Friday, June 19, 2020




வெளிநாடு செல்லாத ஒரு அரசியல்வாதி!

ஆக்கம்: முஹம்மத் றஸீன்

காலி மாவட்டத்தில் இரட்டையர்களில் மூத்தவராக பிறந்த விஜயானந்த தஹநாயக்க அவர்களின் வாழ்க்கை மிகவும் சுவாரிஷ்யம் நிறைந்தது. காலி ரிச்மன்ட் கல்லூரியிலும், கல்கிஸ்ஸ சென். தோமஸ்; கல்லூரியிலும் கல்வி பயின்ற அவர் காலி சென் அலோசியஸ் கல்லூரி, கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கில இலக்கிய ஆசிரியராகப் பணியாற்றினார். அவரது ஆங்கில இலக்கியப் புலமை பிற்காலத்தில் அவரது பாராளுமன்ற உரைகளிலும் பிரதிபலித்தது. 1947இல் முதலாவது பட்ஜட் விவாதத்தின்போது பதிமூன்றரை நேரம் பேசி ஒரு சாதனை படைத்தார். இவர் பற்றிய இன்னொரு வியக்கத்தக்க விடயம் என்னவென்றால் அவர் இலங்கைக்கு அப்பால் எந்த ஒரு வெளிநாட்டுக்கும் சென்றது கிடையாது என்பதே. ஒருமுறை 'நீங்களும் வெளிநாடு சென்று வரலாமே அது உள்ளத்தைப் பண்படுத்துகிறது' என ஒரு நண்பர் தஹநாயக்க அவர்களிடம் கூற, அதற்கு அவர், 'சோக்கிதீஸ் ஏதன்ஸை விட்டு வெளியேறியதே கிடையாதே' என்று பதிலளித்தார்.


1939இல் காலி மாநகரசபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு அதன் முதல்வராகவும் பணியாற்றினார். 1944ஆம் ஆண்டில் பிபிலை தொகுதியில் முதன் முதலாகப் போட்டியிட்டு அரசாங்க சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப் பட்டார். தீவிர இடதுசாரியாக விளங்கிய  தஹநாயக்க 1947இல் காலி தேர்தல் தொகுதியில் போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி வேட்பாளராக, பெரும் செல்வந்தரான தோமஸ் அமரசூரிய என்பவரோடு மோதினார். தேர்தல் மேடைகளில் அவர் தமது வாக்காளர்களிடம்  'நான் ஒரு பணங்காய்க்கும் மரமொன்றில் ஏறியுள்ளேன். அதைக் குலுக்கும்போது விழும் பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அதற்கு பிரதியுபகாரமாக உங்கள் வாக்குகளை மட்டும் எனக்குத் தாருங்கள்' என்றார். அதன்படி அவர் ஒரு சதமும் செலவில்லாமல் அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். 1952 தேர்தலில் மீண்டும் சமசமாஜக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1956 தேர்தலில் பண்டாரநாயக்கா தலைமையிலான மஹஜன எக்ஸத் பெரமுன (மக்கள் ஐக்கிய முன்னணி) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 1956 முதல் 1959 வரை கல்வி அமைச்சராகப் பணியாற்றினார். அவர் கல்விக்காக பல சேவைகள் ஆற்றியிருந்த போதிலும் அவர் ஏழை மாணவர்களுக்கு மதிய உணவாக பனிஸை அறிமுகப்படுத்தியதால் 'பனிஸ் மாமா' என்று அன்பாக அழைக்கப்பட்டார். அவரே வித்தியோதய, வித்தியாலங்கார பிரிவெனாக்களை பல்கலைக்கழக அந்தஸ்துக்கு உயர்த்தினார்.
செப்டம்பர் 1959 இன் பிற்பகுதியில் .நா பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக பண்டாரநாயக்க நியூயார்க் செல்ல திட்டமிடப்பட்டிருந்ததால் சபை முதல்வர் சி.பி.டீ. சில்வா இல்லாத நிலையில், தஹநாயக்கவை பதில் பிரதமராக நியமிக்குமாறு பரிந்துரைத்து ஆளுநர் நாயகத்திற்கு பண்டாரநாயக்க ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். செப்டம்பர் 26, 1959 அன்று பண்டாரநாயக்க எதிர்பாராத விதமாக படுகொலை செய்யப்படவே, அந்தக் கடிதத்தின்படி இலங்கை ஆளுநர் நாயகம் சேர் ஒலிவர் குணதிலக்க, தஹநாயக்கவைப் பிரதமராக நியமித்தார். அவர் பிரதமராக இருந்த காலம் சர்ச்சைகளும் சதி முயற்சிகளும் நிரம்பிய காலமாக இருந்தது. பண்டாரநாயக்க படுகொலைக்கு முன்பே, மக்கள் ஐக்கிய முன்னணி கூட்டணி கட்சிகளிடையே சச்சரவு ஏற்பட்டிருந்தது. தஹாநாயக்கவின் கீழ் நிலைமை மேலும் மோசமடைந்தது. இந்நிலையில் தஹநாயக்க தனது அமைச்சரவையை கலைத்து, புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்து டிசம்பர் 4, 1959 அன்று நாடாளுமன்றத்தை கலைக்குமாறு கோரினார். பின்னர் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமைச்சரவையுடன் இடைக்கால அரசாங்கத்தை நிறுவினார்.

தஹநாயக்க அவர்கள் இறுதிவரை ஒரு எளிமையான மனிதராகவே வாழ்ந்தார்.  ரயிலிலும் பஸ்ஸிலுமே அவர் காலியிலிருந்து பாராளுமன்றத்திற்கு பிரயாணம் செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். பிரதமராக நியமிக்கப்பட்டபோது, சிராவஸ்தியில் தனது அறையிலிருந்து தனது உடமைகள் அடங்கிய பழைய சூட்கேஸ் ஒன்றை சுமந்தவண்ணம் அலரி மாளிகை வந்தடைந்தார். அங்கிருந்த அறைகள் யாவும் அளவில் மிகப் பெரிதாக இருந்ததால் ஒரு சிறிய அறையொன்றை ஏற்பாடு செய்து அதிலேயே வாழ்ந்தார். அவர் பெரும்பாலான தமது உத்தியோக பூர்வ கடிதங்களைக்கூட தனது கைப்பட சொந்தக் கையெழுத்திலேயே எழுதும் வழக்கத்தைக்கொண்டிருந்தார். அதற்கென அவர் ஊதாநிற மையினாலான ஒரு பேனையை வைத்திருந்தார். தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து அவர் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தபோது, உத்தியோக பூர்வ வாகனத்தை உபயோகிக்க உரிமை இருந்தபோதிலும் அவர் தனது தனிப்பட்ட உடமைகளான அதே சூட்கேஸை சுமந்த வண்ணம் அலரி மாளிகையைவிட்டு வெளியேறி காலிக்குப் புறப்பட்டார்.

பின்னர்; லங்கா பிரஜாதந்திரவாத பக்ஷய (இலங்கை ஜனநாயகக் கட்சி) என்ற ஒரு புதிய கட்சியை உருவாக்கி 1960 பொதுத் தேர்தலில்; போட்டியிட்டார். அவரும் அவரது கட்சியும் படுதோல்வியை சந்தித்தாலும் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரே நாளில் தோர்தலை நடத்தி முடித்த பெருமையை அவர் பெற்றர். அதே ஆண்டு ஜூலை பொதுத் தேர்தலில் அதே கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த ஆண்டு அவருக்கு வித்யோதய பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது. 1964 ஆம் ஆண்டில், தஹநாயக்க அவர்கள் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தின் ஜவுளி விலையேற்றத்தை எதிர்த்து கோவணத்துடன் பாராளுமன்றத்துக்குள்  நுழைய முயன்று தடுக்கப்பட்டார். இந்த சம்பவம் அன்றைய பத்திரிகைகளில் முக்கிய செய்தியாக வெளிவந்தது. இவ்வாறு 1989 வரை அரசாங்கக் கட்சியிலும் எதிர்க் கட்சியிலும் மாறிமாறி அமைச்சராகவும் சாதாரண உறுப்பினராகவும் தனது அரசியல் வாழ்வைத் தொடர்ந்தார்.

1989 பொதுத் தேர்தலில் தேசிய பட்டியல் மூலம் தஹநாயக்கவை நியமிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி அளித்த வாக்குறுதி மீறப்பட்டதால் அவரால் பாராளுமன்றத்தில் நுழைய முடியவில்லை. இதுவே அவரது அரசியல் வாழ்க்கையின் முடிவாகவும் அமைந்தது. அதன்பின் தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிய தஹநாயக்க அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிக்கொண்டிருந்த வேளையில் அது முற்றுப்பெறாமலே 1997இல் தனது 95வது வயதில் இவ்வுலக வாழ்வை நீத்தார்.



No comments:

Post a Comment