது. அத்துடன் தனது பெயரையும் இஸ்லாமிக் ஸ்டேட் (.எஸ்.) எனவும் மாற்றியமைத்துக் கொண்டது. இதனையடுத்து உலகம் முழுவதும் அதிகளவில் பேசப்படும் இயக்கமாக .எஸ் மாற்றமடைந்துவிட்டது. அல்கைதாவுடனான பிரிவுக்கு பின்னர் முன்னைய இலக்குகளுடன் சேர்த்து, ஜோர்டான், இஸ்ரேல், பலஸ்தீன், லெபனான், குவைத், சைப்பிரஸ் மற்றும் தெற்கு துருக்கி உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றி கிலாபத்தை (இஸ்லாமிய ஆட்சியை) ஏற்படுத்துதல், தமது ஆட்சிக்குட்பட்ட எல்லையில் அதனை எதிர்க்கும் முஸ்லிம்களை அழித்தல் போன்ற இலக்குகளையும் திட்டங்களையும் விஸ்தரித்துள்ளது .எஸ்.

இதனை நிர்மூலமாக்கும் பணியை முன்னெடுக்கவென, பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதிமற்றும் ஆயுத உதவிகளை வழங்கி உலகம் முழுவதையும் இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்துவரும்; அமெரிக்கா தலைமையில் 30 நாடுகள் கைகோர்த்துள்ளன எனவும் தற்போது .எஸ்..எஸ். நிலைகள் மீது ஈராக்கில் ஏற்கனவே அமெரிக்கா வான் தாக்குதல் நடத்தி அவர்களை வேட்டையாடும் பணியைத் தொடங்கிவிட்டதாகவும் அமெரிக்கா  அண்மையில் வெளியிட்டுள்ள தகவல் நகைப்புக்கிடமானதாகவே பலராலும்; விமரிசிக்கப்படுகின்றது. இது பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டும் செயலாகவே பேசப்படுகின்றது.

ஈராக்கின் அண்டை நாடான சிரியாவில் அதிபர் பஸர் அல்-ஆஸாத் தலைமையிலான அரசைக் கவிழ்க்கும் நோக்கத்தோடு, ஈராக்கின் வடபகுதியில் இயங்கிவந்த அல் பாக்தாதி என்பவர் தலைமையிலான 'ஈராக்கிய அல்கைதா' என்ற ஆயுதக்குழுவை ஆதரித்து வளர்த்த அமெரிக்கா, இவர்களை விடுதலைப் போராளிகளாகச் சித்தரித்து ஜோர்டானில் ராணுவப் பயிற்சி அளித்து தனது கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொண்டது. இக்குழுவுக்கு சவூதி அரேபியா, கட்டார் ஆகிய நாடுகளிலிருந்து தாராளமாக நிதியுதவியும், அமெரிக்காவிடமிருந்து அதிநவீன ஆயுதங்களும் வாரிவழங்கப்பட்டன. சிரியாவில், அமெரிக்காவால் ஊட்டி வளர்க்கப்பட்டு அதிபர் ஆஸாத் அரசுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திவந்த 'அல் நுஸ்ரா', 'எஃப்.எஸ்..' போன்ற ஆயுதக் குழுக்களுடன் மற்றும் சிறு குழுக்களையும் அணிதிரட்டி அல் பாக்தாதி தலைமையில் உருவானதுதான் '.எஸ்..எஸ்.' எனப்படும் அமைப்பாகும். சிரியாவில் ஆஸாத் அரசுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடுத்துவந்த இந்த அமைப்பினர் ஆயுதக் கொள்ளைகளிலும் வங்கிக் கொள்ளைகளிலும் ஈடுபட்டதோடு, சிரிய, ஈராக்கிய அருங்காட்சியகத்திலிருந்த அரிய கலைப்பொக்கிஷங்களைக் அபகரித்தும்; தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் கட்டாய வரிவசூல் செய்தும் பணபலமும் ஆயுத பலமும் கொண்ட பயங்கரவாத அமைப்பாக வளர்ந்துள்ளது.

இவற்றைக் கண்டு பெரும்பாலான முஸ்லிம்கள், இதன் உண்மையான பின்னணியை அறியாது கண்மூடித்தனமாக, இது நம்மைக் காக்கவந்த ஆபத்பாந்தவன் என எண்ணி இந்த அமைப்பினரை ஆதரிப்பதோடு, ஏதோ ஒரு வகையில் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையிலான அரசாட்சி உலகில் உதயமாகியிருப்பதை மகிழ்ச்சியுடன் புதிய நம்பிக்கையாகப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், தாம் இஸ்லாமிய நெறிப்படி நடப்பதாக .எஸ். அமைப்பினர் தம்மை விளம்பரப்படுத்திக் கொண்ட போதிலும், இந்த அமைப்பு முஸ்லிம் மக்களின், குறிப்பாக மத்திய கிழக்கின் விடிவுக்கான விடுதலை அமைப்பே அல்ல என்பதை அண்மைக்கால சம்பவங்களை உன்னிப்பாக அவதானித்தவர்கள் இலகுவாகப் புரிந்துகொள்வர்.

கடந்த இருபது ஆண்டுகளாக முஜாஹிதீன்கள், தாலிபான்கள், அல்கைதாக்கள் எனப் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள்; உருவாகி, தாங்கள்தான் உண்மையான இஸ்லாமிய நெறிப்படி நடப்பவர்கள் என்று கூறிக் கொண்ட போதிலும், இத்தகைய இயக்கங்களால் ஏகாதிபத்தியத்தையோ, காலனியாதிக்கத்தையோ ஒன்றும் செய்ய முடியவில்லை. காலத்துக்குக் காலம் தோன்றும் இவ்வாறான பயங்கரவாத இயக்கங்கள் அமெரிக்காவை எதிர்ப்பதைப் போலக் காட்டிக் கொண்டாலும், பல நாடுகளில் அமெரிக்காவின் கூலிப்படையாகவே இயங்கியுள்ளன என்பதே வரலாறு. இஸ்லாமிய சர்வதேசியம் பற்றிப் பேசும் இத்தகைய இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் ஏகாதிபத்தியங்களுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் கூட்டுச் சேர்ந்து தமது நிலையை வலுப்படுத்திக் கொண்டு, பெயரளவுக்குக்கூட ஜனநாயகமே இல்லாத அப்பட்டமான கொடுங்கோன்மையைத்தான் நிலைநாட்டின. இவற்றின் விளைவாக, உன்னதமான கலாசார, நாகரிகப் பின்னணியைக் கொண்ட முஸ்லிம் சமூகம், பல நூற்றாண்டுகள் பின்தள்ளப்பட்டு ஒரு இருண்ட காலத்திற்குள் செலுத்தப்பட்டு சென்ற இடமெல்லாம் அவர்;களைக் காட்டுமிராண்டிகளாகவும் மதவெறியர்களாகவும் வெறுப்போடு பார்க்கும்  அவலம்தான் நடந்துள்ளது.

இவர்கள் இஸ்லாத்துடன் எவ்வித தொடர்புமே இல்லாத, மனிதனால் நினைத்தும் பார்க்க முடியாத அட்டூழியங்களையெல்லாம் செய்துவிட்டு அதனை இஸ்லாத்தின் பெயரால் நியாயப்படுத்துகின்றனர். ஆப்கானிஸ்தானில் அபின் போன்ற போதைப் பொருட்களைப் பயிரிட்டு, வியாபாரமும் செய்து, தமது பிரதேசங்களில்; யுத்தப் பிரபுக்களாக, ஷரிஆ சட்டத்தை நிலைநாட்டுவதாகக் கூறிக்கொண்டு தன்னிச்சையாக ஆட்சி நடத்தியவர்களே தாலிபான்கள் என்பதை அனைவரும் அறிவர். அதனைத் தொடர்ந்து, அல்கைதா, இப்போது இஸ்லாத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு மூர்க்கமாகத்தனமாகப் படு கொலைகளில் ஈடுபட்டுவரும் .எஸ். என்ற அமைப்பு.

இதுவரை உலகில் தோன்றியதிலேயே மிகவும் இறுக்கமான, இரக்கமற்ற அடிப்படைவாத அமைப்பாக இருக்கும் இதன் உறுப்பினர், பிணைக் கைதிகளாக வெளிநாட்டவர் பலரையும் பிடித்து வைத்துக் கொண்டு பிணைத் தொகை கேட்டு மிரட்டுவதுடன் பணம் கொடுக்காவிட்டால் தலைகளைத் துண்டிக்கும் கொடூரச் செயல்களையும் அரங்கேற்றி வருகின்றனர். சுடப்பட்டு உயிர் துடித்துக் கொண்டிருக்கும் ஒருவரை, ஆட்டை அறுப்பதுபோல தொண்டையை அறுக்கிறார் ஒருவர். இன்னொருவர் அதை நிதானமாகப் படம் பிடிக்கிறார். துப்பாக்கிகளோடும் கொடிகளோடும் சூழ்ந்து நிற்பவர்கள் கோஷங்களை எழுப்புகின்றனர். தங்கள் வசம் பிணைக் கைதிகளாக இருந்த மேற்கத்திய  பத்திரிகையாளர்கள் பலரைப் படுகொலை செய்து வீடியோ வெளியிட்டதுடன், மேலும் சில பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப் பிரஜைகளைத் தங்களது ஆதரவாளர்களின் உதவியோடு படுகொலை செய்ய உள்ளதாகவும் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றது.

தன்னைத்தானே கலீஃபாவாக அறிவித்துள்ள பக்தாதி தலைமையிலான .எஸ் இயக்கம் தற்போது தாம் கைப்பற்றிய சில பிரதேசங்களைப் பறிகொடுத்து பின்னடைவை எதிர்நோக்கியிருந்தாலும், அவர்கள் அங்கிருந்து முற்றூக அகன்றுள்ளதாகத் தெரியவில்லை. ஒரு சில ஆயிரம் படை வீரர்களை மட்டுமே கொண்டுள்ள .எஸ் இயக்கத்தால் எவ்வாறு இந்தளவு வேகமாக முன்னேறிச் செல்ல முடிகிறது? குறைந்தளவிலான எண்ணிகையான படையினரை மட்டுமே கொண்டுள்ள .எஸ்;, பயிற்சி பெற்ற ஈராக்கியப் பெரும் படையை எதிர்கொண்டு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்ட ஈராக்கின் முக்கிய நகரங்களில் ஒன்றான மொசூல் நகரை எவ்வாறு கைப்பற்ற முடிந்தது?; ஈராக் மீது தனி அக்கறை கொண்டிருக்கும் அமெரிக்கா அதுவரையில் .எஸ் விடயத்தில் பாராமுகமாக இருந்தது ஏன்? என்பதெல்லாம்  மர்மமாகவே நீடிக்கின்றது.

ஓரிடத்திலிருந்து ஒளிந்து கொண்டு அவ்வப்போது தாக்குதலை மேற்கொள்ளும் ஒரு கெரில்லா அமைப்பாக இல்லாமல் அரண்கள் அமைத்து ஒரு இடத்தில் மட்டுப்படாமல் முன்னேறும் வழிகளிலேயே தாக்குதலுக்கான திட்டங்களையும் வகுத்து தொடர்ச்சியான தாக்குதல்களுடன் தனது இலக்கினை நோக்கி  .எஸ். நகர்ந்துகொண்டே இருக்கிறது. இதனால் தமது இருப்பினைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ள ஈராக் அரசானது .எஸ். இயக்கத்தின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த கடுமையான பிரயத்தனங்கள் எடுத்துவருவதோடு அமெரிக்காவின் உதவிகளையும் நாடி நிற்கின்றது. ஈராக் படையின் வான் வழித் தாக்குதல்களின் பின்னடைவே .எஸ். முன்னேறக் காரணமாகின்றது எனக் கூறப்படுகின்றது. ஆனால் ஈராக் வான்வழி தாக்குதல் சாதனங்களை அமெரிக்காவிடமிருந்தே  பெறவேண்டி இருப்பதால்;, அவற்றைப் பெறுவதில் அமெரிக்கா காலதாமதத்தை ஏற்பட்டுத்தி வருவதாக ஈராக் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, சோவியத் யூனியனுக்கு எதிரான பனிப்போரின்போது தன் சார்பில் போரிடுவதற்கு இவ்வாறான  குழுக்களை உருவாக்கியது பலருக்கு மறந்துபோன செய்தியாகும். சதாம், பின்லாடன், முல்லா உமர் என அமெரிக்கா உருவாக்கித் தந்த தலைவர்கள் பின்னர் அமெரிக்காவிற்கு எதிராக மாறியதும் எண்ணெய்ச் சந்தையை அமெரிக்க ஏகாதிபத்திய நலனுக்காக பயன்படுத்துவதற்கு சாதகமாக இருந்தவர்கள் பின்னர் பிரச்சினைக்கு ரியவர்களாக மாறியதும் அதன் விளைவாக அவர்களுக்கு நடந்த கதியும் நாம் கற்கவேண்டிய பாடங்கள் என்பதை நாம்; உணரத் தவறியமையே இன்றையப் பிரச்சினைகளுக்கெல்லாம் மூலகாரணம். இப்போதும் ஈராக்கில் ஆட்சியில் இருக்கும் தெரிவு செய்யப்பட்ட அரசைக் காப்பாற்றி ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் பாடுபடுவதாக அமெரிக்கா கூறி வருவது வெறும் ஏமாற்றுவித்தையே என்பதை அனைவரும் அறிவர். முன்னர் சதாமின் ஆட்சியில், ஈரானில் இஸ்லாமியப் புரட்சி ஏற்பட்டு அதன் மூலம் இதுவரை அனுபவித்து வந்த எண்ணெய் வளங்களை இழந்த அமெரிக்காவுக்காக, ஈரானுடன் ஒரு பதிலிப் போரை நடத்திய ஈராக்கும் அதன் தலைவரும் அதே அமெரிக்காவின் கையாலேயே அழிவுற்றமையும் ஈரான் தனது சுய நிலைப்பாடு காரணமாக இன்றும் தலைநிமிர்ந்து நிற்பதையும், அமெரிக்கா அந்நாட்டுக்கு எதிராக மறைமுக சதிகளில் ஈடுபட்டுவருவதையும் நாம் கவனத்திற்கொள்வது அவசியமாகும்.

எனவே எமது முதல் எதிரியான அமெரிக்காவை எதிர்க்காமல் இஸ்லாத்தை சீர்திருத்துவதாகக் கூறிக்கொண்டு இவர்கள் அப்பாவி மக்களைக் கொன்று குவித்துத் தமது ஏகாதிபத்திய அடிமைத்தனத்தை வெளிப்படுத்தி வருவதையே எம்மால் காணமுடிகின்றது. மறுபுறம் .எஸ்..எஸ் தீவிரவாதிகள் பிடித்திருக்கும் துப்பாக்கியும் மற்றும் ஆயுதங்களும், நிதியும் முன்பு அமெரிக்கா போட்ட பிச்சை என்பதை மறைத்து இத்தகைய தீவிரவாதிகளை மதப் போராளிகள் என்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரர்கள் என்றும் இஸ்லாமிய மதவாதிகள் பிரச்சாரம் செய்கின்றனர்.

ஷியா, சுன்னி, சூஃபி என வேறுபட்ட இஸ்லாமிய மார்க்கப் பிரிவுகள் இருந்த போதிலும், இவர்கள் மட்டும்தான் உண்மையான இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவதாகக்கூறி, ஏனையவர்களின் பள்ளிவாசல்கள்; மீது குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தி அவற்றைத் தரைமட்டமாக்கியுள்ளனர். குர்து மொழி பேசும் யேசிடி எனும் பழங்குடியினக் குழுவினரது வழிபாட்டு முறையைப் பேய் வழிபாடு என்று சாடும் .எஸ். இயக்கத்தினர், ஈராக்கின் சிறுபான்மையினரான இப்பழங்குடி இனத்தவர் மீது தாக்குதல் தொடுத்து அவர்களைத் தமது ஆதிக்கத்திலுள்ள பிராந்தியத்திலிருந்து விரட்டியடித்து வருகின்றனர். யேசிடி, ஷாபக், சால்டியன் கிரிஸ்த்தவர்கள், சிரிய கிரிஸ்த்தவர்கள் போன்ற மத, இனச் சிறுபான்மையினரும் ஷியா பிரிவு முஸ்லிம்களும் சுன்னி இஸ்லாமியபிரிவுக்கு மாற வேண்டும், அல்லது ஜெஷியா வரி செலுத்த வேண்டுமென இப்பயங்கரவாதிகள் எச்சரித்து, அவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்து வருகின்றனர். இதனால் சிறுபான்மையின மக்கள் கொத்துக்கொத்தாகக் கொல்லப்பட்டு வருவதோடு, எஞ்சியோர் அகதிகளாக ஈராக்கிலிருந்து தப்பியோடுகின்றனர்.

ஒருபுறம் கிலாபத் எனப்படும் இஸ்லாமியத் தாயகத்தை உருவாக்கப் போவதாகக் கூறிக்கொண்டு இந்தப் பிற்போக்குச் சக்திகள் சமூகத்தை இருண்ட காலத்துக்கு இழுத்துச் செல்லும்போது மறுபுறம், இஸ்லாமிய பயங்கரவாதத்தைக் காட்டி அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தனது மேலாதிக்கத் தாக்குதலுக்கு நியாயம் கற்பித்து, இத்தகைய பிற்போக்குச் சக்திகளைப் பயன்படுத்தித் தமது காலனியாதிக்கத்தையும் மேலாதிக்கத்தையும் நிலைநாட்டிக் கொள்கின்றன. மன்னர்கள், நிலப்பிரபுக்கள், ஷேய்க்குகள், போலி முல்லாக்கள் மற்றும் பிற சக்திகளின் நிலையை வலுப்படுத்தவே இத்தகைய போக்குகள் முயற்சிக்கின்றன. தாம் பேசுவதுதான் இஸ்லாம் என்று கூறிக்கொள்ளும் இவர்கள், இன்று சக இஸ்லாமிய சகோதர்களை அவர்கள் ஷியா பிரிவினர் என்ற காரணத்திற்காக ஈவிரக்கமின்றி கொன்று வருகின்றனர். வடக்கு ஈராக் பகுதியில் .எஸ்..எஸ் தீவிரவாதிகள், ஷியா பிரிவு மசூதிகளையும், வழிபாட்டுத் தளங்;களையும் இடித்து வருகின்றனர். புல்டோசர் மற்றும் வெடிமருந்துகளை வைத்து இவற்றை தகர்த்தெறிந்து அப்படையினர் முன்னேறி வருகின்றனர். அதுமட்டுமன்றி, இவர்கள் ஷியா பிரிவினரை உருவ வழிபாட்டாளர்கள் என்றும், மத நம்பிக்கை இல்லாதவர்கள் என்றும்; குற்றம் சாட்டுகின்றனர். அந்த காஃபிர்களின் வழிபாட்டுத் தலங்களை இடிப்பது தமது மார்க்கக் கடமை என்றும் கூறிக்கொள்கின்றனர்.

ஈராக்கைக் கூறுபோட்டு ஷியா, சுன்னி, குர்திஸ்தான் என பிரித்து ஆளப்படுவதை நோக்காகக்கொண்டு செயல்படும் அமெரிக்காதான் இதை ஆரம்பத்தில் இருந்து பல்வேறு பெயர்களில் பல்வேறு கோணங்களில் இயக்கி வருகிறது என்பதை நாம் உணரவேண்டும். இக்கூலிப்பட்டாளம் சிரியாவிலும் ஈராக்கிலும் நடத்திவரும் தாக்குதல்களை, எல்லை தாண்டிய பயங்கர வாதமாகக்; கருதமுடியுமே தவிர, அதனை ஜனநாயக உரிமைகளுக்கான ஆயுதப் போராட்டமாகவோ, மக்கள் இயக்கமாகவோ அல்லது மார்க்கத்தைக் காப்பதற்காக நடத்தப்படும் புனிதப் போராகவோ கருதிவிட முடியாது.

இந்த இயக்கத்தின் விஸ்வரூபமானது அரபு நாடுகளுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கும் பேராபத்து விளைவித்துவருவதை அண்மைக்கால சம்பவங்கள் உறுதிப்படுத்துகின்றன. அப்பாவி முஸ்லிம்கள் தங்களின் பிள்ளைகளை முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகளிடம் இருந்து காப்பாற்றியாக வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார்கள். பெரும்பான்மை மதவெறியால் தனிமைப்படுத்தப்படும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்கள், இத்தகைய அமைப்புகளின் வார்த்தை ஜாலங்களில் மதிமயங்கி அவர்கள் விரிக்கும் வலையில் சிக்கிவிடுகின்றனர். தலிபான், அல்கைதா தீவிரவாதக் குழுக்களில் தொடங்கி, இன்று உலகத்தையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் .எஸ்..எஸ் அமைப்பு வரை இதுதான் நிலவரம்.

.எஸ்.சதிக்கு எதிரான நடவடிக்கைகளில், மேற்கு நாடுகளிலும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் அந்த இயக்கத்தில் சேர முயற்சித்தவர்கள், பல ஆண்டு காலமாக அந்த இயக்கத்தில் செயல்பட்டு வந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்ட பலர்; கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையிலும் இவ்வமைப்பு ஊடுறுவியுள்ளதாகவும் அதனை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டுமெனவும் இனவாதக் குழுக்களுக்குத் தீனி போடும்விதமாக ஒரு அமைச்சர் அண்மையில் பேசியிருந்தார்;. எனவே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா போன்ற உயர் சபைகள் இவ்வமைப்புகளால் ஏற்படவிருக்கும் ஆபத்துகள் குறித்தும் அவர்களால் மேற்கொள்ளப்படும் குரூரமான படுகொலைகளுக்கு ஷரீஆ அடிப்படையிலான தண்டனை என்ன? என்பது குறித்தும் மக்களுக்கு அறிவூட்டுவதோடு எமது நிலைப்பாட்டை ஆணித்தரமாக வெளியிட்டு ஒரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவேண்டும். இல்லாவிட்டால் பி.பி.எஸ் போன்ற சக்திகள் நாம் அதன் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி;, பிரசாரத்தை முடுக்கிவிட்டு நம்மை வேட்டையாடும் வாய்பை நாமே ஏற்படுத்திக் கொடுத்தவர்களாவோம்இலங்கையில் பெரும்பாலான இஸ்லாமிய பத்திரிகைகளில்கூட .எஸ் தீவிரவாதிகளைப் போராளிகள் என்றே குறிப்பிடுகின்றன. அவர்களது உண்மையான உருவத்ததைத் தோலுரித்துக் காட்டுவதில் இவர்கள் காட்டும் தயக்கம் எம்மை இன்னொரு பேராபத்தில் சிக்கவைக்கும் என்பதை இவர்கள் ஏன் உணர்கிறார்க ளில்லையோ தெரியாது. இவ்விடயத்தில் நாம் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்ளாவிட்டால் முஸ்லிம்களுக்கு எதிராக குறிப்பிட்ட சில இனவாத அமைப்புகளால் விரிக்கப்பட்டுள்ள வலையில் நாமாகவே சிக்கிக்கொள்ள நேரிடும். எனினும் .எஸ். இயக்கத்தின் இலக்குகள் குறித்த துல்லியமான தகவல்கள் இல்லாத நிலையில் அது எங்கே செல்லப்போகிறது? அதன்மூலம் என்னென்ன ஆபத்துகளை உலகம் எதிர்நோக்கப்போகிறது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் காலம்தான் பதில் கூற வேண்டும்.


நாவலப்பிட்டி முஹம்மத் றஸீன்

No comments:

Post a Comment