Saturday, August 25, 2018


பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்கள்

பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் தலைவர் இம்ரான் கான் 2018 ஆகஸ்ட் 18ஆம் திகதி நாட்டின் 22வது பிரதமராகப் பதவி ஏற்றார்.

1947 ஆகஸ்ட் 14 ம் திகதி உலக வரைபடத்தில் ஒரு சுயாதீன நாடாக பாகிஸ்தான் உதயமானது. அப்போதிருந்து பாகிஸ்தானின் அரசியலானது, இராணுவச்சட்டம் உட்பட பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது.

   
  லியாகத் அலி கான் முதல் இம்ரான் கான் வரை பதவிவகித்த பிரதமர்கள்



இந்நிலையில் பாகிஸ்தானின் ஒவ்வொரு முன்னைய பிரதமர்களை நோக்கும்போது பாகிஸ்தானிய அரசியலின் பலவீன நிலை புலப்படும்.

                                                         பிரதமர் வாசஸ்தளம்
லியாக்கத் அலி கான்: பாகிஸ்தானின் முதல் பிரதமராக    
அதன் சிற்பி முஹம்மத் அலி ஜின்னாவே விளங்குவார் என எதிர்பார்த்த அனைவரையும் அதிசயிக்கவைக்கும் வகையில் அவர் பாகிஸ்தானின் முதல் ஆளுனர் நாயகமாகநியமிக்கப்பட்டார்அவரே  லியாக்கத் அலி கானை நாட்டின் முதல் பிரதமராக நியமித்தார். ஆனால் ஒரு குறுகிய காலமே பிரதமராகப் பதவி வகித்த லியாக்கத் அலி கான் துரதிஷ்டவசமாக, 1951 அக்டோபர் 16ஆம் திகதி  படுகொலை செய்யப்பட்டார்.

குவாஜா நஸிமுத்தீன் அக்டோபர் 17, 1951 அன்று இரண்டாவது பிரதமராக நியமனமானார். ஆனால் அன்றைய ஆளுநர் நாயகம் மாலிக் குலாம் முகம்மத் ஏப்ரல் 17, 1953 அன்று அவரது அரசாங்கத்தை கலைத்மையால் அவர் பதவி துறந்தார்.
முகம்மத் அலி போக்ரா 1953 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் திகதி நாட்டின் மூன்றாவது பிரதமராக நியமிக்கப்பட்டார். இராஜதந்திரியான இவர் பாகிஸ்தானிய அரசியலில் ஒரு அறியப்படாத ஆளுமை.  இவர் செயற்திறன் அமைச்சொன்றை  நிறுவினார், ஆனால் 1954 சட்டமன்ற தேர்தல்களின் பின் அவரது நிர்வாகம் ஆகஸ்ட் 12, 1955 இல் ஆளுனரால் கலைக்கப்பட்டது.

சௌத்ரி முகம்மத் அலி 1955, ஆகஸ்ட் 12 ம் திகதி பாகிஸ்தானின் நான்காவது பிரதமர் ஆனார். முஸ்லீம் லீக், அவாமி லீக் மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவற்றின் முதலாவது கூட்டரசாங்கத்தின் மூலம் நியமிக்கப்பட்ட அவர் ஒரு நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியைத் தொடர்ந்து, செப்டம்பர் 12, 1956இல் தனது சொந்த கட்சியினாலேயே தூக்கியெறியப்பட்டார்.

ஹுசைன் ஷஹீத் சுஹ்ரவர்தி செப்டம்பர் 12, 1956 இல் நாட்டின் ஐந்தாவது பிரதமராக நியமனமானார். சட்டத்துறையில் அவரது திறமை காரணமாக பிரபலமான சுஹர்வர்தி, அவருடைய கட்சி அவருடைய கட்டுப்பாட்டை மீறி செயலபட்டதாலும்; தனது நிர்வாகத்தில் கூட்டணி பங்காளிகளின் ஆதரவை இழந்ததன் காரணமாகவும் அக்டோபர் 17, 1957 அன்று பதவி விலகினார்.

இப்ராஹிம் இஸ்மாயில் சண்ட்ரிகார் 1957, அக்டோபர் 17 இல் பாக்கிஸ்தானின் ஆறாவது பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். 1957 டிசம்பர் 16இல் குடியரசுக் கட்சி மற்றும் அவாமி லீக் இணைந்து கொண்டுவந்த  நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியடைந்ததால்; 55 நாட்களில் அவர் பதவி துறந்தார்.

நூருல் அமின் 1971 பொதுத் தேர்தலை அடுத்து டிசம்பர் 7, 1971 அன்று நாட்டின் எட்டாவது பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் டிசம்பர் 20, 1971 வரை 13 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்தார். அதேநேரம் 1970 முதல் 1972 வரை இவரே பாக்கிஸ்தானின் முதலாவதும் ஒரே துணை ஜனாதிபதியாகவும் விளங்கினார்.

ஸுல்பிகார் அலி பூட்டோ, 1973 ஆகஸ்ட் 14 ஆம் திகதி நாட்டின் ஒன்பதாவது பிரதமராக ஆனார். பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஸ்தாபகரான இவர் 1977 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் திகதி அவரால் நியமிக்கப்பட்ட இராணுவத் தளபதியான ஜெனரல் ஸியா உல் ஹக், என்பவரால் 1977இல் இராணுவச் சட்டத்தின் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

முஹம்மது கான் ஜுனேஜோ, 1985 ஆம் ஆண்டு மார்ச் 24 ஆம் திகதி, பாகிஸ்தான் சார்பில் கட்சி அடிப்படையிலில்லாத தேர்தலொன்றில் சுயேட்சை வேட்பாளராக வென்று 10வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பதவிக்கு வருமுன்பும் வந்த பின்பும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்குக்காகவே அவர் பணியாற்றினார். மே 29, 1988; அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தின்படி ஜனாதிபதி ஸியா உல் ஹக்; அவரைப் பதவி நீக்கம் செய்தார்.

பெனாசீர் பூட்டோ, டிசம்பர் 2, 1988இல் பாகிஸ்தானின் 11வதும் முதல் பெண் பிரதமராகவும்; பதவியேற்றார். ஆகஸ்ட் 6, 1990 இல் ஜனாதிபதி குலாம் இஷாக் கான், அரசாங்கத்தின் ஊழல் மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க இயலாமை போன்றவற்றைக் காரணங்காட்டி அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தின் கீழ் பூட்டோவின் அரசாங்கத்தைப் பதவிநீக்கம் செய்தார்.

நவாஸ் ஷெரிப், அவரது கட்சியான இஸ்லாமி ஜம்ஹூரி இத்திஹாத் மூலம் நவம்பர் 1, 1990இல் பாகிஸ்தானின் 12 வது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனாதிபதி குலாம் இஷாக் கான் ஏப்ரல் 1993இல் அவரது அரசாங்கத்தைக் கலைத்தார், அது பின்னர் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்டது. 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் திகதி ஜனாதிபதியும் அகற்றப்படவேண்டும்; என்ற ஒரு உடன்பாட்டுடனான பேச்சுவார்த்தையின் முடிவாக ஷெரீப் ராஜினாமா செய்தார்.

பெனாசீர் பூட்டோ, அக்டோபர் 19, 1993இல் இரண்டாவது முறையாகப் பிரதமரானார். நவம்பர் 5, 1996இல் ஜனாதிபதி பாரூக் லெகாரியால் அவரது அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்படும் வரை பாகிஸ்தானின் 13 வது பிரதமராக அவர் பணியாற்றினார்.

நவாஸ் ஷெரீப், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (N) தலைவரான இவர் மீண்டும் பிப்ரவரி 17, 1997 இல் பாகிஸ்தானின் 14வது பிரதமரானார். அக்டோபர் 12, 1999ஆம் திகதி ஜெனரல் பர்வீஸ் முஷர்ரப் நாடு முழுவதற்குமான இராணுவ சட்டத்தைப் பிரகடனப்படுத்தி நவாஸ் ஷெரீபைப் பதவி நீக்கம் செய்தார்.

மிர் ஸபருல்லா கான் ஜமலி, பாகிஸ்தான் முஸ்லீம் லீக் () மூலம் இவர் நவம்பர் 23, 2002இல் பாகிஸ்தானின் 15வது பிரதமராக தெரிவானார். அவர் பர்வேஸ் முஷர்ரபின் வெளியுறவு மற்றும் பொருளாதார கொள்கைகளைத் தொடர்ந்தார், ஆனால் தொடர்ந்து பதவி வகிக்க முடியாத நிலையில்; ஜூன் 26, 2004 அன்று பதவியிலிருந்து விலகினார்.

சவுத்ரி ஸுஜாத் ஹுசைன், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் () மூலம் ஜூன் 30, 2004 அன்று பாகிஸ்தானின் 16 வது பிரதமராக ஆனார். ஷவுக்கத்; அஸீஸ் அஸீஸ் நிரந்தரமாக பிரதமர் பதவியில் அமரும் வரை 50 நாட்கள் அப்பதவியை வகித்தார். ஜூன் 30, 2004 அன்று அவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.

ஷவுக்கத்; அஸீஸ் அஸீஸ், பாகிஸ்தானின் 17 வது பிரதமராக ஆகஸ்ட் 28, 2004இல் பொறுப்பேற்றார். அவர் நவம்பர் 15, 2007 அன்று பாராளுமன்ற காலத் தவணை முடிவில் பதவியில் இருந்து விலகினார். பாராளுமன்ற காலத் தவணை முடிவில் பதவி துறந்த முதல் பாகிஸ்தானின்; பிரதமராக இவர் விளங்குகிறார்

யூசுஃப் ராஸா கில்லானி, பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் மூத்த தலைவரான இவர் மார்ச் 25, 2008 அன்று பாகிஸ்தானின் 18 வது பிரதமராக ஆனார். அவர் ஜூன் 19, 2012 அன்று உச்ச நீதிமன்றத்தை அவமதித்ததற்காக, நாடாளுமன்ற ஆசனத்துக்குத் தகுதியற்றவரானார்.

ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் ஜூலை 22, 2012 அன்று பாகிஸ்தானின் 19வது பிரதமராகப் பதவியேற்றார். 2013 மார்ச் 24 வரை நாடாளுமன்றம் அதன் ஐந்து ஆண்டு காலத் தவணை முடிவடையும் வரை அவர் சேவை செய்தார்.
நவாஸ் ஷெரீப் மூன்றாம் முறையாக ஜூன் 5, 2013இல் பாகிஸ்தான் பிரதமர் பதவியில் அமர்ந்தார். ஜூலை 28, 2017 ஆம் ஆண்டு வரை 20 வது பிரதமராக பணியாற்றிய அவர். ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளியாக் காணப்பட்டதால் அவர் பதவியிழந்தார்.

ஷஹீத் ஹகான் அப்பாஸி, பாகிஸ்தானின் 21வது பிரதமராகப் பதவியேற்ற பாக்கிஸ்தான் முஸ்லீம் லீக்-N இன் மற்றொரு மூத்த தலைவராவார். நவாஸ் ஷெரிப் அகற்றப்பட்ட பிறகு இவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்றம் அதன் ஐந்து ஆண்டு காலத் தவணையை நிறைவு செய்த 31 மே 2018 வரை பதவி இவர் வகித்தார்.

மேலே உள்ள பாகிஸ்தானின் 21 முன்னாள் பிரதமர்களில்; எவருமே அரசியல் யாப்பில் குறிக்கப்பட்ட ஐந்து வருட காலத் தவணையைப் பூர்த்திசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது ரு உலக சாதனையாகவும் இருக்கலாம்.


இன்றுவரை உயிரோடு இருக்கும் முன்னைய பிரதமர்கள்

இந்தப் பின்னணியிலேயே இம்ரான்கான் பாகிஸ்தானின் 22வது பிரதமராகப் பதவியேற்றுள்ளார். சிறந்த முற்போக்குத் திட்டங்களுடன் பதவிக்கு வந்துள்ள இவர் அவற்றை வெற்றிகரமாக முன்னெடுத்து ஒரு நவீன பாகிஸ்தானை உருவாக்குவாரா? பல்வேறு கலவரங்களும் மதப் பிரிவினைவாதங்களும் பயங்கரவாத அமைப்புகளின் செயற்பாடுகளும் நிறைந்த பாகிஸ்தானை அமைதிப்படுத்துவாரா? என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியவை. குறைந்தபட்சம் இவராவது முழுப் பாராளுமன்றத் தவணையைப் பூர்த்திசெய்த முதல் பிரதமராக வந்தாலே அதுவும் ஒரு சாதனைதான்! 

தொகுப்பு: முஹம்மத் றஸீன், நாவலப்பிட்டி

Wednesday, August 22, 2018


முஸ்லிம் விவாக விவகாரம் 
பாத்தும்மா நாச்சியா

அனைவருக்கும் நன்றி கூற நாம் கடமைப்பட்டுள்ளோம். டச்சு கவர்னர் I.M. Falck முதல், கடைசியாக சமர்ப்பிக்கப்பட்ட கடைசி அறிக்கையில் கடைசியாக ஒப்பமிட்டுள்ள சகோதரி பஸ்லத் ஷஹாப்தீன் வரை அனைவருக்கும்.
நீண்ட காலமாக வேண்டப்பட்டு வந்த சீர்திருத்தங்கள் எமது காலத்துக்குள்ளேயே கிட்டிவிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் பெறுமதி மிக்க தமது காலங்களையும், பிற வளங்களையும் முதலீடு செய்து பிரயாசைகள் பல எடுத்து அறிக்கைகள் சமர்ப்பித்து அனைத்தும் வியர்த்தமாகிவிட்ட விரக்தியில் உழன்று கொண்டிருக்கும் எமது சகோதர, சகோதரியர் அனைவருக்கும்.

கமிட்டியின் நடவடிக்கைகள் செவ்வனே நிறைவேற காரியாலயப் பணிகளில் அயராது உழைத்துக் கருமமாற்றி ஒத்தாசை வழங்கிய அனைவருக்கும்.
கூடவே, தனியார் சட்டச் சீர்திருத்த முனைவுகளில் தனியாத ஈடுபாடு கொண்டு உழைத்து, ஆரம்ப முதல் இற்றை வரையான காலப்பகுதியினுள் இவ்வுலக வாழ்வை நீத்தார் அனைவருக்கும்.

66 வருடங்களுக்கு முன்னான ஒரு சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கென முன்னம் நியமனமான பல குழுக்களுக்கும் மேலதிகமாக கடைசியாக நியமனமான குழு ஒன்பது வருடங்களின் பின்னர் சமர்ப்பித்துள்ள அறிக்கை கண்டு கொள்ள முடியாது போன தீர்வுகள் ஒரு புறம் இருக்க அது கிளறிவிட்டுள்ள பிரச்சினைகளோ ஏராளம்.

ஒன்பது வாரங்களில், மித மிஞ்சிப்போனால் ஒன்பது மாதங்களில் சமர்ப்பித்திருக்கக்கூடிய ஓர் அறிக்கை ஒன்பது வருடங்களின் பின்னர் முரண்பாடுகள் கொண்ட இரு அறிக்கைகளாகச் சமர்ப்பிக்கப்பட்டிருப்பது வருந்தத்தக்கது. காரணம், குழு இரண்டாகப் பிளவுபட்டிருப்பது.

அறிக்கை தயாரிப்பின் போது குழு இரண்டாகப் பிளவுபட்டுவிட்டது என்றுதான் அனைவரும் கருதுகின்றோம். உண்மை அதுவல்ல. கமிட்டி ஆரம்பிக்கும் முன்னமேயே அவர்கள் பிளவுபட்டிருந்தனர் என்பது தான் உண்மை.

முரண்பட்டாலும் கூட இருசாராரும் இரண்டு விடயங்களில் ஒன்றுபட்டிருப்பது போலத் தெரிகின்றது. ஒன்று, பெண்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றது என்பதில். மற்றது, ஒழுங்கீனமும், ஊழல்களும் நிறைந்தனவாகத்தான் காஸி நீதிமன்றங்கள் இருக்கின்றன என்பதில்.

பிரச்சினைகள் இருப்பின் அவற்றை அணுகுவதற்கு சில வரைமுறைகளை வகுத்துக்கொள்வது அவசியம். நூற்றாண்டு காலங்களாகப் பெண்களுக்குப் பிரச்சினைகள் இருந்து வந்திருக்கின்றன என்றால், அவற்றை அணுகுவதற்கு சட்டப்புத்தகங்களையும் பேர் இமாம்களது கிரந்தங்களையும் கைகளிலேந்தி பக்கங்களைப் புரட்டிப்புரட்டிச் சட்டாம்பித்தனம் காட்டுவதல்ல கெட்டித்தனம். எமது பெண்கள் வேற்று கிரகங்கள் எதிலுமிருந்து வந்தவர்கள் அல்லர். எம்மோடே இருப்பவர்கள், எமது குடும்பத்தவர்கள், எமது உடன்பிறப்புகள், எமது மனைவியர், எமது தாயர், எமது குழந்தைகள், எமது சகோதரியர், எமது குழந்தைகளின் தாயர். எம்மவர்களில் அவர்கள் பாதி. லௌகீக வாழ்வைப் பொருள் பொதிந்ததாகச் செய்யும் அவர்கள் எங்களது இல்லங்களின் உள்ளேயே இருப்பவர்கள். இவர்களுக்குப் பிரச்சினைகள் என்றால், அவற்றைத் தீர்க்க வழி காணாமல் ஆறு தசாப்தங்களுக்கும் மேலாக, எமது மேதாவிலாசத்தையும் வித்தகச் செருக்கையும் காட்டுமுகமாக சட்டப் புத்தகங்களையும், பிக்ஹு கிரந்தங்களையும் மேய்ந்து கொண்டிருப்பது தகுமா என்ன?

பிரச்சினைகளை அணுகும் போது அடிப்படையில் இருக்க வேண்டியது அன்பு, இரக்கம், கருணை, ஆதரவு, காருண்யம். இது தான் ஸுன்னா. இது தான் இஸ்லாம்.

அஸ்லம் கோத்திரத்து மாலிக்கின் மகன் மாஇஸ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'யா ரஸுலுல்லாஹ்! எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன். நான் விபச்சாரம் செய்து விட்டேன். என்னைத் தூய்மைப்படுத்துங்கள்' என்றார். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திருப்பி அனுப்பிவிட்டார்கள். மறுநாளும் மாஇஸ் வந்து, 'யா ரஸுலுல்லாஹ்! நான் விபச்சாரம் செய்துவிட்டேன்' என்றார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்கள். பிறகு அவருடைய குலத்தாரிடம் ஆளனுப்பி, 'அவருடைய அறிவில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டுள்ளதாக நீங்கள் அறிகிறீர்களா? அவரிடம் ஏதேனும் ஆட்சேபகரமான நடவடிக்கையைக் காண்கிறீர்களா?' என்று விசாரித்தார்கள். அதற்கு அம்மக்கள், 'முழுமையான அறிவோடுதான் அவர் உள்ளார் என்றே நாங்கள் அறிகிறோம். எம்மைப் பொறுத்தளவில் அவர் எங்களில் நல்ல மனிதர்களில் ஒருவராக உள்ளார்' என்று கூறினர்.

மூன்றாம் முறையாகவும் வந்தார் மாஇஸ். அவரைத் திருப்பி அனுப்பிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) மீண்டும் விசாரித்தார்கள். மக்கள் முன்னம் கூறியதையே கூறினர்.

நான்காம் முறையாகவும் மாஇஸ் வந்து தனக்குரிய தண்டனையை நாடி நின்றபோதுதான் அவருக்குரிய தண்டனை நிர்ணயமானது.

செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டவருக்குத் தண்டனை வழங்கும் போது கூட தயாளமும், கருணையும், அன்புமே மிகைத்து நிற்க வேண்டும் என்பது ஸுன்னா.

காமிதிய்யா குலத்துப் பெண்ணொருத்தி பெருமானார் முன் தோன்றினாள். 'யா ரஸுலுல்லாஹ்! நான் விபச்சாரம் செய்துவிட்டேன். என்னைத் தூய்மைப்படுத்துங்கள்' என்றாள். அவளைத் திருப்பி அனுப்பி விட்டார்கள் நபிகள் நாயகம் (ஸல்). மறுநாள் வந்தாள் அவள். 'யா ரஸுலுல்லாஹ்! ஏன் என்னைத் திருப்பி அனுப்புகின்றீர்கள்? மாஇஸ்ஸைப் போன்று என்னையும் திருப்பி அனுப்புகின்றீர்கள் போலும். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! தகாத உறவினால் நான் கர்ப்பமுற்றுள்ளேன்' என்றாள்.

நபிகள் (ஸல்), 'இல்லை, நீ சென்று குழந்தையைப் பெற்ற பின் வா' எனக்கூறி அனுப்பிவிட்டார்கள். குழந்தை பெற்ற பின் அப்பெண் ஒரு துணியில் குழந்தையை எடுத்துக் கொண்டு நபிகளாரிடம் வந்து, 'இதோ நான் பெற்ற குழந்தை' என்றாள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'நீ போய் இந்தக்குழந்தைக்குப் பாலூட்டு. பால்குடி மறந்தபின் வா' என்று அனுப்பிவிட்டார்கள்.

பால்குடி மறக்கடித்த பின் அப்பெண் தனது சிறுவனுடன் வந்தாள். அவனது கையில் ரொட்டித் துண்டொன்று இருந்தது. அவள் கூறினாள், 'யா ரஸுலுல்லாஹ்! இவனுக்குப் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது உணவு உட்கொள்கின்றான்'.

பின்னரே அவளுக்குரிய தண்டனை நிறைவேற்றம் பெற்றது. கருணா சாகரம் எம்பெருமான் (ஸல்). அன்னார் காட்டிய வழிச் செல்வது எம் கடமை.
சமூகத்தில் கல்வியினால், மதிப்பினால், அந்தஸ்த்தினால் உயர்தரங்களை ஈட்டிக்கொண்டவர்கள், தமது மக்கள் மீது கருணையும் அனுதாபமும் கொண்டு அவர்களை வழி நடாத்திச் செல்ல வேண்டும்.

மனிதர்களிடையே தீர்ப்புக் கூறினால் நீதத்துடன் தீர்ப்புக் கூற வேண்டும் என்பது குர்ஆனின் கட்டளை. 'உங்களுக்கோ, உங்களின் பெற்றோருக்கோ, இன்னும் உங்கள் உறவினர்களுக்கோ பாதகமாக இருந்தாலும் சரி... நீதி செய்வதையிட்டு உங்கள் மனோ இச்சையை நீங்கள் பின்பற்றாதீர்கள்' என்பதுதான் குர்ஆனிய நெறி.

அநீதி இழைக்கப்பட்டவருக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் திரையேதும்  இல்லை என நாம் எச்சரிக்கப்பட்டுள்ளோம்.

அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை என்பது வள்ளுவம்.

மேற்கண்ட பீடிகைகளுடன் நாம் அறிக்கை அல்லது அறிக்கைகளுக்கு வருவோம்.

வைபவ செலவினங்களுக்கும் மேலாக திருமணத்தில் பணமும் பொருளும் வகிக்கும் பங்கு பற்றிய தெளிவு அவசியம். இதில் பிரதான இடம் வகிப்பன மஹர், கைக்கூலி, சீதனம் என்பன. முதல் சாரார் இவை குறித்துப் பல படப் பேசியுள்ளனர். பின்னையவர்கள் இவை குறித்து எதுவும் பேசாது, ஆமாம், எதுவுமே பேசாது விட்டுள்ளனர். 'சம்மதத்தைக் குறிப்பது மணப்பெண்ணின் மௌனம்' என்பது ஹதீஸ் ஆனதால் முன்னவர்களது கருத்துகளின் அங்கீகாரம் பின்னவர்களின் மௌனம் எனக்கொள்ள வேண்டியுள்ளது.
மூன்று அம்சங்களையும் வரையறை செய்து காண பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரிகின்றது. ஒவ்வொன்றாய்ப் பார்ப்போம்.


மஹர்.


'மஹர் என்பது மணவாளனால் அல்லது அவர் சார்பாக திருமணத்தின் போது மணவாளிக்கு அவளைக் கௌரவிக்கும் வகையில் அவளது பாவனைக்கென கொடுக்கப்படும் அல்லது கொடுப்பதாக வாக்களிக்கப்படும் பணம் அல்லது அசையும், அசையா ஆதனங்கள் அல்லது வேறு ஏதேனும் பெறுமதியான பொருட்களைக் குறிக்கும்'.

இவ்வாறு தான் மஹர் சித்தரிக்கப்படுகின்றது. இதை நாம் சற்றே கூர்ந்து பார்ப்போம்;

ஸஹ்ல் பின் ஸஅத் அல் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியது: ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, 'யா ரஸுலுல்லாஹ்! என்னைத் தங்களுக்கு அன்பளிப்பாக வழங்க வந்துள்ளேன்' என்றார். மஹரின்றி அவரை மணந்து கொள்ளக்கோரி வந்திருந்தார் அவர். நபிகள் (ஸல்) அவர்கள் அவரை நோக்கிப் பார்வையை உயர்த்தி நேராகப் பார்த்து விட்டுப் பார்வையைத் தாழ்த்திக் கொண்டார்கள். பின்னர் தலையைத் தொங்கவிட்டுக் கொண்டார்கள். நபிகள் (ஸல்) அவர்கள் தமது விஷயத்தில் எந்த முடிவுக்கும் வரவில்லை என்பதைக் கண்ட அப்பெண்மணி அங்கேயே அமர்ந்து கொண்டார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தோழர்களுள் ஒருவர் எழுந்து, 'யா ரஸுலுல்லாஹ்! தங்களுக்கு அவரது தேவையில்லையென்றால் அவரை எனக்கு மண முடித்து வையுங்கள்' என்றார். நபிகளார் (ஸல்), 'மஹராகக் கொடுக்க உம்மிடம் ஏதேனும் பொருள் உண்டா?' எனக் கேட்டார்கள். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னிடம் ஏதும் இல்லை யாரஸுலுல்லாஹ்' என்றார் அவர். 'உம் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது கிடைக்குமா என்று பார்' என்றனர் அண்ணலார். அங்கிருந்து சென்ற அவர் திரும்பி வந்து, 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஏதும் கிடைக்கவில்லை யாரஸுலுல்லாஹ்!' எனக் கூறினார். 'இரும்பினால் ஆன ஒரு மோதிரமாவது கிடைக்குமா என்று பார்!' அவரை மீண்டும் அனுப்பினர் நபிகளார். திரும்பி வந்த அவர், 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! இரும்பு மோதிரம் கூடக் கிடைக்கவில்லை யாரஸுலுல்லாஹ்! இதோ எனது கீழாடை இருக்கின்றது. அதில் பாதி அவளுக்கு' என்றார். அந்த மனிதரிடம் மேலாடை ஒன்று இருக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;;;, 'உமது கீழாடையை வைத்துக்கொண்டு நீர் என்ன செய்வீர்? இதை நீர் அணிந்து கொண்டால் அவள் மீது ஏதும் இருக்காது. அவள் அணிந்து கொண்டால் உம்மீது ஏதும் இருக்காது'.
பிறகு அந்த மனிதர் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து விட்டு எழுந்தார். அவர் எழுந்து செல்வதைக் கண்டு நபிகளார் அவரை மீளவும் அழைத்து வரும்படி பணித்தார்கள். வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள், 'உம்மிடம் குர்ஆனில் என்ன உள்ளது?' 'இன்ன அத்தியாயம், இன்ன அத்தியாயம் என்னிடம் உள்ளது' என எண்ணி எண்ணிச் சொன்னார் அவர். 'அவற்றை நீர் மனப்பாடமாக ஓதுவீரா?' எனக் கேட்டனர் நபிகளார்.

'ஆம்! ஓதுவேன்' என்றார் அவர். 'உம்முடன் உள்ள குர்ஆன் அத்தியாயங்களுக்காக இப்பெண் உமக்குரியவளாக ஆக்கப்பட்டுவிட்டாள். நீர் சென்று அவளுக்குக் குர்ஆனைக் கற்றுக்கொடுப்பீராக!' என்றனர் நபிகளார்.

எமது முதுபெரும் அறிஞர் பேராசிரியர் எம். எம். உவைஸ் அவர்கள் இந்த சம்பவத்தை மிகவும் அழகாக வடித்துத் தருவார்;;:

பேதை ஒருத்தி பேச வந்தாள்.
இறைவன் தூதீர் இவன் வந்ததென்னெனின்
முறையாய் என்னை நும்பாற் சேர்க்கவே
நுந்தம் விருப்பம் நுவலும் எதுவோ
நந்தம் மணவினை அதுவே என்பேன்.
இறசூல் நபியும் இளையளைப் பார்த்து
சிரமுதல் பாதம் ஏறிட்டு நோக்கித்
தலையைக் குனிந்து தகவுற இருந்தனர்.
அலையும் உளத்தள் அமர்ந்தாள் ஒரு புறம்
நன்னபி தானும் நலம்பெற முடிவு
முன்னுவர் எனவே முதலில் நினைத்தாள்.
அருகர் நடுவண் அமர்ந் திருந்த
ஒருவர் எழுந்து ஓர்ந்து கூறினர்
நங்கையின் தேவை நுமக்கில் லையெனின்
எங்கை மணவினை ஏற்று முடிக்க
என்றே மொழிய ஏகனி றசூல்
நன்றே செலுத்த நன்மகர் உண்டோ
மன்றல் விரும்பும் மனிதனும் தன்வசம்
ஒன்றும் இல்லை ஒருமொழி பகர்ந்தான்.
இறைவன் தூதரும் இனியன கூறினர்
உறையும் இல்லம் உடனே சென்று
குறையில் பொருளைக் கொண்டு வருக
மறைமொழி பயின்ற மனிதனும் போயினன்
மீண்டதும் சொன்னான் ஈவதற் கில்லென
ஈண்டு இல்லையா இருப்பு மோதிரம்
வீடு போய்த்திரும்பி வந்தவம் மனிதன்
நாடிட அதுவும் நம்மிடம் இல்லையென்
றியம்பியன் உள்ளது கீழ் பால் அங்கியே
வல்லான் தூதர் வகுத்துக் கூறினர்
எல்லார் தாமும் ஏற்ப அணியின்
நுமது ஆடை நுமக்குத் தேவை
தமது ஆடையைத் தாமே அணியின்
மற்றவர் தாமோ நன்மை அடைவர்
கொற்றவர் கூற்றை கூர்ந்து கேட்டு
அமர்ந்த மனிதன் அமர்வு நீளவே
நிமிர்ந்து நின்று நகர்ந்தான் செல்ல
அழையும் அவரை ஆணை பிறந்தது
அழைப்பை ஏற்று அணுகினன் அவனும்
ஓதமில் குர்ஆன் ஓதுவீரா
ஓதுவன் எனவே கூறினன் அவனே
தெரிந்த வசனம் தெளிவாய்ச் சொன்னான்
புரிந்த சூறா பிரித்துக் காட்டினன்
பாடம் செய்தவை பண்புடன் தருக
நாடிய பொருளை நயமாய்ப் பெறுவீர்
ஓதினன் அவனும் ஓதிடும் பாணியில்
சோதி நபியும் சொற்றனர் இதனை
போற்றும் குர்ஆன் ஓதிய பகுதியை
ஏற்று மங்கையை ஏற்க எனவே
திருமணம் நிகழ்த்தி திருந்திழை தனையே
ஒருமனம் ஒத்தி ஒன்றி ஒழுகவே
பொன்மொழி இதனைப் பொற்புடன் பொழிந்தனர்
நன்மொழி சஹ்ல்பின் சாத்அல் சாயிதியே

                இந்த அறிவிப்பின் மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, மஹர் கொடுக்காமல் பெண்ணைத் தொடுவதும் தகாது. மணவாளனே அதனைச் செலுத்த வேண்டும்அவர் சார்பில் யாருமல்ல் வாக்களிக்கப்படுவதும் அல்லமுன்னமேயே கொடுபட வேண்டியது.

                அப்த் அர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) கூறுவார்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் திருமணத்தின் மகிழ்வைக் கண்டார்கள். அப்போது நான் 'ஓர் அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்' என்றேன். 'அவளுக்கு எவ்வளவு மஹர் கொடுத்தீர்?' என வினவினார்கள். 'ஒரு பேரீச்சங் கொட்டையளவு தங்கம்' என்றேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முதல் கேள்வி 'மஹர்' தான்.

                மட்டுமல்ல மஹர் இன்றிப் பெண் கொடுத்துப் பெண் எடுக்கும் ஷிஃகார்  முறைத் திருமணத்துக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தடை விதித்தார்கள். அப்துல்லாஹ் பின் நுமைர் கூறுவார்: 'ஒருவர் மற்றவரிடம் நான் என் மகளை /சகோதரியை உனக்குத் திருமணம் செய்து தருகின்றேன். நீ உன் மகளை/ சகோதரியை எனக்குத் திருமணம் செய்து தர வேண்டும்' என நிபந்தனையிடுவதே ஷிஃகார் ஆகும். இங்கு இரு பெண்களுக்கும் மஹர் கிடைப்பதில்லை. இதனைத்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

மஹர் கொடுத்து மணமுடித்தல் தான் ஸுன்னா. அதுவும் மணவாளனே கொடுத்தல் வேண்டும். அவரது பெற்றோரோ, உறவினர் யாருமோ கொடுப்பதல்ல அது. இதன் தாத்பர்யம் தான் என்ன? மணவாளன் தன் ஆளுமையை, ஆண்மைத்துவத்தை, மணவாளியைக் குறையின்றி பராமரிக்கக் கூடிய தனது தகைமையை உறுதிப்படுத்துகின்றார். 'ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக்கூடியவர்கள்' என்ற அல்லாஹ்வின் கூற்று தன்னளவில் உண்மையானது எனப் பறை சாற்றுகின்றார். தான் கரம் பிடிக்கும் மணவாளிக்கு ஒரு பெறுமதி உண்டு. என்னால் ஆன பெறுமதியை நான் வழங்குகிறேன் எனக் கூறுகின்றார். 'அல்லாஹ்வின் மீது ஆணையாக! அறியாமைக் காலத்தில் பெண்களுக்கு எந்த உரிமையும் இருப்பதாக நாங்கள் கருதுவதில்லை. அவர்களின் உரிமைகள் தொடர்பாக தான் அருளிய சட்டங்களை அல்லாஹ் அருளிய வரையிலும், அவர்களுக்குரிய பங்குகளை அவன் நிர்ணயிக்கும் வரையிலும்' என்ற உமர் (ரலி) அவர்களின் ஆதங்கத்தை நான் ஆமோதிக்கின்றேன் எனக் கூறுகின்றார்.

ஆக, மஹர் தான் மண வாழ்வின் அடிப்படை.

அடுத்தது கைக்கூலி.        

'திருமணத்தின் முன்னர் அல்லது திருமணத்தின் போது அல்லது அதன் பின்னர், மணவாளியின் பாவனைக்கென, மணவாளியின் உறவினர் அல்லது வேறு ஒருவரால் மணவாளருக்குக் கொடுபடும் அல்லது வாக்களிக்கப்படும் பணம் அல்லது அசையும், அசையா ஆதனங்கள் அனைத்தும் கைக் கூலியின் கீழ் அடங்கும்' என வரையறை செய்யும் குழுவினர் தொடர்ந்தும், 'கைக்கூலி என்பது மஹர் சம்பந்தப்பட்ட கடப்பாடுகளுடன் முரண்பட்டதாக இருப்பினும் கூட, முஸ்லிம் விவாகவிவாகரத்துச் சட்டத்தினால் அங்கீகாரம் அளிக்கப் பெற்றுள்ளது. அதுவும் மணவாளியின் பாவனைக்கென அளிக்கப்படும்; அசையும் ஆதனமாக இருக்க வேண்டும். மணவாளரிடம் அது 'அமானத்' ஆக இருக்கும்'. என விவரணம் செய்வர்.

உண்மையில் நிகழ்வது தான் என்ன? கைக்கூலி என்பது மணவாளருக்குக் கொடுபடுவது -  மணவாளியின் பாவனைக்கு என்ற நொண்டிச் சாக்குடன். மணவாளியே அமானிதமாக இருக்கும் போது வேறும் என்ன அமானிதம் என்பது ஒரு புதிர்.

மஹர் சம்பந்தப்பட்ட கடப்பாடுகளுடன் முரண்பட்டதாயிருப்பினும் கூட எனக் கூறுபவர்கள் இன்னமும் ஏன் அது தொடர வேண்டும் எனக் கருதுகின்றார்கள் எனத் தெரியவில்லை.

சீதனம்

                'திருமண பந்தத்தின் நிமித்தம் மணவாளருக்கு மணவாளியின் உறவினர் அல்லது வேறு ஒருவரால் திருமணத்தின் முன், திருமணத்தின் போது அல்லது திருமணத்தின் பின்னர் கொடுபடக்கூடிய  அல்லது வாக்களிக்கப்படும் பணம் அல்லது அசையும், அசையா ஆதனங்கள் அனைத்தும் சீதனம் என வரையறையாகும். திருமணப் பதிவில் உள்ளடக்கப்படும் கைக்கூலி அல்லது திருமணத்தின் போது மணவாளர் வேண்டாமலேயே அவருக்கு அளிக்கப்பெறும் அன்பளிப்புகள் என்பன இதில் உள்ளடங்காது' என்பர் குழுவினர்.

                இஸ்லாத்தின் நியமங்களையும் மீறி பணமும் பொருளும் திருமண பந்தத்தில் வகிக்கும் பிரதான பாத்திரத்தை முஸ்லிம் முலாம் பூசியேனும் ஒப்பேற்றி வைக்கும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றமை தென்படுகின்றதா?     

யதார்த்தம் தான் என்ன? மஹர் எனக் குறிக்கப்படுவது சின்னஞ் சிறியதொரு தொகை. கைக்கூலி என்பது வெற்றிடமாக விடப்படுகின்றது. சீதனம் ஆகக் கொடுக்கப்பட்டதற்கும் எடுக்கப்பட்டதற்கும் ஆதாரமே இல்லை. திருமண பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதும், திருமணங்கள் நடப்பதும், நடவாது விடுவதும், சீதனத்தின் அடிப்படையில் தான் என்பதுவே உண்மையல்லவா?
யார் யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றோம்? நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளும் பரிதாபகரமான நிலைமைக்குப் பரிகாரம் தான் என்ன?

எனவேதான், 'மஹர் சம்பந்தப்பட்ட கடப்பாடுகளுடன் முரண்பட்டதா யிருப்பினும்கூட' கைக்கூலியை அங்கீகரித்து நிற்கும் குழுவினர் சீதனத்துக்குத் தண்டனைகளை விதி செய்கின்றார்கள். 'சட்டத்தினால் அனுமதிக்கப்பட்டன தவிர்ந்த எந்த வகையான சீதனத்தையும் கேட்பதோ, கொடுப்பதோ, எடுப்பதோ, அதற்குத் துணை போவதோ சட்டத்தினால் தடுக்கப்பட வேண்டும்...' 'சீதனம் கொடுத்தலும், எடுத்தலும், அதற்குத் துணை போதலும், தண்டப்பணம் அல்லது சிறைவாசத்தினால் தண்டிக்கப்படக் கூடிய ஒரு குற்றமாகும்'.

எழுத்தில் பதிவான ஆதாரங்கள் ஏதுமில்லாமல் எப்படி நாம் குற்றம் சுமத்தலாம்?

எவ்விதத்திலும் நிகழ முடியாத ஒன்று எனக்கொண்டு தான் குழுவில் அனைவரும், பின்னைய சாரார் உட்பட அனைவரும் பூரண மௌனம் சாதித்துள்ளனர் போலத் தெரிகின்றது.

இந்த விடயத்தில் அனைவரும் ஒன்றுபட்டிருக்கின்றமைக்கு மேலதிக காரணம் ஒன்றும் உண்டு. குழு அங்கத்தவர்கள் அனைவருமே எடுத்தவர்கள், கொடுத்தவர்கள், எடுக்ககொடுக்க இருப்பவர்கள், உடந்தையாக இருந்தவர்கள், கண்டும் காணாத பாவனையில் இருப்பவர்கள். அன்றாடம் அழகழகான அறிவுரைகளையும், ஆழமான குர்ஆனிய விளக்கங்களையும், வல்லோன் அல்லாஹ்வின் திருநாமங்களது மகத்துவங்களையும் சலிப்பேதும் ஏற்படாமல்; வெகு துலக்கமாக எமக்கு வழங்கி வரும் செஞ்சொல் வித்தகரும், வருங்காலக் கல்விமான்களை உருவாக்கித் தரும் அரும் பணியில் அர்ப்பணத்துடன் உழைத்து வருபவருமான உஸ்தாத் அவர்களும் கூட இவ்விடயத்தில் அமைதி காத்திருப்பது கேவலமாகத் தோற்றுகின்றது. லட்சங்களிலும் கோடிகளிலும் கைக்கூலி என்ற பெயரிலோ, சீதனமாகவோ எடுத்தாலும் இன்னமும் கூட மஹர் ஆக, 133/- ரூபாவையே பதிவு செய்யும் படுபாதகமான கைங்கர்யத்துக்கு ஒத்து ஊதும் நீதித்துறை வித்தகர் ஒருவரும் இக்குழுவில் அமர்ந்திருப்பது வெட்கக்கேடில்லையா? 

ஹலால் விவகாரம் என்ற ஒன்றை உருவாக்கி எம் அனைவரையும் ஆற்றொணாத் துயரில் ஆழ்த்திய எம் ஆலிம்கள், காலா காலமாக கைக்கூலி அல்லது சீதனம் என்ற பெயரில் முழு முஸ்லிம் சமூகத்தையும் அரித்துக் கொண்டிருக்கும் 'இஸ்லாமியமல்லாத வழக்கங்கள்' என அவர்களே கூறும் அவற்றை 'ஹராம்' எனப் பிரகடனப்படுத்தும் தைரியத்தை இழந்து போனது எவ்வாறு?

சமூகத்திலிருந்து மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட மிகச் சிறந்த அறிஞர்கள் இவ்வாறுதான் வழிகாட்டுவார்களாயின் பாமர முஸ்லிம்களுக்கு அதுவும் சொல்லொனாத் துயரங்களுக்கு ஆட்பட்டுக்கொண்டிருக்கும் எண்ணிறந்த பெண்களுக்கு என்னதான் விடிவு?

குலா மணவிடுதலை பற்றிப் பேசும் போது 'இருசாராரும் இணக்கம் காணும் வகையில் மணவாளி தனது கணவருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும்; இணக்கம் காணாவிடின் நீதிமன்று கொடுக்கும் தீர்ப்பினை ஏற்க வேண்டும்' என்று ஒரு விதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கெனவே அங்கீகாரம் பெற்ற கைக்கூலியின் பேரில் அல்லது அங்கீகாரம் பெறாத சீதனத்தின் பேரில் கொடுத்த அனைத்துமே நஷ்டம். அதற்கும் மேலாக இன்னமுமா?

'மனைவி தனது மஹரை அல்லது மணவாளருக்குக் கொடுக்கப்பட்ட சீதனத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள உள்ள பாத்யதையை விசாரிக்க காஸி நீதிமன்றத்துக்கு இருக்கும் அதிகாரம் வலுப்படுத்தப்பட வேண்டும்' என்பது ஒரு சிபாரிசு. எந்த விதமான ஆதார பூர்வமான பதிவுகளும் இல்லாமலேயே சீதனம் என்ற பெயரில் பணம், பொருள், அசையும் - அசையா ஆதனங்கள் அனைத்தும் கபளீகரம் செய்யப்பட்டதன் பின்னர் இழப்பை ஈடு செய்ய என்ன சான்றுகளைக் கொண்டு வரலாம்?

இலங்கை வானொலியின் நேர்முக அஞ்சலுக்கும் நன்றி செலுத்த வேண்டும். 10-08-2018 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பெருமதிப்புக்குரிய தலைவர் ரிஸ்வி முப்தியின் கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல் குத்பாப் பிரசங்கத்தைச் செவிமடுக்க முடிந்தது. அதன் மூலம் தான் அன்னாரின் மகத்துவத்தை நாம் தெரிந்து கொள்ள இயலுமானது. அன்னவர் யார்? அன்னாரின் பதவியினது மேன்மை என்ன? அன்னார் கற்றவை என்ன? அன்னாரின் பாத தரிசனம் பெற்றுள்ள நாடுகள் என்ன? அன்னாரோடு உரையாடும் பாக்கியம் பெற்றவர்கள் என்ன? என்பவற்றையெல்லாம் பாமர அறிவிலிகளான நாம் வீடுகளில் இருந்தே தெரிந்து கொண்டோம். இலங்கை வானொலி வாழ்க!

தாம் சென்ற இடங்களில் எல்லாம் அன்னார் இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டம் குறித்துப் பிரஸ்தாபிக்கவும் தவறவில்லை. அந்த நாடுகளின் பெரும் தலைவர்கள் இவ்வாறான சட்ட அமைப்பு இலங்கையில் இருப்பதை ஆச்சரியத்துடனும், வியப்புடனும் கேட்டு அறிந்துகொண்டமையைக் கேட்கக் கேட்க உள்ளம் பூரித்தது. எமது பெருமதிப்புக்குரிய முப்தி அவர்கள், இலங்கை முஸ்லிம்களின் மத்தியில் மஹர் எவ்வாறு செயல்படுகின்றது? கைக்கூலி, சீதனம் முதலாய வழக்கங்களை அவர்கள் எவ்வளவு பக்குவமாகப் பேணி வருகின்றார்கள் என்பன பற்றியெல்லாம் அப்பெரியார்களுக்கு உணர்த்தியிருந்தால் நிச்சயம் அவர்கள் காறித்துப்பியிருப்பார்கள். அன்னார் எச்சில் படரா வதனத்துடன் வந்து சேர்ந்தமை நாம் செய்த தவம்.

அந்தத் தவத்தின் பயனாகத்தான் பின்னையவர்களின் அறிக்கை எமக்குக் கிட்டும் பாக்கியத்தை நாம் அடைந்தோம்.

அதே குத்பாவில், வழங்கி வரும் முஸ்லிம் விவாகவிவாகரத்துச் சட்டம் எமது கௌரவத்துக்குரிய முப்தி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அமானிதம் என்றும் எது வரினும் அதை விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்றும் கட்டபொம்மன் பாணியில் அன்னவர் வீர வசனம் உதிர்த்தது எமது நாடி நரம்புகளையெல்லாம் வீறு பெறச் செய்து விட்டது. என்றாலும் கூட அப்படியான ஏதும் அமானிதம், அதுவும் அன்னவரை நம்பி, கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதனையும் கண்டுகொள்ள இயலவில்லை.

முப்தி அவர்களின் மேற்கண்ட பிரகடனம் காரணமாக பின்னையவர்களது அறிக்கை அன்னவருடையது என்றே சூட்சுமப்படுகின்றது.

பின்னையோரின் அதாவது முப்தி அவர்களின் அறிக்கை மிக்க சுவாரஷ;யமானது. தமது சிபாரிசுகளின் முன்னர் அவர்கள் முன்வைக்கும் பீடிகைகள் கவனத்தை ஈர்ப்பன.

மத்ஹப்கள் வகிக்கும் முக்கியத்துவத்தினை வலியுறுத்துவதுடன் அவர் தம் அறிக்கை ஆரம்பமாகின்றதுவரலாற்றுப் புளுகு ஒன்றுடனும் கூட: 'உலகின் மூன்றில் இரண்டு பாகம் அளவு கைப்பற்றப்பட்டிருந்த உதுமானிய காலிபாத்தின் காலத்தில்' இது தேவை தானா? யாருடைய காதில் பூ குத்தப் போகின்றோம்?

'Sect என்ற பதம் MMDA யிலிருந்து நீக்கப்பட்டு முஸ்லிம் சட்டம் என்ற பதத்தால் அது பிரதியீடு செய்யப்படுமாயின் காஸிகள், வழக்குகளை விசாரிப்பதற்குத் துணையாக திருமணம், விவாகரத்து என்பவற்றோடு சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் உள்ளடக்கிய ஒரு கையேட்டினைத் தயாரிக்க வேண்டி வரும். ஒன்றில் காஸி இக்கையேட்டினைப் பயன்படுத்த வேண்டும். அல்லது ஒரு முஜ்தஹித் அல்லது இஸ்லாமிய கல்வி நெறியில் Ph.D. பட்டம் பெற்ற ஒருவர் காஸியாக அமைய வேண்டும்'. இது பீடிகை.

இவையெல்லாம் நிகழக்கூடியனவா என்ற ஐயத்தைக் கிளறி, அச்சுறுத்தல் செய்வதாக அமைந்துள்ளது இது.

அவ்வாறான கையேடுகள் ஏற்கெனவே வலம் வந்து கொண்டிருப்பதனை அறியாதோராக இவர்கள் இருப்பது ஆச்சரியம். அது மட்டுமல்ல, அவற்றில் உள்ளடங்கியுள்ள ஒவ்வொரு விவகாரம் குறித்தும் பல்வேறு ஆய்வுகள் அன்றாடம் வெளியாகி வருகின்றன. மேலும், இவையெல்லாம் கவலைக்கிடமான நிலைமை எனச் சித்தரிக்கப்பட வேண்டிய தேவை இல்லாத அளவுக்கு இஸ்லாமிய கல்வித்துறை ஆழமாய், அகன்றதாய், உயர்ந்ததாய் பாரெங்கும், நமது இலங்கை நாட்டிலும் வளர்ந்து வருகின்றமை மகிழ்வையே ஊட்டுகின்றது.

திருமணப் பதிவு என்பது அவசியமில்லை என்பதை எமக்கு உணர்த்துவதற்காக மத்ரஸா பாடத்திட்டத்தின் ஓர் அங்கத்தை அப்படியப்படியே பிரதி செய்து பக்கங்களை நிரப்பிப் பெரும் பீடிகையாக அமைத்து பின்னையவர்கள் கூற வருவது என்னவென்றால், திருமணத்தைப் பதிவு செய்தல் என்பது அவசியமான ஒரு கருமமல்ல என்பதாகும். I.L.M அப்துல் அஸீஸ் காலம் முதல் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண இயலாத, வக்கில்லாத ஒரு சமூகமாக இன்னமும் நாம் இருப்பது வருத்தத்துக்குரியதல்லவா?

ஒரு விடயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். இன்னமும் கூட எங்கள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களது காலத்ததும், அன்னாருக்குப் பின்னைய காலங்களதும் எமக்குத் தேவையான சட்டதிட்டங்களையெல்லாம் வகுத்து எம்மையெல்லாம் வழிநடாத்திக் கொண்டிருக்கும் இமாம்களது காலங்களதும் மானிடவியல் (Anthropological) ஆய்வுகள் சரிவர மேற்கொள்ளப்பட்டில்லை என்பதாகும் அது. ஹிஜாஸி, ஈராக்கிய இமாம்களிடையிலான கருத்து வேறுபாடுகளுக்கான காலச்சூழல், வரலாற்றுப் பின்னணிகள், அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருந்த அழுத்தங்கள் என்பனவெல்லாம் இன்னமும் கூட முற்று முழுதாக ஆவணப்படுத்தப்பட்டில்லை. இமாம்கள் அனைவரதும் வரலாறுகள் துன்பியல் நிறைந்த சோகக் கதைகளாகவேரத்தக் கண்ணீர் போலகற்பிதம் செய்யப்பட்டிருப்பதன் காரணங்கள் கூட நாம் அறியோம்.

இலங்கையில் எம்மை வழிநடாத்திக் கொண்டிருக்கும் பேரறிஞரான இமாம் ஷாபிஇ அவர்கள் எகிப்தில் வாசஞ் செய்த போது கொண்டிருந்த கருத்துகள், அன்னவர் ஈராக்கிலிருந்த போது முன் வைத்தனவற்றோடு முரண்பட்டு நிற்பதற்கான காரணங்கள், இவற்றுள் தாக்கம் செலுத்திய காரணிகள் என்பனவெல்லாம் தீர்க்கமாக ஆய்வு செய்யப்படாத நிலையிலேயே உள்ளன. ஆண்டாண்டு காலமாக பழங்கதைகளையும் ஊகங்களையுமே மக்களது சிந்தையுள் திணித்துக் காலத்தை ஓட்டி வருகின்றோம்.

நிலைமை இவ்வாறிருக்க அன்றைய கால வழக்கங்களையும், கருத்துக்களையும் அப்படியே களைந்தெடுத்து எமது சூழலில் நாற்று நடுதல் எத்துணை பொருத்தமுடைத்து என்பது தனியானதோர் ஆய்வுக்குரிய விடயம்.
நிற்க, பெண்களை முஸ்லிம் விவாக பதிவாளர்களாக நியமிக்கலாமா? ஆடுகளத்தை உடனேயே மஸ்ஜிதுக்குக் கொண்டு செல்கின்றார் முப்தி.

'திருமணங்கள் மஸ்ஜிதில் செய்யப்படுவதே சிறப்புடைத்து என்பர் இஸ்லாமிய அறிஞர்களுள் பெரும்பாலானோர். ஆக நாம் திருமண ஒப்பந்தங்களை மஸ்ஜிதில் செய்வதே சிறந்தது'.

 நல்லது.

'நான்கு மத்ஹப்களினதும் அறிஞர்கள் விடாய் காலத்திய பெண்டிர் மஸ்ஜிதில் தரித்திருப்பது ஏற்புடையதல்ல என்பர்'. இமாம்களென்ன பெண்டிரும் கூட அதனை ஏற்புடையதெனக் கொள்ளமாட்டார். இதில் வேடிக்கை என்னவென்றால், அனைத்துப் பெண்டிரும் அனைத்துக் காலமும் விடாயிலேயே இருப்பர் எனப் பின்னையவர்கள் காட்ட முனைவதாகும்.

மாற்றுவழி என்ன?

                மஸ்ஜித் தவிர்ந்த ஓரிடத்தில் திருமணப் பதிவினைச் செய்யலாம். என்றாலும் அதுவும் ஆட்சேபனைக்குரியது. ஏனெனில் 'பெண்கள் தனியே பிரயாணம் செய்ய வேண்டி வரும்; மஹ்ரமல்லாத ஆண்களுடன் பெண்கள் கலத்தல் விளையும்; பதிவினை செயல்படுத்துவதில் செயற்பாட்டு, ஷரீஆ முரண்பாடுகள் தோற்றும்'.

ஆக பெண்களை விவாகப் பதிவு செய்ய அனுமதிப்பது தகாது.

                அபூ தாவூதை முன்னிறுத்தி அழகான ஒரு மேற்கோளை முன்வைக்கின்றனர் பின்னையவர்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'மஸ்ஜிதுக்குச் செல்வதினின்றும் உங்கள் பெண்களைத் தடுக்காதீர்கள். அவர்களது வீடுகளே அவர்களுக்கு நலமாயிருப்பினும் கூட'.

                எனவே பின்னையவர்கள் கூறுகின்றார்கள்: ஆக, ஒரு பெண்ணுக்கு தனது வீட்டில் தொழுவது தான் மஸ்ஜிதில் தொழுவதை விட ஏற்றமாக இருக்கும். எனவே, மஸ்ஜிதில் நடக்கக்கூடிய சடங்குகள், ஆசாரங்களில் இருந்தும் தவிர்ந்திருப்பதே பெண்களுக்கு மேல்.

                பதமாக, பவிசாக தோசை அடுத்த பக்கம் புரட்டப்பட்டிருக்கும் பக்குவம் தான்; என்னே!

                MMDAB அதாவது அறிவுறுத்தல் சபை பற்றிய பின்னையவர்களது சிபாரிசு இருபெரும் முப்திகளதும் பிழைப்பு சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதனால் அது குறித்து நாம் ஏதும் கூறுவது அழகல்ல.

                திருமண வயது பற்றிய உரையாடலில் மதிப்புக்குரிய இமாம்கள் ஷாபிஇ, அபூ ஹனீபா, அஹ்மத் இப்ன் ஹன்பல் ஆகியோர் முன்நிற்க இருபதுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் புடைசூழ வீர கோஷம் இட்டு வரும் பின்னையவர்கள், இளம் சிறுமியரை பூப்பெய்து முன்னமேயே திருமண பந்தத்தில் இணைப்பது ஆகும் எனப் பிரகடனம் செய்கின்றார்கள். விற்பனைப் பண்டமான வெறும் பிண்டம் தானே சிறுமியர் என்றாலும் கூட மிகவும் இளகிய மனம் கொண்டோராய் இவர்கள் செய்யும் பரிந்துரை கவனத்தில் கொள்ளத்தக்கது.

 'ஆண் பெண் இருபாலாருக்கும் திருமணத்துக்கான குறைந்த வயது 18 ஆகும். என்றாலும் 16க்கும் 18க்கும் இடைப்பட்ட வயதினர் காஸியின் அனுமதியுடன் மணம் செய்யலாம். எவ்வாறாயினும் 16 வயதுக்குக் குறைவாயிருப்பின் முஸ்லிம் விவாகவிவாகரத்துச் சட்டம் அதனை சட்ட ரீதியானதல்ல எனக்கொள்ளக் கூடாது'.

'அது' சட்டரீதியானதல்ல எனக்கொள்ளக்கூடுமாயின் எமது பெரு மதிப்புக்குரிய முப்தி அவர்களின் அவதாரமே கேள்விக்குரியதாகிவிடும் என்பதால் இத்துடன் அதனை விட்டுவிடுவோம்.

                பலதாரமணம் பற்றிய அங்கத்தின் பீடிகைகள் ருசிகரமானவை; 'இதிலிருந்து நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஓர் அம்சம் என்னவென்றால், பலதாரமணத்துக்கு நாம் தடைகள் ஏதும் விதித்து விடக்கூடாது. சிரமங்களுக்குள்ளான ஒரு கருமமாகவும் அதனை ஆக்கி விடக்கூடாது.'

                சிரமமா? எத்துணை குஷியான விவகாரம் அது. அதுவும் பின்னையவர்கள் எல்லா வசதிகளயும் மிக லாபகரமாகச் செய்து தரும் போது!

                ஏற்கெனவே ஒரு மனைவியை அல்லது பல மனைவியரைக் கொண்ட ஒருவர் மற்றும் ஒருவரை நாடுகின்றார். அவர் 30 நாட்களின் முன்னர் காஸியிடம் விண்ணப்பிக்க வேண்டும். காஸியின் அனுமதி கிட்டவில்லை. தான் கருதிய கருமத்தை நிறைவேற்றிக் கொள்கின்றார். இதன் மூலம் அவர் குற்றம் இழைத்தவர் ஆகின்றார். அதற்குத் தண்டனை இலங்கை நாணயத்தில் 5000 ரூபாய்க்குக் குறையாத தொகை (உண்மையான பரிபாஷையில், அதிகபட்சம் 5000 ரூபாய்). இதைவிட வசதியான சிபாரிசு வேறும் உண்டா?

காரியம் அனைத்தும் நடந்து முடிந்தாயிற்று. காஸி என்ன செய்ய முடியும். 'மேலும் ஒரு விவாகம் செய்ய விண்ணப்பதாரி கொண்டுள்ள உத்தேசத்தை ஏற்கெனவே உள்ள மனைவியருக்கும், தான் விவாகம் செய்ய உத்தேசித்திருக்கும் பெண்ணுக்கும் (அதாவது ஏற்கெனவே மனைவியாகிவிட்ட கடைசி பெண்ணுக்கும்) அறிவிப்பார்'.

என்ன அயோக்கியத்தனமான சிபாரிசு இது!

விரிவஞ்சி இத்துடன் விடுத்தல் நலம்.

                காஸி நீதிபதிகளாகப் பெண்கள் நியமனம் பெற வேண்டுமென அவாவுறும் சகோதரியரிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். தயவு செய்து அதனை விட்டுவிடுங்கள். ஏனென்றால் தற்போது நடைமுறையில் இருக்கும் காஸி நீதிமன்ற முறை ஒரு சாக்கடை. அதில் உங்களைத் தோய்த்துக்கொள்ளாதீர்கள். முன்னையவர்களும் பின்னையவர்களும் ஒன்றிணைந்து கூறுவது போல ஒழுங்கீனங்களும், ஊழல்களும் மலிந்த ஓர் அமைப்பு அது. உங்களைச் சீரழித்து விடுவார்கள். உங்கள் குடும்ப வாழ்வை மண்ணாக்கி விடுவார்கள். நீங்கள் கற்பனை கூட செய்திராத அல்லல்களிலெல்லாம் உங்களைச் சிக்கவைத்து விடுவார்கள்.

                எப்போதாவது, எமது வாரிசுகளின் காலத்திலாவது, காஸி முறைமை சீர்திருத்தி அமைக்கப்படலாம். அதுவரை உங்கள் அவாக்களைக் கால தாமதப்படுத்தி வைத்துக்கொள்ளுங்கள்.

                எமது சமூகத்தவர்கள், அதிலும் கல்வியிலும் அந்தஸ்த்திலும் உயர்ந்தவர்கள், எமது மாதர்களை எத்துணை மதிக்கின்றார்கள் என்பதற்கு, நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் எமது சகோதரியர் சிலர் அப்போதிருந்த ஒரு விசாரணக் கமிஷன் முன் தோற்றிய துயர சம்பவம் மறக்கவொண்ணா ஒன்று.

                தமது ஆதங்கங்களைச் சமர்ப்பிக்கும் தருணம் குர்ஆனிய வாசகம் ஒன்றினை மேற்கோள் காட்டினர் அப்பெண்டிர். ' இறை விசுவாசிகளே!' என ஆரம்பித்தது அந்த வாசகம். கமிஷனர்களுள் ஒருவர், 'பெண்களே! இறைவன் அந்த வாசகத்தில் விளிப்பது விசுவாசிகளை. உங்களையல்ல' என அவர்களையும், அவர்களது ஈமானையும் ஒரே அம்பினால் வீழ்த்தி வதை செய்ததெல்லாம் வரலாறு. பின்னர் அதனைச் சிலாகித்துக் கொக்கரித்துத் திரிந்ததெல்லாம் அசிங்கம்.

                ஆறு தசாப்தங்களாக மிக அமோகமாக நாம் நடாத்திவரும் இந்த நாடகத்தில் பிரதான பாகங்கள் வகித்தோர் குறித்தும் நாம் சற்றே கண்டு செல்ல வேண்டும்.

                ஆரம்ப குழுவுக்கு தலைமை வகித்தவர் கலாநிதி H.M.Z. பாரூக். கல்வியறிவிற் சிறந்தவர், பண்பாளர், வலியாரை விட எளியார் தம் குறைகளைக் காது தாழ்த்திக் கேட்பவர். தாம் சார்ந்த சமூகத்துக்கே பெருமை ஈட்டித் தரும் வகையில் இலங்கை நிர்வாக சேவைத் தேர்வில் முதலிடத்தைப் பெற்றவர். காட்சிக் கெளியர், கடுஞ்சொல் பகராதவர், இதமும் இங்கிதமும் மிக்க ஹாஸ்ய உணர்வினர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியை வேறொரு நாட்டில் மிகச்சிறந்த சட்டத்துறை வல்லுனர்களை உருவாக்கும் பணியில் ஆழ்த்திக் கொண்டுள்ளார். நாமும், நமது நாடும் ஈடு செய்ய இயலாத இழப்பு நம் பாரூக்.

                தமது பேராசியர்களால் விதந்துரைக்கப்பட்ட ஒரு கல்வியியலாளர் ஸஹாப்தீன். இலங்கை நிர்வாக சேவைக்குத் தேர்வானவர். மேலும் அவர் ஒரு ஞானவான். ஸுபித்துவம் குறித்து அவர் கொண்டிருந்த அறிவு ஆழமானது. அதை விட ஆழமானது அவர் ஸுபிகள் குறித்துக் கொண்டிருந்த அறிவு. எனவே தன்னைச் சுற்றித்தான் அமைத்துக்கொண்ட வேலிகளுக்கு வெளியேயே, வெளிப்படையாகக் கூறுவதாயின், தனது புகழ் பூத்த இல்லத்து மதில் சுவர்களுக்கு வெளியேயே அவர்களை வைத்திருந்தவர் அவர். பீர் அப்பா, குணங்குடி மஸ்தான் முதலானோரது வாழ்வின் பொய்ம்மை குறித்த கருத்துகளை சிலாகித்துப் பேசினாலும், பொருளீட்டலிலும் லௌகீக சம்பத்துகளின் சேகரிப்பிலும் தணியாத தாகம் கொண்டிருந்தவர். அவர் ஒரு ஞானி என்பதால், தனது மேலாண்மையிலான MMDA சீர்திருத்த முடிவுகள் கூட எவ்வித பயனும் அளிக்கப்போவதில்லை என்ற தெளிவு அவரிடம் இருந்தது. MMDA உடனான தனது சம்பந்தத்தினால் அவர் மகிழ்ந்தவரும் அல்லர்; வருந்தியவரும் அல்லர். அற்புதமான சமநிலை கொண்டது அவரது மனநிலை.

                தனது கல்வி மேம்பாட்டில் முன்னவர் இருவருக்கும் ஈடு கொடுத்து நிற்பவர் ஸலீம் மர்ஸுப். நாட்டின் நீதித்துறையின் அதி உயர் ஆசனங்களை அலங்கரித்தவர். கற்பித்தலுக்குக் கலை வண்ணம் சேர்த்திருப்பவர். வித்தகத்தில் எத்துணை உயர்வுகளை எட்டினாலும் இன்னமும் 'யாமொன்றும் அறியோம்' என்ற பக்குவ நிலைக்குத் தம்மைப் பயிற்றிக் கொண்டவர். தான் வகிக்கும் பதவிகளையெல்லாம் மீறி, அவர் காட்டும் அன்பு, வலியிலார் மீது கொள்ளும் கரிசனை, 'மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே; சிறியோரை இகழ்தல் தனிலும் இலமே' என்ற அவரது உயர் மனப்பாங்கு, இப்படியும் ஒருவரா என வியப்புறுத்தும் அவரது எளிமை என்பன மிக அபூர்வமாகவே காணக் கிட்டுவன.

                இலங்கையின் தலைசிறந்த வழக்கறிஞர்களுள் ஒருவர், பாயிஸ் முஸ்தபா. வாழ்வு முழுவதும் சட்டத்தாலேயே சூழப்பெற்றவர் அவர். சட்டத்துள் பிறந்தவர்; சட்டத்தினால் வளர்ந்தவர்; சட்டத்தினால் வாழ்பவர்; வாரிசுகளையும் சட்டத்தின் உள்ளேயே உந்தியவர். சட்டத்துறை நட்சத்திரங்களாக ஒளிவீசிப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் வழக்கறிஞர்களுள் பலர் இவரது பாசறையில் உருவானவர்கள். இவரால் பயிற்றப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு அதிகார பீடங்களை அலங்கரிக்கின்றார்கள். அமைச்சர்களாகவும் துலங்குகின்றார்கள். ஆரவாரங்கள், முழக்கங்கள் ஏதும் இன்றித் தனது வழக்குகளை வென்றெடுப்பதில் வல்லவர். நீதிமன்ற வாதாட்டங்களின் போது இரவது குரல் தணியத்தணிய, இவரது வாதத்தின் பலம் கூடிக்கூடிச் செல்லும். 'சில சந்தர்ப்பங்களில் நாம் எமது முன் தோற்றும் வழக்கறிஞர்களிடம் இருந்தும் கற்க வேண்டியுள்ளது' என நீதியரசர்களே இவரது வாதங்களை விதந்துரைப்பர். இவரது ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் அரச பீடத்தார் அவாவி நின்ற சந்தர்ப்பங்கள் ஏராளம்.

                முஸ்லிம் பெண்களின் கல்வி அபிவிருத்தியில் அரும் பங்கு ஆற்றியவர் எமது சகோதரி ஜெஸீமா இஸ்மாயில். தனது அறிவும், திறமையும் காரணமாகப் பல்வேறு உயர் பதவிகளை வகித்தவர். பல்கலைக்கழக வேந்தராக நியமனம் பெற்று எமக்கெல்லாம் பெருமை சேர்த்தவர். தனது சகோதர உடன்பிறப்புகள் உறும் துயர்கள் துடைப்பதற்காக ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டவர். காஸி நீதிமன்ற விவகாரங்களின் தொகுப்புகள் எமக்குக் கிட்டவும், அவை பிரசுரமாகவும், ஆவன அனைத்தும் செய்தவர். காஸிகளுக்கான பயிற்சி முகாம்களை ஏற்பாடு செய்தவர். மொத்தத்தில் தனது சமூகத்தின் விடிவுக்காக அர்ப்பண உணர்வுடன் பாடுபடுபவர். ஆயுதங்களையும், மேடைப்பேச்சில் உதிரும் வீர வசனங்களையும் நம்பாத ஒரு போராளி; உண்மையான ஒரு போராளி. முதுமையில்தான் எழும் சமூக உணர்வுகளைத் தனது இளமைக் காலங்களிலேயே கொண்டிருந்தவர். குன்றா அழகும் கொண்டவர். வாழ்வின் பெரும் பகுதியை தனது உயரிய நோக்கங்களை அடைந்து கொள்ளவெனவே அர்ப்பணித்தவர்.

                இவர்களுள் முதல் மூவரும் குழுத் தலைவர்களாகப் பணியாற்றியவர்கள். உன்னத மானிடரான அம் மூவரதும் முனைவுகளால் கிட்டாத எதனையும் நாம் ஈட்டிக் கொள்வதற்கான சாத்தியங்கள் ஏதும் இல்லை.

நான்காமவர் இத்துணை சிறந்ததொரு வித்தகனாக இருந்தும் முப்தி விரித்த வலையில் சிக்குண்டுள்ளமை ஒரு புதிர். முப்தியின் கைப்பாவையாய் தான் மாறி வருவதை உணராது விட்டமையால், இப்போது பலிகடாவாக ஆக்கப்பட்டுள்ளார்.

எமது மூத்த சகோதரி ஜெஸீமா இஸ்மாயிலின் சிந்தனையில் அரை நூற்றாண்டுக் காலமாகப் பதிந்திருந்த ஆதங்கங்களும், விடிவு காணவென அவர் எடுத்த முனைவுகளும் விரயமாகப்போவதில்லை. அன்னவர் 1976 – நவம்பர் 22 ஆந் திகதியன்று பகிரங்க அரங்கொன்றில் கூறியன இன்னும் வலுவிழக்கவில்லை. 'புனித குர்ஆன் 1400 வருடங்களின் முன்னர் பெண்களின் உரிமைகள், கடமைகளை வலியுறுத்தி வைத்தது. இஸ்லாம் இயல்பாகவே எமக்களித்த உரிமைகளை மீட்டுப் பெற்றுக் கொள்ளவும், எம்மை விடுவித்துக் கொள்ளவும் போராட வேண்டியிருப்பது ஆச்சரியத்தையே விளைக்கின்றது'. அவரது முனைவுகள் வியர்த்தமாகா. அவை வெற்றி காண இயலவில்லை. என்றாலும் அவர் தோல்வி கண்டதாகவும் இல்லை. தவிர்க்க முடியாத வகையில் உஹத்கள முடிவு நினைவில் எழுகின்றது.

சகோதரி ஜெஸீமா இஸ்மாயில் தனது கவலைகளை மேற்கண்டவாறு வெளிப்படுத்தி வந்த அதேவேளை எமது மதிப்புக்குரிய முப்தி அவர்கள் கீர்த்தி வாய்ந்த கிங்ஸ்வூட் கல்லூரியில் மாணவப் பருவத்து அட்டகாசங்களுக்காக எச்சரிக்கைகள் ஈட்டு வந்தமை சமகால நிகழ்வு.

பின்னையவர்களது அறிக்கையில் ஒப்பமிட்டுள்ள இருவரது நாமங்களைக் காண உள்ளம் வருந்துகின்றது.

தனது கலாநிதிப் பட்டத்துடன் இக்கரை வந்து சேர்ந்த எம்..எம். சுக்ரியின் வருகையால் முழு முஸ்லிம் சமூகமுமே புளகாங்கிதம் அடைந்தது. அன்னாருக்கு எத்தனை வரவேற்புகள், எத்தனை உபசரணைகள், எத்துணை கௌரவம். அன்னவரின் கீழ் நளீமியா கலாபீடம் வந்தவேளை இலங்கை முஸ்லிம்களின் இஸ்லாமிய அறிவுத்தாகம் தணிவதற்கான தருணம் வந்து விட்டது என அனைத்து முஸ்லிம்களும் பூரிப்படைந்தனரல்லவா? கல்வி, சமய விவகாரம், சிந்தனா, பண்பாட்டு, கலாச்சார, அறிவியல் முதலாய பிரச்சினைகளிலெல்லாம் சிக்கித்தவித்து சமூகம் எனும் படகு தத்தளித்துக் கொண்டிருந்த தருணம் பாதகங்களேதுமின்றிப் படகைக் கரை சேர்க்கும் திறமைமிகு மாலுமியொருவர் வந்துவிட்டார் என்று அனைவரும் கண்ட மகிழ்ச்சிக்கு அளவிருந்ததா? பின்னவர்களது அறிக்கையில் காணப்படுவது உண்மையிலேயே இவரது கையொப்பம் தானா என ஐயமுற வைத்துவிட்ட அவலம் நிகழ்ந்தது ஏன்?

மதீனத்து மண்ணின் தலைசிறந்த ஆசான்களிடம் இஸ்லாமியக் கல்வி கற்றுத்தேர்ந்து, தெளிவான சிந்தனையுடன் திரும்பி வந்தவர் மௌலவி எம்.எம்.. முபாரக். எம்மவர் மத்தியிலான சிற்சிறு ஆசாரப் பிரச்சினைகள், விளக்கங்களில் நாம் கண்ட தெளிவின்மை, முன்னோர் அளித்த அருஞ் செல்வம் எனக்கொண்டு நாம் புழங்கி வந்த அறிவிலா வழக்கங்கள் என்பவற்றிலெல்லாம் இருந்து எம்மை மீட்டுக்கொள்ள வழிகாட்டி வந்தவர். அன்னாரது விரிவுரைகளும், பிரசங்கங்களும், எழுத்தாக்கங்களும் அலமந்து போயிருந்த எமது சமூகத்துக்கு எத்துணை சொஸ்தம் அளிப்பனவாயிருந்தன. புன்னகை மட்டுமே பூத்த முகத்தராய், பாரிய பிரச்சினைகளுக்கெல்லாம் எளிமையான தீர்வுகள் கண்டு சொல்வாரே அன்னவர். நிச்சயமாக இங்கு நாம் காண்பது அவருடைய கையொப்பமாக இருக்க முடியாது என்றே நாம் திடம் கொள்ளுமளவு மரியாதை ஈட்டிக்கொண்ட மனிதரல்லவா அவர். அவருமா?

இவ்விருவரும் மட்டுமல்ல, பின்னைய அறிக்கையில் ஒப்பமிட்டுள்ள அனைவரும் தனித்தனியே - கூட்டாகவல்ல, தனித்தனியேபெற்றுள்ள அறிவின் ஆழத்தினதும் அகலத்தினதும் மத்தியில் வைத்துக் காணின் எமது முப்தி ஒரு கற்றுக் குட்டியல்லவா?

என்றாலும் இது நிகழ்ந்துவிட்ட விந்தைதான் என்ன? அது தனியான ஆய்வுக்குரியது. இதுவல்ல அதற்கான சந்தர்ப்பம்.

முக்கியமான இரு ஆலோசனைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன:

ஒன்று, இருசாராரையும் ஒன்று கூட்டி இணக்கம் காணச் செய்வது. ஏன் இணக்கம் காண வேண்டும்? பிரிதல் மானுட உரிமை. அதற்குத் தடைவிதித்தல் தகாது. அவர்கள் சமர்ப்பித்த அறிக்கைகள் ஏற்கெனவே வரலாற்று ஆவணங்களாக பதிவாகிவிட்டன. அவர்கள் தத்தமது பாசறைகளுக்குள்ளேயே இருந்து கொள்வது தான் உத்தமம். இணக்கம் காணாத இரு அறிக்கைகளின் பின்னர், இணக்கம் கண்ட ஓர் அறிக்கை என மூன்றாவது ஒன்றைச் சமர்ப்பிப்பது... அதனைப் பேசாது விடுவதே நலம். முரண்பாடுகளிலும் ஏதும் ஓர் அழகைக் கண்டு ரசிக்கும் பக்குவத்தை நாம் வளர்த்துக்கொள்ளல் வேண்டும்.

மாறாக செய்ய வேண்டுவது என்ன? மிகத் திறமை வாய்ந்த இளைஞர்கள் - அதாவது ஸலீம் மர்ஸுப் குழுவின் அங்கத்தவர்களிலும் வயது குறைந்தவர்கள் - ஏராளமாக இருக்கின்றார்கள். அவர்களுள் பலர் இஸ்லாமிய கல்வி நெறிகளில் போலவே, வழக்கிலுள்ள சட்டத்துறையிலும் பெருந்திறன் படைத்தவர்களாக உள்ளார்கள். சீரிய சிந்தனைத் திறம் கொண்ட சகோதரியரும் பலர் உளர். சட்டத்துறையில் மாத்திரமன்றி, ஏனைய பல துறைகளில் பணியாற்றும், சமூக நலனில் பேர் அக்கறையும், மிகச் சிறந்த கல்வித் தகைமைகளும் கொண்ட பலர் சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர்.
பொறுப்பு அத்தகையோரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அனுசரனையாகவும், ஆலோசகர்களாகவும் அறிவுறுத்தல் செய்பவர் களாகவும் அறிவிலும் அனுபவத்திலும் முதிர்ந்த பெரியவர்கள் இருக்க வேண்டும்.

சுமுகமான ஒரு சூழலை இது ஏற்படுத்தக் கூடும்.

வலம் வரும் அடுத்த ஆலோசனை எமது முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கு MMDA யின் தற்போதைய நிலைமை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்பது. இந்த வகையில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட முனைப்புகள் சாத்தியப்பாடு அற்றவையாய்ப் போய்விட்டதாகத்தான் தெரிகின்றது.

மாற்றாக, முஸ்லிம்கள் அல்லாத அமைச்சர்களுக்கும், பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கும் தான் இவ்வாறான தெளிவுறுத்தல் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம் மாதர் சமூகம் எத்தகைய அவலங்களுக்கும், அல்லல்களுக்கும் ஆளாக்கப்பட்டிருக்கின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள இயலும். இறுதியில் நாம் சமர்ப்பிக்கக்கூடிய அறிக்கைக்குஅப்படியான ஒன்றை நாம் எப்போதாவது சமர்ப்பிக்கக்கூடுமாயின் - அவர்களது ஆதரவை நாம் பெற்றுக்கொள்ளலாகும்.

இப்போதைக்கு இது போதும்.