Thursday, November 30, 2017

அமெரிக்காவின் எதிரிகள் பட்டியலில் உள்ளவர்கள் யார்
-பேராசிரியர் ஜேம்ஸ் பெட்ரஸ்

கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக, அமெரிக்கா எதிர்கொண்டு, தாக்கி, பலவீனப்படுத்தி, பதவியிலிருந்து அகற்றுவதற்கான எதிரி நாடுகளின் பட்டியலொன்றைத் தயாரித்துள்ளது.
'எதிரி நாடுகளை' அகற்றுவதற்காகப் பல்வேறு அம்சங்களின் தீவிரத்தன்மையில் செயல்பட்டு வரும் இந்த ஏகாதிபத்திய வேட்டை, முன்னுரிமை நிலை மற்றும் 'ஆட்சி மாற்ற' செயல்பாட்டு ஏதுநிலையின் தன்மை ஆகிய இரு விடயங்களில் தங்கியுள்ளது.
ஒரு 'எதிரி நாடு' மற்றும் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அமெரிக்க வேட்டையின் முன்னுரிமை இலக்குகளின் பட்டியலில் அதன் இடத்தையும், 'வெற்றிகரமான' ஆட்சி மாற்றத்திற்கான அதன் ஏதுநிலை ஆகியவற்றையும் தீர்மானிப்பதற்கான அடிப்படை இந்த கட்டுரையின் மையமாக இருக்கும். எதிர்கால ஏகாதிபத்திய விருப்புகளின் உண்மையான நோக்கங்களைப் பற்றி விவாதிப்பதன் மூலம் நாம் ஒரு முடிவுக்கு வரலாம்.

அமெரிக்க எதிரிகளை முன்னுரிமைப்படுத்தல்
ஏகாதிபத்திய மூலோபாயவாதிகள் உயர் முன்னுரிமை எதிர்ப்பாளர்களை அடையாளம் காண்பதில் இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் அடிப்படைகளைக் கருத்தில்கொள்கின்றனர்.

பின்வருவன அமெரிக்க எதிரிகள் பட்டியலில் உயர் முன்னுரிமை பெற்றவை:
1) ரஷ்யா, அதன் இராணுவ சக்தியின் காரணமாக, அமெரிக்க பூகோள ஆதிக்கத்திற்கு இணையான ஒரு அணுசக்தி வல்லமை பெற்றது. இது ஐரோப்பிய, ஆசிய மற்றும் மத்திய கிழக்கு முனையில் ஒரு பாரிய, பரிபூரண ஆயுதப்படையைக்கொண்டது. அதன் உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் அமெரிக்க பொருளாதார அச்சுறுத்தலிலிருந்து அதனைப் பாதுகாப்பதோடு வளர்ந்துவரும் அதன் பூகோள-அரசியல் கூட்டணிகள் அமெரிக்க விரிவாக்கத்தை கட்டுப்படுத்துகின்றன.

2) சீனா, அதன் உலகளாவிய பொருளாதார அதிகாரம் மற்றும் அதன் வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்ப வலையமைப்பு வளர்ந்து வரும் நோக்கம் காரணமாக. சீனாவின் வளர்ந்து வரும் தற்காப்பு இராணுவ திறன், குறிப்பாக ஆசியாவில் அமெரிக்க ஆதிக்கத்தை எதிர்ப்பதற்கு தென்சீனக் கடலில் அதன் நலன்களை பாதுகாப்பது தொடர்பானதாகும்.

3) வட கொரியா, அதன் அணுசக்தி மற்றும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும்; ஏவுகணைத் திறன் காரணமாக, அதன் கடுமையான சுதந்திரமான வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் அதன் மூலோபாய பூகோள-அரசியல் இருப்பிடம், ஆசியா மற்றும் வாஷிங்டனின் பிராந்திய நட்பு நாடுகள் மற்றும் பிரதிநிதிகளின் அமெரிக்க இராணுவ தளங்களுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.

4) வெனிசூலா, அதன் எண்ணெய் வளங்கள் மற்றும் சமூக-அரசியல் கொள்கைகளால், லத்தீன் அமெரிக்காவில், அமெரிக்க மையப்படுத்தப்பட்ட நவீன தாராளமய மாதிரிக்கு சவாலாக அமைந்திருத்தல்.

5) ஈரான், மத்திய கிழக்கில் அதன் எண்ணெய் வளங்கள், அரசியல் சுயாதீனம் மற்றும் பூகோள-அரசியல் கூட்டணிகளின் காரணமாக. ஈரான், பிராந்தியத்தில் அமெரிக்க, இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபிய மேலாதிக்கத்துக்கு சவால் விடுத்து, ஒரு சுயாதீனமான மாற்றீடை முன்வைக்கிறது.

6) சிரியா, மத்திய கிழக்கில் அதன் கேந்திர முக்கியத்துவம்  காரணமாக. சிரியா, அதன் மதச்சார்பற்ற தேசியவாத ஆளும் கட்சியும் ஈரான், பாலஸ்தீன், ஈராக் மற்றும் ரஷ்யாவுடனான அதன் நல்லுறவுகளும் மத்திய கிழக்கில் போரிடும் இனவாத பழங்குடி நாடுகளைத் துண்டாடும் அமெரிக்க இஸ்ரேலிய திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக இருத்தல்.

அமெரிக்க மத்திம நிலை  எதிரிகள்:
1) கியூபா, அதன் சுயாதீனமான வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் அதன் மாற்றீட்டு சமூக-பொருளாதார அமைப்பு ஆகியவற்றின் காரணமாக. கரீபியன், மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள அமெரிக்க மையப்படுத்தப்பட்ட புதிய தாராளவாத ஆட்சிகளுக்கு முரணாக உள்ளது.

2) லெபனான், மத்தியதரைக் கடலின் கிழக்கில் அதன் மூலோபாய ஸ்தானம் மற்றும் அரசியல் கட்சியான ஹிஸ்புல்லாவுடனான கூட்டரசாங்கத்தின் அதிகார பகிர்வு ஏற்பாடு ஆகியவற்றின் காரணமாக. லெபனானின் சிவில் சமுதாயத்தில் அதிகரித்துவரும்; அதன் செல்வாக்கு காரணமாக லெபனான் தேசிய இறைமையை பாதுகாக்க அதன் போராளிகளின் நிரூபிக்கப்பட்ட திறன் காரணமாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தை துரத்தியடித்து, அண்டை நாடான சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ்ஃஅல் கைதா கூலிப்படைகளை தோற்கடிக்க உதவியது.

3) யேமன், அதன் சுயாதீனமான, தேசியவாத ஹூதி தலைமையிலான இயக்கம், சவுதி அரேபியாவால் திணிக்கப்பட்ட பொம்மை அரசாங்கத்தை எதிர்த்தும், ஈரானுடனான நல்லுறவைப் பேணியும் வந்துள்ளமை காரணமாக.

கீழ் மட்டத்திலான எதிரிகள்:
1) பொலிவியா, அதன் சுயாதீனமான வெளியுறவுக் கொள்கையின் காரணமாக, வெனிசுலாவிலுள்ள சாவிஸ்டா அரசாங்கத்திற்கும் ஒரு கலப்பு பொருளாதார வாதத்திற்கும் ஆதரவு கொடுக்கிறது. சுரங்கச் சொத்துகளும் உள்நாட்டு குடிமக்களின் நிலப்பகுதி உரிமைகளை பாதுகாப்பதும் ஆகும்.

2) நிகரகுவா, அதன் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை மற்றும் கியூபா மற்றும் வெனிசுலாவை நோக்கிய அமெரிக்க ஆக்கிரமிப்பு பற்றிய விமர்சனங்களின் காரணமாக.

அமெரிக்கா, தனது முன்னுரிமை எதிர்ப்பாளர்கான வட கொரியா, ரஷ்யா, வெனிசுலா, ஈரான் மற்றும் சிரியா என்பவற்றுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை, இராணுவச் சுற்றி வளைப்பு, ஆத்திரமூட்டல்கள் மற்றும் விஷமப் பிரச்சார நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் தமது விரோதத்தை வெளிப்படுத்துகிறது.

சீனாவின் சக்தி வாய்ந்த உலகளாவிய சந்தை காரணமாக, அமெரிக்கா சில தடைகளையே விதித்துள்ளது. ஆனால், அதற்கு மாறாக, அமெரிக்கா, இராணுவச் சுற்றிவளைப்பு, பிரிவினைவாத ஆத்திரமூட்டல்கள் மற்றும் தீவிரமான விஷமப் பிரச்சாரம் ஆகியவற்றை நம்பியுள்ளது.

முன்னுரிமை எதிரிகள், குறைந்த ஏதுநிலை மற்றும் போலியான எதிர்பார்ப்புகள்
வெனிசுலா தவிர்ந்த, வாஷிங்டனின் 'உயர் முன்னுரிமை இலக்குகள்' வரையறுக்கப்பட்ட மூலோபாய ஏதுநிலைகளே உள்ளன. வெனிசுலாவின் முக்கிய பிரதான சுத்திகரிப்பு ஆலைகள் அமெரிக்கவில் அமைந்திருப்பதாலும், அதன் உயர்ந்த கடன்படுநிலை மற்றும்; எண்ணெய் வருவாய்களில் அதிகம் தங்கியிருத்தல் என்பன காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டு, இயல்புநிலையில் மாற்றம் காணப்படுகிறது. அத்துடன், உள்நாட்டு எதிர்ப்புக் குழுக்கள், அமெரிக்க வாடிக்கையாளர்களாக செயல்படுகின்றமை மற்றும் முக்கிய அமெரிக்க வாடிக்கையாளர்களான அர்ஜென்டினா, பிரேசில், கொலம்பியா மற்றும் மெக்ஸிகோ ஆகியவற்றின் மூலமான திட்டமிட்ட வகையிலான விரோதம் என்பன காரணமாக லத்தீன் அமெரிக்காவிற்குள் வெனிசுலா அதிக அளவில் தனிமைப்படுத்தப்படுகிறது.

ஈரான் மிகவும் குறைவாக பாதிக்கப்படக்கூடியது: இது அண்டை நாடுகள் மற்றும் இதேபோன்ற மத-தேசியவாத இயக்கங்களுடனான ஒரு வலுவான மூலோபாய பிராந்திய இராணுவ சக்தியாகும். எண்ணெய் ஏற்றுமதிகளில் தங்கியிருந்த போதிலும், ஈரான் சீனாவைப் போன்று மாற்று சந்தைகளை உருவாக்கியுள்ளதால், அமெரிக்க அச்சுறுத்தல்களிலிருந்து தப்பியுள்ளது. அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஒன்றியம் முன்னெடுத்துள்ள கடனாளித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக உள்ளது.

வட கொரியா, அதன் ஆட்சி மற்றும் குடிமக்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான பொருளாதார தடைகள் இருந்த போதிலும், அமெரிக்க இராணுவ தாக்குதளைத் தடுக்க்ககூடிய 'குண்டு' உள்ளதால் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளத் தயங்காது என்பதையும் காட்டியுள்ளது. வெனிசுலாவைப் போன்று, ஈரானோ அல்லது வடகொரியாவோ அமெரிக்கா நிதியுதவியுடனான அல்லது ஆயுதமேந்திய உள்நாட்டு எதிராளிகளிடமிருந்து குறிப்பிடத்தக்க உள்நாட்டு தாக்குதல்களை எதிர்கொள்ளவில்லை.

எந்தவொரு நேரடி அமெரிக்க இராணுவ அச்சுறுத்தலையும் தடுக்கக்கூடிய அணு ஆயுதங்கள், ஏவாயுதங்கள்; என்பவற்றைக்கொண்ட பாரிய, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆயுதப் படையுடனான இராணுவ வல்லமையை ரஷ்யா கொண்டுள்ளது. மாஸ்கோ, அமெரிக்க ஆதரவிலான பிரச்சாரம், அரசஎதிர்ப்பு அரசியல் கட்சிகள்;, மேற்கத்திய நிதியுதவியுடனான அரசு சாரா நிறுவனங்கள் போன்றவற்றால் அரசியல் ரீதியாக பலவீனப்பட்டுள்ளது. லண்டன் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டிற்கு தொடர்புள்ள ரஷ்ய தன்னல செல்வந்தர் குழுவினர், சுயாதீன பொருளாதார முயற்சிகளுக்கு எதிராக சில அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர்.

ஒரு குறைந்த அளவுக்கு, அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மேற்கத்திய சந்தைகளில் ரஷ்யாவின் முன்னைய தங்கியிருப்பை பாதித்தாலும், ஒபாமா ஆட்சியின்போது சுமத்தப்பட்ட கடுமையான பொருளாதாரத் தடைகளில் இருந்து, மாஸ்கோ அதன் சந்தைகளை ஆசியாவில் பரவலாக்குவதன் மூலமும் அதன் விவசாய, தொழில்துறை உயர் தொழில்நுட்பம் என்பவற்றில் உள்நாட்டு சுயாதீனத்தை வலுப்படுத்தியும் வாஷிங்டனின் தாக்குதலை திறமையாகக் கையாண்டு வருகின்றது.

சீனா ஒரு உலகத் தரத்திலான பொருளாதாரத்தை கொண்டுள்ளதால் அது உலக பொருளாதார தலைமைத்துவத்தைப் பெற்றுள்ளது. சீனா மீதான அற்பமான அச்சுறுத்தல்கள், பெய்ஜிங் மீதான அச்சுறுத்தல் என்பதைவிட, அது வெறுமனே வாஷிங்டனின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாகவே சீனா கருதுகிறது. சீனா அதன் பொருளாதார சந்தை அதிகாரத்தை விரிவாக்குவதன் மூலமும், அதன் மூலோபாய இராணுவத் திறனை அதிகரித்து, டாலர் மீது தங்கியிருப்பதைக் குறைத்தும், அமெரிக்க இராணுவ ஆத்திரமூட்டல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்த்து வருகிறது.

வாஷிங்டனின் உயர் முன்னுரிமை இலக்குகள் முன்னணி தாக்குதலுக்குத் தகுதியற்றவை: அவர்கள் தங்களுடைய உள்நாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார வலையமைப்புகளை தக்கவைத்துக்கொண்டு அல்லது அதிகரித்து வருகின்ற, அதே நேரத்தில், எந்த நேரடி தாக்குதலுக்கும், அமெரிக்கா முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத செலவினங்களை அதன் மீது திணித்துத் தங்கள் இராணுவத் திறனை மேம்படுத்துகின்றது.

இதன் விளைவாக, அமெரிக்க தலைவர்கள் அதன் உயர் முன்னுரிமை எதிர்ப்பாளர்களுக்கு எதிராக வரையறுக்கப்பட்ட முடிவுகளுடன் கூடுதலான, வெளியார் அல்லது மற்றொருவர் மூலமான தாக்குதல்களில் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

முன்னர் பெற்ற வட கொரியா விடயத்தில் சந்தேகத்திற்கிடமான வாய்ப்புக்களைக்கொண்ட  வெற்றி மற்றும் கராகஸ் விஷயத்தில் ஒரு சாத்தியமான பெரும் பணச்செலவிலான வெற்றி என்பவற்றுடன் வட கொரியா மற்றும் வெனிசுலா மீது வாஷிங்டன் பொருளாதாரத் தடைகளை இறுக்கமாக்கி வருகின்றது. ஈரான் மற்றும் ரஷ்யா ஆகியவை மற்றொருவர் மூலமான  தலையீடுகளை எளிதில் கடந்துவிடலாம். சவுதி அரேபியா மற்றும் இஸ்ரேலைப் போன்ற அமெரிக்க நட்பு நாடுகள் விஷமப்பிரசாரங்கள் மூலம்; பாரசீகர்களுக்கு தொல்லை கொடுக்க முடியும், ஆனால் ஈரானுக்கு எதிரான நேரடியான போர், விரைவில் ரியாத் மற்றும் டெல் அவிவ் ஆகியவற்றை அழித்துவிடும் என்ற அச்சத்தில் ஊழல் நிறைந்த அமெரிக்க அரசியல் ஸ்தாபனத்தைத் தூண்டுவதற்காக போர் விரக்தியிலுள்ள அமெரிக்க இராணுவம் மற்றும் மக்களுடைய ஆட்சேபனைகளுக்கு மத்தியில் போருக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஒன்றிணைந்து செயல்பட நிர்பந்திக்கப்படுகின்றன. சவுதி மற்றும் இஸ்ரேலியர்கள் யேமன் மற்றும் காஸா மக்கள் குண்டுவீசி; பாதிப்பை ஏற்படுத்தலாம், இதற்கு எந்தவிதமான பதிலடி கொடுக்கும் திறமையும் இல்லாமலேயே இருக்கலாம், ஆனால் தெஹ்ரானைப் பொறுத்தவரையில் அது வேறோர் விடயம்.

வாஷிங்டனில் இருக்கும் அரசியல்வாதிகள் மற்றும் பிரச்சாரகர்கள், அமெரிக்க ஊழல் நிறைந்த தேர்தல் அரங்கில் ரஷ்யாவின் தலையீPடு குறித்து கூக்குரலிடவும்; இராஜதந்திர உறவுகளை முன்னேற்றுவதற்கான சிரமங்களைத் தூண்டிவிடவும் முடியும், ஆனால் மத்திய கிழக்கில் ரஷ்யாவின் வளர்ந்து வரும் செல்வாக்கையோ ஆசியாவுடன், குறிப்பாக சீனாவுடனான அதன் வர்த்தக விரிவாக்கத்தையோ எதிர்கொள்ள அவர்களால் முடியாது.

சுருக்கமாக, உலக அளவில், அமெரிக்காவின் 'முன்னுரிமை' இலக்குகள் அடைந்துகொள்ள முடியாததும் சாத்தியமற்றதுமாகும். அமெரிக்காவிற்குள்ளேயே உயரதிகாரிகளுக்கிடையே நடைபெற்று வரும் கடுமையான போட்டிகளுக்கு மத்தியில், வாஷிங்டனில் மூலோபாய முன்னுரிமைகளை மறுபரிசீலனை செய்யக்கூடிய மற்றும் உலகளாவிய யதார்த்தங்களுடன் இணங்கிச் செல்லக்கூடிய பரஸ்பரப் புரிந்துணர்வுக் கொள்கைகளை அளவிடக்கூடிய எந்த பகுத்தறிவுள்ள கொள்கை வகுப்பாளர்களின் தோற்றம் என்பது நம்பகமானதாக இல்லை.

நடுத்தர மற்றும் கீழ் நிலை முன்னுரிமைகள், ஏதுநிலைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்
நடுத்தர மற்றும் கீழ் நிலை முன்னுரிமை நாடுகளில் வாஷிங்டன் தலையிடலாம், கடுமையான சேதத்தையும்; ஏற்படுத்தலாம். இருப்பினும், முழு அளவிலான தாக்குதலுக்கு பல பின்னடைவுகள் உள்ளன.

யேமன், கியூபா, லெபனான், பொலிவியா மற்றும் சிரியா போன்ற நாடுகள் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார கூட்டணியை உருவாக்குவதறகான திறன் அற்றவை. இந்தப் பலவீனமான நாடுகளில் அமெரிக்காவினால் செய்யக்கூடியவை, பாரிய இழப்புக்கள், உள்கட்டுமான மற்றும் மில்லியன் கணக்கான நம்பிகையிழந்த அகதிகள் என்பவற்றுடனான அழிவுமிக்க ஆட்சி மாற்றங்கள்தான். ஆனால் அவை பெரும் அரசியல் செலவில், நீண்டகால உறுதியற்ற தன்மை மற்றும் கடுமையான பொருளாதார இழப்புக்கள் ஆகியவற்றுடனேயே சாத்தியமாகின்றன.

யேமன்
யேமனில் பட்டினியாலும் கொலராவினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் மீதான சவுதி அரேபிய வெற்றிக்கு, அமெரிக்காவால் இட்டுச்செல்ல முடியும். ஆனால் யாருக்கு என்ன பயன்? சவூதி அரேபியா ஒரு அரண்மனை எழுச்சியின் நடுவே உள்ளது. நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் பெறுமதியான  அமெரிக்கஃநேட்டோ ஆயுதங்கள், பயிற்சியாளர்கள் மற்றும் தளங்கள் இருந்தபோதிலும் மேலாதிக்கம் செலுத்தும் திறனை அது கொண்டிருக்கவில்லை. பொருளாதார நலன்கள் ஏதுமில்லாத குறிப்பாக வறிய, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட பேரழிவு தரக்கூடிய யேமன் போன்ற நாட்டில் காலனித்துவ ஆக்கிரமிப்புக்கள் செலவு மிக்கது ஆனால் பயன் குறைந்தது.

கியூபா
கியூபா, ஒரு மில்லியன் போராளி உறுப்பினர்களால் உரமூட்டப்பட்ட ஒரு சக்திவாய்ந்த உயர் தொழில்சார் இராணுவத்தைக்கொண்டது. அவை நீண்டகால எதிர்ப்பை சமாளிக்கும் வல்லமை கொண்டது என்பதோடு சர்வதேச ஆதரவையும் பெறக்கூடியது. கியூபாவின் மீதான அமெரிக்க படையெடுப்பு நீண்டகால ஆக்கிரமிப்பு மற்றும் பாரிய இழப்புகளுக்கு இட்டுச்செல்லும்;. பல தசாப்தகால பொருளாதாரத் தடைகள் பயனளிக்கவில்லை. டிரம்பபினால் மீண்டும் திணிக்கப்பட்ட தடைகள்கூட முக்கிய சுற்றுலா வளர்ச்சித் துறைகளைப் பாதிக்கவில்லை.

ஜனாதிபதி டிரம்ப்பின் 'குறியீட்டு விரோதப் போக்கு', கியூபாவை ஒரு சந்தையாகப் பார்த்த அமெரிக்க விவசாய-வணிகக் குழுக்களுடன் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. 'வெளிநாட்டு கியூபர்கள்' என்று அழைக்கப்படுபவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் தற்போது நேரடியான அமெரிக்கத் தலையீட்டை எதிர்க்கின்றனர்.

அமெரிக்க நிதியுதவியுடனான என்.ஜி..க்கள் சில சிறிய பிரச்சார குறிப்புகளை வழங்க முடியும், ஆனால் கியூபாவின் 'சமூகமயப்படுத்தப்பட்ட' கலப்புப் பொருளாதாரம், சிறந்த பொது கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் அதன் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றிற்கு உள்ள மக்கள் ஆதரவைத் திருப்பிவிட முடியாது.

லெபனான்
ஒரு கூட்டு அமெரிக்க-சவுதி பொருளாதார முற்றுகை மற்றும் இஸ்ரேலிய குண்டுகள் லெபனானை சீர்குலைக்கக்கூடும். ஆயினும், ஒரு முழு அளவிலான நீண்டகால இஸ்ரேலிய படையெடுப்பு யூத உயிர்களை காவு கொள்வதோடு உள்நாட்டு அமைதியின்மையையும் தூண்டிவிடும். இஸ்ரேலிய குண்டுகளை எதிர்கொள்வதற்காக ஹிஸ்புல்லா ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. சவுதி பொருளாதார முற்றுகை, லெபனான் தேசியவாதிகளை, குறிப்பாக ஷியா மற்றும் கிறிஸ்தவ மக்களை தீவிரமயமாக்கிவிடும். ஒரு அமெரிக்க வீரனைக்கூட இழக்காத, வாஷிங்டனின் லிபிய 'படையெடுப்பு' நீண்டகால, கண்டம் முழுவதுமான பெரும் குழப்பத்தைத் தோற்றுவித்துள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.

ஒரு அமெரிக்க-இஸ்ரேலிய-சவுதிப் போர் லெபனானை முற்றிலும்  அழித்துவிடலாம், ஆனால் அது அப்பிராந்தியத்தை ஸ்திரமற்றதாக்கி, அண்டை நாடுகளான சிரியா, ஈரான் மற்றும் ஈராக் ஆகியவற்றில் முரண்பாடுகள் மேலும் அதிகரிக்கச்செய்யும். மில்லியன் கணக்கான திக்கற்ற அகதிகளால் ஐரோப்பா மூழ்கிவிடும்.

சிரியா
சிரியாவில் அமெரிக்க-சவுதி பினாமிப்; போர், கடுமையான தோல்விகளை ஏற்படுத்தியதோடு அரசியல் சொத்துக்களையும் இழக்க வைத்தது. ரஷ்யா செல்வாக்கு, தளங்கள் மற்றும் நேச நாடுகளையும் பெற்றது. சிரியா அதன் இறையாண்மையை தக்க வைத்துக் கொண்டதுடன், போரில் கடினமான தேசிய ஆயுத சக்தியையும் உருவாக்கியது. வாஷிங்டன் சிரியாவிற்கு தடைகளை விதிக்கலாம், சில தளங்களில் 'குர்திஷ் நிலப்பரப்பில்' சில தளங்களைப் அபகரிக்கலாம், ஆனால் அது ஒரு சிக்கல் நிலைக்கு அப்பால் முன்னேறாது. அத்துடன்;, பரவலாக ஒரு ஆக்கிரமிப்புப் படையெடுப்பாளராகவே நோக்கப்படுவர்;.

சிரியா பாதிக்கப்படக்கூடியது என்பதோடு அமெரிக்க எதிரி பட்டியலில் ஒரு நடுத்தர இலக்காகத் தொடர்ந்து இருக்கும், ஆனால் அது அமெரிக்க ஏகாதிபத்திய சக்தியை முன்னேற்றுவதற்கான சில வாய்ப்புக்களை ஏற்படுத்தும். ஒரு ஸ்திரமற்ற குர்து தேசத்துடனான சில வரம்புகளுக்குட்பட்ட உறவுகளுக்கு அப்பால், உள்நாட்டின் போர்முறைக்கு உட்பட்டு முக்கிய துருக்கிய பதிலடிக்கு முகம் கொடுக்கும் ஆபத்தை எதிர்நேக்குகிறது.

பொலிவியா மற்றும் நிகரகுவா
பொலிவியா மற்றும் நிகராகுவா ஆகியவை அமெரிக்க எதிரி பட்டியலில் சிறிய எரிச்சலூட்டும் நாடுகளாகும். உலகளாவிய அல்லது பிராந்திய சக்தியை அந்நாடுகள் பயன்படுத்துவதில்லை என்பதை அமெரிக்க பிராந்திய கொள்கை வகுப்பாளர்கள் அங்கீகரிக்கின்றனர். மேலும் இரண்டு அரசாங்கங்களும் நடைமுறையில் தீவிர அரசியலை நிராகரிப்பதோடு சக்தி வாய்ந்த மற்றும் செல்வாக்குள்ள உள்ளூர் தன்னலக்குழுக்களுடனும், அமெரிக்க தொடர்புள்ள சர்வதேச N உடன் சகவாழ்வை மேற்கொண்டு வருகின்றன.

பெரும்பாலும் உள்நாட்டு நுகர்வுக்கான அவர்களது வெளியுறவுக் கொள்கை விமர்சனங்கள், லத்தீன் அமெரிக்காவிலும்; முக்கிய நவ-தாராளவாத ஆட்சிகளிலும் அமெரிக்க செல்வாக்கினால் நடுநிலைப்படுத்தப்பட்டவை. லாபாஸ் அல்லது மனாகுவாவில் வெடித்த தீவிரவாத தேசியவாத அல்லது சோசலிச வெகுஜன இயக்கங்களின் எந்தவொரு புத்துயிர்ப்பையும் தூண்டிவிடும் ஆபத்தை விட அமெரிக்கா இந்த ஓரங்கட்டப்பட்ட பேச்சாற்றல் வாய்ந்த எதிர்ப்பாளர்களுக்கு இடமளிக்கும் என்று தோன்றுகிறது.

முடிவுரை
வாஷிங்டனின் 'எதிரிகளின் பட்டியலின்' ஒரு சுருக்கமான ஆய்வு, பாதிக்கப்படக்கூடிய இலக்குகளிலும்கூட வரையரைக்குட்பட்ட வெற்றி வாய்ப்புகளை வெளிப்படுத்துகிறது. இந்த ஆழ்ந்த உலக அதிகாரக் கட்டமைப்பில், அமெரிக்க பணம் மற்றும் சந்தைகள் அதிகார சமன்பாட்டை மாற்றாது என்பது தெளிவு.

சவுதி அரேபியாவைப் போன்ற அமெரிக்க நட்பு நாடுகள் அழிவடைந்த ஒரு நாட்டை தாக்குவதற்கு மகத்தான தொகையை செலவிடுகின்றன, ஆனால் அவை போர்களில் தோல்வி அடைவதோடு சந்தைகளையும் அழிக்கின்றன. சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற சக்திவாய்ந்த விரோதிகளை எளிதில் வீழ்த்தவிட முடியாது. எதிர்வரும் காலங்களில் பென்டகனுக்கு இராணுவ வெற்றிக்கான சில வாய்ப்புகளை அது வழங்கும்.

வட கொரியா, ரஷ்யா, கியூபா மற்றும் ஈரானில் எதிர்ப்பாளர்களை அடிபணியச் செய்வதற்கான தடைகள் அல்லது பொருளாதாரப் போர்கள் தோல்வியுற்றன. 'எதிரி பட்டியல்' காரணமாக அமெரிக்கா கொடுத்த விலை, அமெரிக்க மதிப்பு, பணம் மற்றும் சந்தைகள் - மிகவும் விசித்திரமான ஏகாதிபத்திய இருப்புநிலை என்பனவாகும். ரஷ்யா இப்போது கோதுமை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் அமெரிக்காவை மிஞ்சிள்ளது. அமெரிக்கா இழந்தவை, மாஸ்கோவுடனான வணிகம் உட்பட உலக வர்த்தகத்தில் அமெரிக்க விவசாய-ஏற்றுமதிகள் ஆதிக்கம் செலுத்திய நாட்களாகும்.

எதிரிகள் பட்டியலை உருவாக்குவது சுலபம், ஆனால் திறமையான கொள்கைகளை போட்டியாளர்களுக்கு எதிராக சக்திவாய்ந்த பொருளாதாரங்கள் மற்றும் இராணுவத் தயார்நிலைகளுடன் பிரயோகிப்பது மிகவும் கடினம்.

உலகளாவிய யதார்த்தங்களின் சூழல்களில் செயல்பட்டு, பூஜ்யம் நிறைந்த ஆட்டத்தில் தொடர்ச்சியான தோல்வியைத் தக்கவைத்துக் கொள்ளாமல் வெற்றிபெற்ற நிகழ்ச்சி நிரலைப் பின்தொடர்ந்தால், அதன் நம்பகத்தன்மை சிலவற்றை அமெரிக்கா திரும்பப் பெறலாம்.

பகுத்தறிவுள்ள தலைவர்கள், உற்பத்தியாளர்களுடனும் சேவைகளுடனும் உயர் தொழில்நுட்பம், நிதி; மற்றும் விவசாய வர்த்தக உறவுகளை  அபிவிருத்தி செய்யும் சீனாவுடன், பரஸ்பர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த முடியும். ரஷ்ய-ஈரானிய-லெபனானிய ஹிஸ்புல்லா மற்றும் சிரிய கூட்டணியின் யதார்த்தத்தை அங்கீகரிப்பதன் மூலம் பகுத்தறிவுள்ள தலைவர்களால் கூட்டு மத்திய கிழக்கு, பொருளாதார மற்றும் சமாதான ஒப்பந்தங்களை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும்.

எவ்வாறாயினும், வாஷிங்டனின் 'எதிரிகள் பட்டியல்' ஜனநாயகக் கட்சியில் உள்ள அதன் சொந்த, இஸ்ரேல் சார்பானவர்களும் ரஷ்ய எதிர்ப்பாளர்களுமான பகுத்தறிவற்ற தலைவர்கள் மூலம், தொடர்ந்து உருவாக்கப்பட்டும் திணிக்கப்பட்டும் வருகிறது.

அமெரிக்கர்களுக்கு, உள்நாட்டு எதிரிகளின் பட்டியல் நீண்டதாகவும் நன்கு அறியப்பட்டதாகவும் உள்ளது. இங்கு, பற்றாக்குறையாக இருப்பது, இந்தத்; தவறான தலைவர்கள் கூட்டத்தை மாற்றுவதற்கான ஒரு பொதுமக்கள் சார்ந்த அரசியல் தலைமைத்துவமே ஆகும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------ஜேம்ஸ் பெட்ராஸ் நியூயார்க், பிங்ஹாம்டன் பல்கலைக் கழகத்தில் ஒரு சமூகவியல் பேராசிரியர் (ஓய்வு பெற்ற) ஆவார்.
தமிழில்: முஹம்மத் றஸீன், நாவலப்பிட்டி



No comments:

Post a Comment