Thursday, June 25, 2020


தங்க மூளை

ஆக்கம்: முஹம்மத் றஸீன்

இலங்கையின்  'தங்க மூளை' என வர்ணிக்கப்பட்ட பன்முக ஆளுமை கொண்ட கலாநிதி என். எம். பெரேரா 1904 ஜூன் 6ஆம் திகதி கொழும்பு பாலத்துறையில் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் ஒன்பது பிள்ளைகளில் ஐந்தாவதாகப் பிறந்தார். பாலத்துறை யிலும் கொள்ளுப்பிட்டி சென் தோமஸ் கல்லூரியிலும், ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர் 1922 இல் உயர் கல்விக்காக கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இணைந்தார். அங்கு கல்வியில் மட்டுமன்றி விளையாட்டுத்துறையிலும் இலக்கியத்துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். கிரிக்கட் பிரியரான அவர் கல்லூரியிலும் பல்கலைக் கழகங்களிலும் கிரிக்கட் அணித் தலைவராக விளங்கினார்.

கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டம் பெற்ற பின்னர் லண்டன் பொருளியல் கல்லூரியிலும் பாரிஸ் சோர்போன் பல்கலைக் கழகத்திலும் பொருளாதாரத்தையும் அரச அறிவியலையும் கற்று இரட்டைக் கலாநிதிப் பட்டம் பெற்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையை இவர் பெற்றார். அது மட்டுமன்றி லண்டன் பொருளியல் கல்லூரியில் உலகப்புகழ் பெற்ற அறிஞர் ஹரோல்ட் லெஸ்கியிடம் கல்வி கற்கும் பாக்கியத்தைப் பெற்றதோடு அங்கு கல்வி பயின்ற கிரிஷ்ணமேனன் போன்ற பிரமுகர்களின் நட்பும் அவருக்குக் கிடைத்தது. 'லண்டன் பொருளியல் கல்லூரியில் என்.எம் அவர்களது இரண்டு ஆய்வு நூல்களின் பக்கங்களைப் புரட்டப்படாத விரல்களே இல்லை என்னும் அளவுக்கு அது முக்கியத்துவம் பெற்றிருந்தது' என்கிறார் அங்கு கல்வி பயின்ற பேராசிரியர் .ஜே. வில்சன்;.

1933இல் நாடு திரும்பிய என்.எம். நேரடியாகவே அரசியலிலும் தொழிலாளர் போராட்டங்களிலும் ஈடுபடத் தொடங்கினார். நவம்பர் 11 இல்  பிரித்தானிய முன்னாள் போர் வீரர்களின் நலனுக்காக விற்பனை செய்யப்பட்ட பொப்பி மலர்கள் மூலம் பெற்ற வருமானத்தில் இலங்கையில் இருந்து பங்குபற்றிய போர் வீரர்களுக்குப் பாகுபாடு காட்டப்பட்டதால் 1933 நவம்பரில் சூரியமல் இயக்கத்தில் இணைந்து 'விற்கப்படும் ஒவ்வொரு சூரிய மலரும் ஏகாதிபத்தியம், பாசிசம், போர் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தினார்.

1934 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதார மந்தம் இலங்கையையும் ஆட்கொண்டது. உணவுப் பொருட்களுக்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அத்துடன் பெரும் மழையும்  வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டு 1934-35 இல் மலேரியா நோய் பரவ ஆரம்பித்தபோது. என்.எம்., டாக்டர் விக்கிரமசிங்க என்போர் தலைமையிலான சூரியமல் இயக்கத்தினர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு கிராமம் கிராமமாகச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மற்றும் அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களையும் விநியோகித்தனர். இதனால் என்.எம்.மை கிராமப்பற மக்கள் 'பரிப்பு மஹத்தையா' என அழைத்தனர். இவ்வாறு சிறு இயக்கமாக ஆரம்பிக்கப்பட்ட சூரியமல் இயக்கம் 1935ஆம் ஆண்டு சமசமாஜக் கட்சியாக உருவெடுத்து. இதன் முதல் தலைவராக என்.எம். பெரேராவே நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் இக்கட்சி ஆய்வறிவாளர்களின் கட்சி என அறியப்பட்டது. அந்த அளவுக்கு அறிவாளிகளால் நிரம்பி வழிந்தது இக்கட்சி.
இரண்டாம் உலகப் போர் வெடித்தவுடன், சமசமாஜக் கட்சி அதனை ஒரு ஏகாதிபத்திய போர் எனக் கூறி நிராகரித்தது. 1940 ஜனவரியில் முல்லோயா தோட்டத்தில் ஒரு மாபெரும் வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்தார். இந்த சம்பவத்தில் கோவிந்தன் என்ற தொழிலாளி பொலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியானார். தோட்ட முதலாளிகளின் எதிர்ப்பு, யுத்த முயற்சிகளுக்கு எதிரான நடவடிக்கை போன்ற காரணங்களுக்காக என்.எம். பெரேராவும் மேலும் மூன்று சகாக்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஏப்ரல் 5, 1942 அன்று அவர்கள் சிறையிலிருந்து தப்பி இந்தியா சென்று தலைமறைவாகினர். ஜூலை 1943 இல் பம்பாயில் கைது செய்யப்பட்ட அவர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர்.

1936இல் என்.எம். அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட பின்புதான் தொழிலாளிகளினதும் ஏழை எளியவர்களினதும் குரல் அங்கு ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. 1947 முதல் 1977 வரை நடைபெற்ற தேர்தல்களில் என்.எம். ருவன்வெல்ல தொகுதியில் போட்டியிட்டு வெற்றியீட்டினார். 1949 முதல் 1959 வரை எதிர்க் கட்சித் தலைவராகவும் 1954 முதல்1956 வரை கொழும்பு மேயராகவும் பணியாற்றினார்.  1964ஆம் ஆண்டு இலங்கை பெரும் பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கியிருந்த வேளையில் என்.எம். நிதி அமைச்சராகப் பொறுப்பேற்று அந்த நிலைமையைத் திறமையாகக் கையாண்டு நாட்டை மீட்டெடுத்தார். பின்னர் 1970–1975 காலப்பகுதியிலும் அவர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அரசாங்கத்தில் இடதுசாரிகளின் கை ஓங்குவதை சகிக்காத சில வலதுசாரி சக்திகள் அரசாங்கத்திற்குள்ளேயே இருந்து இவரது முற்போக்குத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடத் தொடங்கினர். 1975இல் என்.எம். பெரேராவினதும் அவரது சகாக்களினதும் வெளியேற்றத்தோடு முடிவுற்ற அந்த நாடகம் அரசாங்கத்தின் வீழ்ச்சியையும் எதிர்வு கூறியது. தொடர்ந்து வந்த தேர்தலில் அரசாங்கம் படுதோல்வி அடைந்ததோடு முதன்முறையாக என்.எம்மும் தனது ஆசனத்தை இழந்தார்.

அதன் பின் அவரது கவனம் மீண்டும் கிரிக்கட் மீது திரும்பியது. NCC  கிரிக்கட் கழகத்தின் ஆயுற்கால உறுப்பினராக இருந்த என்.எம். 1977 முதல் 1978வரை கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் தலைவராக இருந்து இலங்கை கிரிக்கட்டுக்கு உலக அந்தஸ்தை பெற்றெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

என்.எம். பற்றி பலரும் அறியாத ஒரு விடயம்தான், 1925இல் இலங்கையில் முதன்முதலாகத் தயாரிக்கப்பட்ட 'ராஜகீய விக்ரமய' என்ற திரைப்படத்தில் பிரதான பாகமேற்று அவர் நடித்தமையாகும். துரதிஷ்டவசமாக இப்படம் இலங்கையில் திரையிடப்படுமுன் அப்படச் சுருள்கள் தீக்கிரையாயின. ஆனால் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் அப்படம் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் போலவே அவரது 'தங்க மூளை'யையும் வெளி நாடுகள் பயன்படுத்திக்கொண்ட அளவு இந்த நாடு சரிவரப் பயன்படுத்திக் கொள்வில்லை என்பது எமது துரதிஷ்டமே.

அவரது பாராளுமன்ற உரைகள் பொருள் செறிந்தவையாகவும் எதிர்கால விளைவுகளை முன்கூட்டியே அறிவிப்பவையாகவும் அமைந்திருந்தன. 1948 குடியுரிமை மசோதா, சிங்களம் மட்டும் மசோதா, 1978இல் ஜே.ஆர் ஜெயவர்தனவின் புதிய அரசியல் யாப்பு போன்றவை தொடர்பான அவரது பாராளுமன்ற உரைகள் அதற்கு சிறந்த சான்றாகும்.

என்.எம். தற்போதைய அரசியல்வாதிகளைப்போல குறுக்கு வழியில் அரசியல் லாபம் தேட முற்பட்படவில்லை. 1979 ஆகஸ்ட் 14ஆம் திகதி அவர் இறக்கும் வரையில் பாராளுமன்ற சம்பிரதாயங்களை மதித்து நடந்த ஒரு கண்ணியமான ஒரு அரசியல்வாதியாகவே இலங்கை வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment