Monday, June 29, 2020


மூன்றாவது பிரதமர்

இலங்கையின் மூன்றாவது பிரதமரான ஜோன் லயனல் கொத்தலாவல ஒரு வளமிக்க குடும்பத்தில் 1895 ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி பிறந்தார். இலங்கை காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றிய அவரது தந்தை ஜோன் கொத்தலாவல, ஜோன் லயனல் கொத்தலாவல 11 வயதாக இருக்கும் போது ஒரு கொலைக் குற்றச்சாட்டை அடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அவரது தாயார் தமது நிலங்களையும் காரீய சுரங்கங்களையும் முறையாக மேலாண்மை செய்ததன் மூலம் பெரும் சொத்துக்களை ஈட்டினார்

ஜோன் லயனல் கொத்தலாவலை கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி பயின்றார். 1915 ஆம் ஆண்டில் விடுதலைக்கு ஆதரவான சில நடவடிக்கைகளில் பங்குபற்றி யமையால் பாடசாலையை விட்டு விலக நேரிட்டது. அதன் பின்னர் ஐரோப்பா சென்ற அவர் இங்கிலாந்திலும், பிரான்சிலும் ஐந்தாண்டுகள் வரை தங்கியிருந்தார். அக்காலத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கிறைஸ்ட் சேர்ச் கல்லூரியில் வேளாண்மைத் துறையில் பட்டம் பெற்றார். அவரது சமூக சேவைகளுக்காக அவருக்கு பிரித்தானிய அரசின் உயர் விருது கிடைத்தது. அதன்பின் அவர் சேர் ஜோன் கொத்தலாவல என அழைக்கப்பட்டார்.

இளம் வயதில் கிரிக்கட், குதிரையேற்றம் உட்படப் பலவித விளையாட்டுகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். சிங்களம், ஆங்கிலம், பிரான்சிய மொழிகளில் பெரும் புலமை பெற்றிருந்தார். இலங்கை திரும்பிய அவர் தமது குடும்பத்தின் தோட்டங்களையும் சுரங்கங்களையும் நிருவகித்து வந்ததோடு தீவிர அரசியலிலும் ஈடுபட்டார். 1937இல் அரசாங்க சபையில் போக்குவரத்து பொது வேலைகள் அமைச்சராக நியமனம் பெற்ற அவர் 1947 பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று அதே அமைச்சர் பதவியைப் பெற்றார். 

டீ.எஸ். சேனாநாயக்காவின் மரணத்தைத்தொடர்ந்து இலங்கையின் இரண்டாவது பிரதமராகும் வாய்பை எதிர்பார்த்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான சேர் ஜோன் கொத்தலாவலை, அன்றைய ஆளுனர் நாயகம் அப்பதவிக்கு டட்லி சேனாநாயக்காவை  நியமித்ததன் காரணமாக அந்த வாய்பை இழந்தார். ஆனால் 1952இல் இடதுசாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹர்த்தாலைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் டட்லி சேனாநாயக்க பதவியை ராஜினாமா செய்ததன் காரணமாக சேர் ஜோன் கொத்தலாவல இலங்கையின் மூன்றாவது பிரதமராக நியமிக்கப்பட்டார். 1956 தேர்தலில் அடைந்த படுதோல்வி காரணமாக அரசியலிலிருந்து ஒதுங்கி பல வருடங்களை இங்கிலாந்தில் கழித்தார். எவ்வாறாயினும், சில வருடங்களின் பின் ஆளுனர் நாயகத்தின் பதவிக் காலம் முடிவடையும் தறுவாயில் அப்பதவியைப் பெறும் எண்ணத்தோடு நாடு திரும்பினார். ஆனால் அன்றைய பிரதமர் டட்லி சேனாநாயக்க ஆளுனர் நாயகம் திரு. வில்லியம் கொபல்லாவையின் பதவிக் காலத்தை நீட்டித்ததால் அவரது ஆசை நிராசையாகியது.

இலங்கை இராணுவ சேவையில் ஒரு கர்ணலாக இருந்த சேர் ஜோன் கொத்தலாவல, மரணப் படுக்கையில் இருக்கும் தறுவாயில் ஜெனரலாகப் பதவி உயர்த்தப்பட்டார்.

1953ஆம் ஆண்டு நாம் சிறுவர்களாக இருந்தபோது கம்பளையில் எமது கிராமமான இல்லவத்துரையில் ஜமாஅத்துல் ஹிதாயா என்ற சங்கத்தின் ஏற்பாட்டில் ஒரு இரவுப் பாடசாலையைத் திறந்து வைப்பதற்காக சேர் ஜோன் கொத்தலாவல வருகை தந்தார். அந்த வைபவத்தில் அவர் மிக மகிழ்ச்சியாக, எனது நண்பன் ஒருவனைத் தனது மடியில் இருத்தி , பி, ஸீ, டீ...என்ற ஆங்கில அரிச்சுவடியை சொல்லிக்கொடுத்து அப்பாடசாலையை ஆரம்பித்து வைத்த சம்பவம் எமதுள்ளங்களில் இன்றுவரை நீங்காத இடம் பெற்றுள்ளது.
அவர் பெரும் செல்வந்தராகவும் அரசியல் செல்வாக்கு உடையவராக இருந்தாலும் எளிமையாகவே வாழ்ந்தார். அவர் அரசியலில் சொத்து சேர்க்கவில்லை. மாறாக அவர் பிறவியிலேயே பெரும் செல்வந்தராக இருந்தார்.

அவர் சிறந்த பரோபகாரியகவும் நேர்மையான மனிதராகவும் இருந்தபோதிலும் அவரது முன்கோபம், அரசியலிலும் அரசாங்க விவகாரங்களிலும் அவரது விவேகமற்ற அவசர முடிவுகள், எந்த ஒரு சிக்கலான விடயத்தையும் ராஜதந்திர ரீதியில் அணுகாமல் நேரடியாகவே தீர்க்க முயன்றமை போன்றவை அவரை அரசியலில் முன்செல்ல விடாமல் தடுத்ததோடு அரசியல் எதிரிகளைத் தேடிக்கொள்வும் வழி வகுத்தது. அதற்கு அவர் கலந்துகொண்ட இந்தோனீஷிய பாந்துங் மாநாடு மற்றும் பாராளுமன்றத்திலும் வெளியிலும் அவரது நடவடிக்கைள் என்பன சிறந்த உதாரணங்களாகும்.

அவரது திருமண வாழ்வும் வெற்றிகரமாக அமையாது விவாகரத்தில் முடிந்தது. இறுதியில் 1980ஆம் ஆண்டு அக்டோர் இரண்டாம் திகதி அவர் உயிர் துறப்பதற்கு முன் பாதுகாப்புப் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்காக  தனது கந்தவெல வீட்டையும் 50 ஏக்கர் காணியையும் நன்கொடையாக வழங்கினார்.

பின்னர் அது 'ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக் கழகம்' என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. இன்று அது ஒரு பூரணத்துவம் பெற்ற ஒரு பல்கலைக் கழகமாக இயங்கி வருகிறது. 1993இல் சேர். ஜோன் கொத்தலாவலை அருங்காட்சியகம் ஒன்றும் திறந்து வைக்கப்பட்டது.

ஆக்கம்: முஹம்மத் றஸீன்



Thursday, June 25, 2020


தங்க மூளை

ஆக்கம்: முஹம்மத் றஸீன்

இலங்கையின்  'தங்க மூளை' என வர்ணிக்கப்பட்ட பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி என். எம். பெரேரா 1904 ஜூன் 6ஆம் திகதி கொழும்பு பாலத்துறையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் ஒன்பது பிள்ளைகளில் ஐந்தாவதாகப் பிறந்தார். பாலத்துறை யிலும் கொள்ளுப்பிட்டி சென் தோமஸ் கல்லூரியிலும், ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர் 1922 இல் உயர் கல்விக்காக கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இணைந்தார். அங்கு கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத்துறையிலும் இலக்கியத்துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். கிரிக்கட் பிரியரான அவர் கல்லூரியிலும் பல்கலைக் கழகங்களிலும் கிரிக்கட் அணித் தலைவராக விளங்கினார்.

கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர் லண்டன் பொருளியல் கல்லூரியிலும் பாரிஸ் சோர்போன் பல்கலைக் கழகத்திலும் பொருளாதாரத்தையும் அரச அறிவியலையும் கற்று இரட்டைக் கலாநிதிப் பட்டம் பெற்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையை இவர் பெற்றார். அது மட்டுமன்றி லண்டன் பொருளியல் கல்லூரியில் உலகப்புகழ் பெற்ற அறிஞர் ஹரோல்ட் லெஸ்கியிடம் கல்வி கற்கும் பாக்கியத்தைப் பெற்றதோடு அங்கு கல்வி பயின்ற கிரிஷ்ணமேனன் போன்ற பிரமுகர்களின் நட்பும் அவருக்குக் கிடைத்தது. 'லண்டன் பொருளியல் கல்லூரியில் என்.எம் அவர்களது இரண்டு ஆய்வு நூல்களின் பக்கங்களைப் புரட்டப்படாத விரல்களே இல்லை என்னும் அளவுக்கு அது முக்கியத்துவம் பெற்றிருந்தது' என்கிறார் அங்கு கல்வி பயின்ற பேராசிரியர் .ஜே. வில்சன்;.

1933இல் நாடு திரும்பிய என்.எம். நேரடியாகவே அரசியலிலும் தொழிலாளர் போராட்டங்களிலும் ஈடுபடத் தொடங்கினார். நவம்பர் 11 இல்  பிரித்தானிய முன்னாள் போர் வீரர்களின் நலனுக்காக விற்பனை செய்யப்பட்ட பொப்பி மலர்கள் மூலம் பெற்ற வருமானத்தில் இலங்கையில் இருந்து பங்குபற்றிய போர் வீரர்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டதால் 1933 நவம்பரில் சூரியமல் இயக்கத்தில் இணைந்து 'விற்கப்படும் ஒவ்வொரு சூரிய மலரும் ஏகாதிபத்தியம், பாசிசம், போர் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தினார்.

1934 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார மந்தம் இலங்கையையும் ஆட்கொண்டது. உணவுப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன் பெரும் மழையும்  வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு 1934-35 இல் மலேரியா நோய் பரவ ஆரம்பித்தபோது. என்.எம்., டாக்டர் விக்கிரமசிங்க என்போர் தலைமையிலான சூரியமல் இயக்கத்தினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு கிராமம் கிராமமாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மற்றும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களையும் விநியோகித்தனர். இதனால் என்.எம்.மை கிராமப்பற மக்கள் 'பரிப்பு மஹத்தையா' என அழைத்தனர். இவ்வாறு சிறு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட சூரியமல் இயக்கம் 1935ஆம் ஆண்டு சமசமாஜக் கட்சியாக உருவெடுத்து. இதன் முதல் தலைவராக என்.எம். பெரேராவே நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் இக்கட்சி ஆய்வறிவாளர்களின் கட்சி என அறியப்பட்டது. அந்த அளவுக்கு அறிவாளிகளால் நிரம்பி வழிந்தது இக்கட்சி.
இரண்டாம் உலகப் போர் வெடித்தவுடன், சமசமாஜக் கட்சி அதனை ஒரு ஏகாதிபத்திய போர் எனக் கூறி நிராகரித்தது. 1940 ஜனவரியில் முல்லோயா தோட்டத்தில் ஒரு மாபெரும் வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்தார். இந்த சம்பவத்தில் கோவிந்தன் என்ற தொழிலாளி பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். தோட்ட முதலாளிகளின் எதிர்ப்பு, யுத்த முயற்சிகளுக்கு எதிரான நடவடிக்கை போன்ற காரணங்களுக்காக என்.எம். பெரேராவும் மேலும் மூன்று சகாக்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஏப்ரல் 5, 1942 அன்று அவர்கள் சிறையிலிருந்து தப்பி இந்தியா சென்று தலைமறைவாகினர். ஜூலை 1943 இல் பம்பாயில் கைது செய்யப்பட்ட அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

1936இல் என்.எம். அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட பின்புதான் தொழிலாளிகளினதும் ஏழை எளியவர்களினதும் குரல் அங்கு ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. 1947 முதல் 1977 வரை நடைபெற்ற தேர்தல்களில் என்.எம். ருவன்வெல்ல தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். 1949 முதல் 1959 வரை எதிர்க் கட்சித் தலைவராகவும் 1954 முதல்1956 வரை கொழும்பு மேயராகவும் பணியாற்றினார்.  1964ஆம் ஆண்டு இலங்கை பெரும் பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கியிருந்த வேளையில் என்.எம். நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று அந்த நிலைமையைத் திறமையாகக் கையாண்டு நாட்டை மீட்டெடுத்தார். பின்னர் 1970–1975 காலப்பகுதியிலும் அவர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அரசாங்கத்தில் இடதுசாரிகளின் கை ஓங்குவதை சகிக்காத சில வலதுசாரி சக்திகள் அரசாங்கத்திற்குள்ளேயே இருந்து இவரது முற்போக்குத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடத் தொடங்கினர். 1975இல் என்.எம். பெரேராவினதும் அவரது சகாக்களினதும் வெளியேற்றத்தோடு முடிவுற்ற அந்த நாடகம் அரசாங்கத்தின் வீழ்ச்சியையும் எதிர்வு கூறியது. தொடர்ந்து வந்த தேர்தலில் அரசாங்கம் படுதோல்வி அடைந்ததோடு முதன்முறையாக என்.எம்மும் தனது ஆசனத்தை இழந்தார்.

அதன் பின் அவரது கவனம் மீண்டும் கிரிக்கட் மீது திரும்பியது. NCC  கிரிக்கட் கழகத்தின் ஆயுற்கால உறுப்பினராக இருந்த என்.எம். 1977 முதல் 1978வரை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக இருந்து இலங்கை கிரிக்கட்டுக்கு உலக அந்தஸ்தை பெற்றெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

என்.எம். பற்றி பலரும் அறியாத ஒரு விடயம்தான், 1925இல் இலங்கையில் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்ட 'ராஜகீய விக்ரமய' என்ற திரைப்படத்தில் பிரதான பாகமேற்று அவர் நடித்தமையாகும். துரதிஷ்டவசமாக இப்படம் இலங்கையில் திரையிடப்படுமுன் அப்படச் சுருள்கள் தீக்கிரையாயின. ஆனால் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் அப்படம் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் போலவே அவரது 'தங்க மூளை'யையும் வெளி நாடுகள் பயன்படுத்திக்கொண்ட அளவு இந்த நாடு சரிவரப் பயன்படுத்திக் கொள்வில்லை என்பது எமது துரதிஷ்டமே.

அவரது பாராளுமன்ற உரைகள் பொருள் செறிந்தவையாகவும் எதிர்கால விளைவுகளை முன்கூட்டியே அறிவிப்பவையாகவும் அமைந்திருந்தன. 1948 குடியுரிமை மசோதா, சிங்களம் மட்டும் மசோதா, 1978இல் ஜே.ஆர் ஜெயவர்தனவின் புதிய அரசியல் யாப்பு போன்றவை தொடர்பான அவரது பாராளுமன்ற உரைகள் அதற்கு சிறந்த சான்றாகும்.

என்.எம். தற்போதைய அரசியல்வாதிகளைப்போல குறுக்கு வழியில் அரசியல் லாபம் தேட முற்பட்படவில்லை. 1979 ஆகஸ்ட் 14ஆம் திகதி அவர் இறக்கும் வரையில் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து நடந்த ஒரு கண்ணியமான ஒரு அரசியல்வாதியாகவே இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.


குருவுக்கும் தவறு ஏற்படுவதுண்டு!

ஆக்கம்: முஹம்மத் றஸீன்

.எம்.ஆர்.. ஈரியகொல்ல அவர்கள் 1965இல் டட்லி சேனாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் கல்வி மற்றும் கலாசார விவகார அமைச்சராக நாட்டுக்கும் மக்களுக்கும் தன்னலமின்றி சேவை செய்வதற்காக தமது தனிப்பட்ட செல்வத்தையும் நேரத்தையும் சக்தியையும் செலவிட்ட ஒரு எளிமையான, நேர்மையான அரசியல்வாதியாகவே இனம் காணப்படுகிறார்.

ஒருமுறை கிராமப்புற பாடசாலை அதிபர் ஒருவர் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரால் அவர்களது தனிப்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக இடமாற்றம் செய்யப்படுகிறார். அந்த அதிபர் அன்றைய கல்வி அமைச்சர் ஈரியகொல்ல அவர்களிடம் முறையிட்டு நியாயம் கேட்கிறார். அமைச்சர் இதுபற்றி விசாரித்து அவரது பக்கம் நியாயம் இருந்தால் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார். ஆனால் அவர் விடுவதாக இல்லை. நான் எவ்வித குற்றமும் செய்யாதபோது அவர் என்னை எவ்வாறு இடமாற்றம் செய்யமுடியும்? எனக்கு உடனடியாக இந்த இடமாற்றம் இரத்து செய்யப்படவேண்டும் என அடம்பிடித்து நின்றார். ஆனால் அமைச்சர் அமைதியாக நான் உங்களுக்கு அநீதி இழைக்க இடம் தர மாட்டேன். ஆனால் இது விசாரித்து முடிவெடுக்க வேண்டிய விடயம் எனவும் பொருமையாக இருக்கும்படியும் வேண்டினார். அந்த அறிவுரையெல்லாம் அந்த அதிபரின் காதில் ஏறவில்லை. என்னால் இவ்விடயத்தில் பொருமையாக இருக்க முடியாது. எனக்கு உடனடியாக இதற்கொரு தீர்வு வேண்டும் என ஆத்திரத்துடன் கூறினார்.
அப்படியானால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது என அமைச்சர் மறுத்துவிட்டார். பொருமையிழந்த அதிபர் 'அமைச்சர் அவர்களே! இதோ பாருங்கள்! நீங்கள் இன்னும் சில காலம்தான் அமைச்சராக இருக்கமுடியும். அதன் பிறகு நீங்கள் சாதாரண மிஸ்டர் ஈரியகொல்லதான் ஆனால் நான் அப்படியல்ல, இறந்த பின்பும்கூட நான் 'லொக்கு இஸ்கோல மஹத்தையா'தான் (அதிபர்)' எனக் கூறிவிட்டு அவ்விடத்தைவிட்டு அகன்றார். அமைச்சர் புன்னகையுடன் தனது அன்றாட அலுவல்களை கவனிக்க ஆரம்பித்தார்.

இது நடந்து பல வருடங்கள் கடந்தன. ஒரு நாள் ஒரு பிரமுகரின் மரண ஊர்வலத்தில் ஈரியகொல்ல அவர்கள் சென்றுகொண்டிருக்கிறார். அவர் மிக உயரமாக இருந்ததால் எந்த சனக் கூட்டத்திலும் அவரை யாரும் இலகுவாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். பின்னாலிருந்து ஒருவர் அவரது முதுகைத் தட்டி 'ஹலோ மிஸ்டர் ஈரியகொல்ல' என்று அழைத்தார். திரும்பிப்பார்த்த ஈரியகொல்ல அவர்கள் 'அனே மே அப்பே லொக்கு இஸ்கோல மஹத்தையா னே' (அடடா இது எங்கள் அதிபர் அல்லவா) என்றார் புன்னகையுடன். பின்னர் அவர் சமாளித்துக்கொண்டு என்னை மன்னிக்கவேண்டும் 'குரரட்டத் வரதினவானே சேர்' (குருவுக்கும் தவறு ஏற்படலாம்தானே) என்றார். ஈரியகொல்ல அவர்கள் அதே புன்னகையுடன் அவரை அரவணைத்தவண்ணம் விடை கொடுத்தார். இது அவரது பொருமைக்கும் நேர்மைக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

சிங்களம் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் புலமை பெற்றிருந்த ஈரியகொல்ல அவர்கள் ஒரு இலக்கியவாதியாகவும் பத்திகையாளராகவும் பேச்சாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு நேர்மையான அரசியல்வாதியாகவும் விளங்கினார். அவர் விக்டர் ஹியூகோவின் 'லா மிஸரேப்' என்ற புகழ் பெற்ற நாவலைமனுதாபய” என்ற தலைப்பில் சிங்களத்தில் மொழிபெயர்த்தார். இதைவிட அவர் பல சிறு கதைகளையும் கவிதைகளையும் வெளியிட்டுள்ளார்.

அவர் மேற்கொண்ட சீர்திருத்தங் களை, குறிப்பாக அவரது கல்விக் கொள்கைகளையும் வெளிப்படையான கருத்துகளையும் சமூகத்தின் செல்வாக்குமிக்க ஒரு குழுவிரால் சீரணித்துக்கொள்ள முடியவில்லை. அவை கடும் விமரிசனத்துக்குள்ளாகியது. இதுவே 1970 தேர்தலில் அவரது வீழ்ச்சிக்கும் அரசியல் அஞ்ஞாதவாசத்திற்கும் காரணமாகியது.  எவ்வாறாயினும்ஒரு சூழ்நிலையைப் புரிந்துகொள்வதற்கும் வேகத்துடனும் அதிகாரத்துடனும் செயற்படுத்துவதற்கான அவரது அபார திறமையும் இந்த நாட்டில் இதுவரை இல்லாத சிறந்த கல்வி அமைச்சர்களுள் ஒருவராக அவரை ஆக்கியது. இந்த அருங் குணங்கள் இன்றைய அரசியல்வாதிகளிடம் காணப்படாமை நமது துரதிஷ்டமே.


அவ்வாறான ஒருவரின் கையால் எனது ஆசிரிய நியமனத்தைப் பெறும் பாக்கியத்தைப் நான் பெற்றேன். அன்றைய வைபவத்தில் அவர் இயற்றிய பல தேசபக்திப் பாடல்களை நாம் ஒன்றாக சேர்ந்து பாடி மகிழ்ந்தோம். அவற்றுள் இன்னும் என் மனதில் மறையாத இடத்தைப் பெற்றது, 'லோக்கென் உத்தும் ரட்ட லங்காவய்....' என்ற அருமையான பாடலாகும்.